நாளை 04-02-2021 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கை ஜனநாயக குடியரசின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
எமது தேசப்பற்றையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் நாம் அனைவரும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வோம். ஏனெனில் அரசு வேறு, அரசாங்கம் வேறு, அரசு என்பதும் அரசாங்கம் என்பதும் வெவ்வேறானவையாகும். அரசாங்கமானது காலத்திற்கு காலம் மாறக்கூடியதாகும். அரசு என்பது நிலையான இருப்பும் இறைமை கொண்டதுமாகும்.
இன, மத, கலாசார, மொழி வேறுபாடுகளைக் கடந்து, நாட்டுப் பிரஜைகளை ஒன்றிணைப்பது அரசாகும். இந்த அரசு என்பது அரசாங்கத்தில் நின்றும் வேறானது என்பதை நாங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இந்த நாட்டின் சுதந்திரம் என்பது குடியரசின் சுதந்திரமாகும். குடியரசின் சுதந்திரம் என்பது நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பிரஜையினதும் சுதந்திரம் என்பதை நாங்கள் உணர வேண்டும். அரசுக்கு மதிப்பளிப்பதும் கௌரவிப்பதும் நாட்டுப் பிரஜைகள் அனைவர் மீதும் கடமையான ஒன்றாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டதே தேசப்பற்றாகும். தேசியக் கொடியின் கீழ் ஒன்றிணைவதன் மூலமே இதனை வெளிப்படுத்த முடியும்.
இதன் ஊடாக நாட்டின் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் நாட்டின் சுதந்திரத்தையும் விடுதலையையும் அனைவரும் கொண்டாடுவோம்.
ஆகையினால் இந்த கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் வாழ்கின்ற அனைத்துப் பிரஜைகளும் தமது நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளிலும் தேசியக் கொடியை பறக்க விடுமாறு மிகவும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்- என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment