தொற்று நோயும் பிரச்சினைகளும் நீங்க இறைவன் அருள் புரிவானாக ! பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.



புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றும் ஏனைய இறை வணக்கங்களில் ஈடுபட்டும் இறுதியில் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் வேளையில், நமது நாட்டிலும் உலக நாடுகளிலும் வேகமாகப் பரவிவரும் கொவிட் வைரஸ் தொற்று நோயும் ஏனைய பிரச்சினைகளும் நீங்கி சகல மக்களும் நலமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஈகைத் திருநாள்- ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னரைப் போலல்லாது, தற்பொழுது கொவிட் வைரஸ் வெவ்வேறு விதமாகத் திரிபடைந்து, உருமாறி மூன்றாம் அலையாகத் தலைதூக்குகின்ற வேளையில் ,நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வருவதன் விளைவாக இலங்கையிலும் அநேக உலக நாடுகளிலும் மக்களின் இயல்பு வாழ்வும், இதர செயல்பாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டில் போன்றே இவ்வாண்டிலும் புனித ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் , மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும், பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டும் உள்ள நிலையில் ,பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய தேவையும் பெரிதும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இஸ்லாமிய நாடுகள் உட்பட, சில நாடுகளில் யுத்தம்,சித்திரவதை,பொருளாதாரத் தடை, பஞ்சம்,வறுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் விடிவுக்காகவும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் கவனம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.குறிப்பாக,கிழக்கு ஜெரூஸலம் ,மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் ஆக்கிரமிக்கப் பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் பொது மக்கள் மீது அராஜக இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென சமாதானத்தை நேசிக்கும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன், நமது நாட்டில் பலவிதமான சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்து வரும் சகல இன மக்களிடத்திலும் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்படுவதற்கும் ,நலமாக வாழ்வதற்கும், இங்கு தோன்றியுள்ள நெருக்கடிகள் நீங்கி, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவுவதற்கும் இந் நன்னாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போமாக.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :