சவால்களை சுமந்த நவயுகத்தில் மனித நேயத்தின் அவசியம்னிதன் – இது வெறுமனே ஒரு வார்த்தைக்குள் அடங்காது. இறைவன் படைத்த படைப்புகளிலேயே மிக வலிமையானதும், மிக உன்னதமுமான ஒரு படைப்பாக திகழும் இவன், மனித நேயம் எனும் கிரீடத்தை சூடினாலே மான்புமிகு மனிதனாக மிளிர்கிறான்.

நாளுக்கு நாள் சவால்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்ற இந்நவயுகத்திலே, மனித நேயம் ஒரு புறம் அனாதையாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே யாவரும் உணரவேண்டிய ஓர் உண்மை. மனிதநேயம் என்றதும் நம் கண் முன்னே தோன்றுபவர்கள் அன்னைத் தெரேசா, நெல்சன் மண்டேலா மற்றும் ஆப்ரஹாம் லிங்கன் போன்ற மனித நேயத்தால் உலகையே வென்றெடுத்த மானிடர்கள் தான்.

இவர்கள் மட்டும் ஏன் ? என நாம் சிந்தித்துப் பார்த்தோமானால், தன் நலம் மறந்து பிறர் நலம் வேண்டி தன் வாழ்வு முழுவதையும் சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்துக் கொண்டதேயன்றி வேறொன்றுமில்லை. அவர்கள் அளவிற்கு கூட நாம் உயர வேண்டியதில்லை. உதவி தேவை என அன்றாடம் நம் கண் முன்னே தெரிபவர்களுக்கு கூட உதவுகிறோமா ? என நாம் வினவினால் , அது ஒரு கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.
வாழ்க்கைச் சக்கரம் சுழலும் வேகத்திற்கு தட்டுத் தடுமாறி ஈடுகொடுக்க முடியாத சவால்களை எதிர்நோக்கும் இச் சமூகத்திற்கு மனித நேயத்தின் தேவை ஓர் கட்டாயக் கடப்பாடாகவே காணப்படுகிறது என்றால் அது பொய்யாகாது. இன,மத,நிற வேறுபாடுகளை காரணம் காட்டி மனிதர்களையே மாய்க்கும் மாபாதகத்தையே செய்யத் துணிந்துவிடுகிறோம்.பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை ,சமூகத்தை வழி நடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் கூட சீரழித்து சின்னாபின்னமாக்கும் செயல்கள் நம் மனதை ஓர் ஆழ்ந்த வேதனைக்குள்ளேயே தள்ளிவிடுகிறது. அன்றாடம் இவ்வாறாக நாம் காணும் ஒவ்வொரு காட்சிகளும், கேட்கும் ஒவ்வொரு செய்திகளும் இதற்கு சான்று பகர்வனவாகவே அமைகின்றன.
நவயுகத்திலே நவீனங்கள் நிரம்பி வழியும் இந்த தலைமுறை மனிதன் தன் நவீனத்தை இழப்பது மட்டுமன்றி தான் மனிதன் என்பதையே மறந்து மிருகமாக மாறியுள்ள நிலையே காணப்படுகிறது. ஒரு இடத்தில் தவறு இருக்கின்றது என்றால் ஏதோ ஓர் இடத்தில் ஓர் குறை இருக்கின்றது என்றே அர்த்தம். உளவியல் ரீதியாக நாம் நோக்குவோமேயானால் ஒவ்வொரு மனிதனின் மனநிலையிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ‘SAIDISM’ அதாவது அடுத்தவரை துன்புறுத்தி இன்பம் கானும் ஒரு குணாதிசயம் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் காணப்படுகிறது. அச்சதவீதமானது அந்த ஒரு வரையறையை மீறும் போதே மனித நேயமற்ற இவ்வாறான செயற்பாடுகள் அதிகரிக்கின்றன என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

இது அதிகரிப்பதற்கான காரணம் தான் என்ன? அதனை எவ்வாறு நாம் நிவர்த்தி செய்யலாம் என சற்றே சிந்தித்துப் பார்த்தோமானால், விஞ்ஞான வளர்ச்சியால் நம் வலக்கையில் தொலைபேசியும் , இடக்கையில் லெப்டொப்புமாக நாமே நமது முழு வாழ்க்கையையும் அதற்குள்ளேயே அடக்கிவிடுகிறோம். மனிதன் என்பவன் பல உயிர்களின் தோட்டமான இவ்வுலகத்தின் ஓர் விலைமதிப்பற்ற பூ என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அம்மனிதனுக்கு ஓர் ஓய்வு , ஓர் விளையாட்டு , குடும்பத்துடனான உரையாடல், சமூகத்துடனான உறவு, சமூகத்தின் பால் அக்கறை என்பவை அனைத்தும் நிச்சயம் தேவை, நம்மோடு முடிந்து போகாத இவ் உலகை அடுத்த சந்ததிக்கும் பசுமையாக கையளிக்க வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உண்டு என்பதையும் நாம் உணர வேண்டும்.
சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு மனித நேயம் எனும் விதையை விதைக்க வேண்டும். பாடசாலைகளிலே புத்தகக்கல்வி மட்டுமன்றி சமூக ரீதியான கல்வியையும் கற்பிக்க வேண்டும், உளவியல் ஓர் கட்டாயக் கல்வியாக்கப்பட வேண்டும்,
உளவியல் ரீதியான வழிகாட்டல் நிகழ்ச்சிகள், மனித -மனித உறவுகளை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் என்பன பரவலாக நடத்தப்படல் வேண்டும், மனித உரிமைகள் மூலம் மனித நேயத்தை வலுப்படுத்துவதாக காணப்படும் சட்டங்கள் சாதாரண குடிமகன் முதல் உயர் அந்தஸ்த்தில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் தெளிவுபடுத்தப்படல் வேண்டும்.
அவ்வாறாக காணப்படும் சில சட்டங்களை இவ்விடத்தில் மேற்கோள்காட்டி குறிப்பிடுவதாக இருந்தால்

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடன சட்டத்தின் உறுப்புரைகளான ;

உறுப்புரை 1 : மனித பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனசாட்சியையும் இயற் பண்பாக பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வு பாங்கில் நடந்து கொள்ளல் வேண்டும்.

உறுப்புரை 5 : எவரும் சித்திரவதைக்கோ அல்லது கொடுமையான மனித தன்மையற்ற அல்லது இழிவான நடைமுறைக்கோ தண்டனைக்கோ உட்படுத்தலாகாது.

போன்றவைகளையும்,, மேலும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியோர் மீதான மனித நேயத்தை மேம்படுத்துவதாக அமையும் சிறுவர் உரிமைகள் மற்றும் சட்டம், பெண்கள் உரிமைகள் மற்றும் சட்டம் , முதியோர் உரிமைகள் மற்றும் சட்டம் அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பகுதி , பெண்கள் விவகார அமைச்சின் தேசிய பெண்கள் கமிட்டி என்பவற்றையும் குறிப்பிடலாம்

இவ்வாறு நாம் பட்டியல் போட்டுக்கொண்டே போனால் எழுதும் பேனாவும் தீர்ந்துவிடும் , கூறும் வார்த்தைகளும் முடிந்துவிடும் , முடிவில் ஓர் விடை கிடைத்ததா என்பதே கேள்வி?
முடியாது என எண்ணியிருந்தால் விண்முட்டும் அளவிற்கு விந்தைகள் வளர்ந்திருக்காது.
முடியும் என்ற மனதுடனும் , மாசுபடாத நேசத்துடனும் வாழ முயற்சிப்போமாக!

“நீங்கள் மனித நேயத்தின் மீதான நம்பிக்கையை
இழக்கக்கூடாது, மனித குலம் ஓர் கடல் போன்றது
கடலின் சில துளிகள் அழுக்காக இருந்தாலும்,
முழுக் கடலும் அழுக்காகாது.”

-மகாத்மா காந்தி-


குறிப்பு :
1) Humanistic psychology by Carl Rogers
2) மனிதாபிமான சட்டம் ஓர் அறிமுகம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்ட உதவி மன்றம்


"வழித்தடம்"- All University Muslim Student Association
H.N.F ASRA
UNIVERSITY OF COLOMBO
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :