முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம் முக்கிய கோரிக்கை !!நூருல் ஹுதா உமர்-
ல்முனையில் உள்ள மக்களின் பூர்விகம், கல்முனை வரலாறு, கல்முனையின் எல்லைகள், கல்முனை வாழ்மக்களின் வாழ்வாதாரம், கல்முனை வாழ் மக்களின் பாசப்பிணைப்பு என எதையும் அறியாமல் வெளிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் சிலரும் கல்முனையை பற்றி பிழையான சித்தரிப்புக்களை செய்துகொண்டு வருகிறார்கள். கடந்த காலத்தை போன்று ஸ்ரீ.மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும் மு.கா. எம்.பிக்களும், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களும் அ.இ.ம.கா. இரண்டாம் நிலை தலைவர்களும் இதுவிடயமாக ஒருமித்த குரலில் போராடி எமக்கான நியாயத்தை உறுதிப்படுத்த வேண்டும். என அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் டாக்டர் எஸ்.எம்.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கல்முனை கிளை, சுன்னத் வல் ஜமாஅத் என்பன இணைந்து இன்று (07) கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

அண்மைய சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை தொடர்பில் அது முஸ்லிங்களுக்கு சொந்தமானதாக கூறியிருந்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் தான் கிழக்கின் அதிக சுகாதாரத்துறை பணியாளர்கள் இருக்கிறார்கள். அதில் இருக்கும் எல்லோரும் முஸ்லிங்களல்ல. தமிழ், சிங்கள மக்களும் அதிகளவில் பணியாற்றுகிறார்கள். அதே போன்று தான் கடந்த கால யுத்தத்தின் கல்முனையில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்த போது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையும் அமைந்துள்ளது. அங்கு சிகிச்சை வழங்குவதில் தொடங்கி சிகிச்சை பெறுவது வரை மூவின மக்களும் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் மனதுக்கு நெருக்கமான வைத்தியசாலையாக அது அமைந்துள்ளது. இதே போன்றுதான் கல்முனை உப பிரதேச செயலக விவகாரமும்.

கல்முனையில் உள்ள மக்களின் பூர்விகம், கல்முனை வரலாறு, கல்முனையின் எல்லைகள், கல்முனை வாழ்மக்களின் வாழ்வாதாரம், கல்முனை வாழ் மக்களின் பாசப்பிணைப்பு என எதையும் அறியாமல் வெளிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் சிலரும் கல்முனையை பற்றி பிழையான சித்தரிப்புக்களை செய்துகொண்டு வருகிறார்கள். இவர்களின் இனவாத, பிரதேசவாத கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களின் தமிழ்- முஸ்லிம் உறவுகளை சீரழித்து குளிர்காய எடுக்கப்படும் அரசியல்முன்னெடுப்புக்களை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.

கல்முனை விடயம் சார்பாக தமிழ் கட்சிகளின் வடக்கு, கிழக்கு பிராந்திய மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து ஒருமித்தகுரலில் அரசிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் இன்னும் சிலரையும் தவிர முஸ்லிம் சமூகத்தை அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் யாரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து இது விடயமாக குரல்கொடுக்க முன்வராமை அவர்களின் பக்கம் நியாயம் இருப்பது போன்ற மாயையை உருவாக்கியுள்ளது. கடந்த காலத்தை போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களும், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டாம் நிலை தலைவர்களும் இதுவிடயமாக ஒருமித்த குரலில் போராடி எமக்கான நியாயத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

கல்முனையின் வரலாற்றையும், கல்முனையில் உள்ள சிக்கல்கள், முரண்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித போதிய அறிவையும் கொண்டிராமல் முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுவோரும், செய்திகளை வெளியிடுவோரும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். தமிழ் எம்.பிக்கள் அவர்கள் சார்ந்து கருத்துக்களை வெளியிடும் போது அதற்கு ஒத்திசைந்து கருத்து வெளியிட்டு சமூகத்தை பலியிட முன்வரகூடாது. வெளிமாவட்ட இளைஞர்களும், கல்முனை பிராந்திய பிரச்சினைகளை அறியாத சிலரும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதன் மூலம் சமூகம் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிடும் என்பதை பொறுப்புடன் குறிவைக்கிறோம் என்றார்.

இந்த ஊடகசந்திப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கல்முனை கிளை செயலாளர் மௌலவி அஸ்ஸெக் யூ.எல்.எஸ். ஹமீட், அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் எம். அன்வர்தீன், உட்பட ஜமாத்துக்களின் முக்கிய பதவிநிலை அலுவலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :