வளர்முக நாடுகளும் கழிவு முகாமையும் ..

ற்போதைய நிலையுடன் ஒப்பிடும் போது புவியிலுள்ள ஏறத்தாழ அனைத்து நிலங்களும் நீர் நிலைகளும் நூற்றாண்டுகளிற்கு முன்னர் மிகக் குறைந்தளவிலேயே மாசடைந்திருந்தன. 

இதற்கான பிரதான காரணமாக குறைந்தளவு சனத்தொகை, மத்திய வாழ்க்கைத் தரம், சுய சுத்திகரிப்பு இடம்பெற்றமை, சூரிய வெளிச்சம், நுண்ணுயிர்கள், வனங்கள், மண் வளம் மற்றும் பரப்பு, மண்ணினூடாக வடிகட்டப்படல், ஏனைய இயற்கையான பொறிமுறைகள் அதிகமாக காணப்பட்டதோடு அவை சூழல் மாசுபடாதிருக்க பெரிதும் பங்காற்றின. ஆனால் தற்போதைய நிலை முற்றிலும் வேறுபட்டதாகும்.

 சனத்தொகை மிக அதிகமாக உள்ளதோடு, தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றது, நடப்படும் எண்ணிக்கையை விட அதிகளவான மரங்கள் தரிக்கப்பட்டு வருகின்றன. மண்ணரிப்பு அதிகரித்துள்ளது, அதிகளவான எரிபொருட்கள் எரிக்கப்படுவதனால் வெளி மண்டலத்தில் காபனீரொட்சைட்டின் செறிவு அதிகரித்துச் செல்கின்றது. இலகுவில் படியிறக்கமடையாது உயிரினங்களிற்கு தீங்கினை ஏற்படுத்தக் கூடிய புதிய பொருட்கள் பல உருவாக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக மாசடைவை ஏற்படுத்தக் கூடிய பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறன. இவற்றின் தாக்கத்தினால் வெளியாகும் கழிவுகளின் அளவும் சடுதியாக அதிகரித்துள்ளது. 

அதாவது
கழிவு என்பது அழிக்கப்பட்ட அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் அல்லது வடிவத்தில் இனித் தேவைப்படாததாக ஒதுக்கப்பட்ட ஏதேனும் பொருள், பதார்த்தம், அல்லது துணை உற்பத்திப் பொருள் என பொதுவாக வரை விளக்கணப்படுத்தலாம்ஆகவே ஒரு மூலப்பொருளாக பயன்படுத்த முடியாத அல்லது ஒரு பயன்பாட்டுப் பெறுமதி இல்லாத பொருளை சூழல் ரீதியாக சிறந்ததொரு முறையில் அகற்றுதல் அல்லது அதன் தன்மையை மாற்றியமைத்து மனிதனுக்கும் சூழலுக்கும் உகந்ததாக மாற்றுதல் என்பது கழிவு முகாமைத்துவம் என வரை விளக்கணப்படுத்தலாம். 

அந்த வகையில் கழிவுகளை பிரதானமாக 03 வகைப்படுத்தலாம்.
01. திண்மக்கழிவு
02. திரவக்கழிவு
03. வாயுக்கழிவு

திண்மக்கழிவுகள் என்பதற்குள் பிரதானமாக நகரத் திண்மக்கழிவுகள், கைத்தொழில் திண்மக்கழிவுகள், நிர்மாண மற்றும் நிர்மூல கழிவு, சுகாதார பராமரிப்பு கழிவு, மின்சார மற்றும் இலத்திரனியல் கழிவு, ரேடியோ கதிர் கழிவு, கடல் சார் திண்மக்கழிவுகள், உணவு விவசாய மற்றும் கால்நடை திண்மக்கழிவுகள் என்பன உள்ளடங்கும்.

திரவக்கழிவு என்பதற்குள் பிரதானமாக சாக்கடை கைத்தொழில் திரவக்கழிவு, இரசாயன கழிவு, லீச்சேட் மற்றும் சேவை நிலைய கழிவு நீர், பெற்றோலிய எச்சங்களுடனான கழிவு நீர், சுகாதார பராமரிப்பு கழிவு நீர், சமையலறை கழிவு நீர், தொழிற்சாலை கழிவு நீர் என்பன உள்ளடங்கும். வாயுக்கழிவு என்பதற்குள் கைத்தொழில், வாகன கழிவு, கழிவு எரிபொறிகள், காணி நிரப்பல்கள், septic tanks/ sewage treatment plants,திறந்த வெளி எரிப்பு (open burning), குப்பல் மற்றும் கடல்/ கடற்றொழில் கழிவு, தீங்கு விளைவிக்கும் சிற்றளவு கைத்தொழில்கள் என்பன பிரதானமாக அமைகின்றன.

கழிவு முகாமைத்துவத்தில் 4R முறை பிரபலமாக பல நாடுகளில் பயன்படுத்தப் படுகிறது. இவற்றின் நோக்கமானது பொருட்களில் இருந்து உச்ச பயனைப் பெறுவதும் கழிவுப்பொருள் உருவாகுதலைக் குறைத்தலும் ஆகும்.
* தவிர்த்தல்- Refuse
* குறைத்தல்- Reduce
* மீள் பயன்பாடு- Reuse
* மீள் சுழற்சி- Recycle 

இங்கு தவிர்த்தல் மற்றும் குறைத்தல் (Refuse & Reduce)
எனும்பொழுது கழிவுப்பொருள் உற்பத்தியாவதை தவிர்ப்பது, குறைப்பது போன்ற நுட்பங்கள் பயன்படும். அதாவது பயன்படுத்திய ஒரு பொருளை முடியுமான தடவை மீண்டும் பயன்படுத்துதல். புதிதாக வாங்காமல் உடைந்த பொருட்களை சரிசெய்து மீண்டும் பயன்படுத்துவது, மீண்டும் உபயோகிக்க கூடிய வகையில் பொருட்களை வடிவமைப்பது, உதாரணமாக பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பஞ்சினால், துணியினால் செய்த பைகளை பயன் படுத்துவது, ஒரு முறை மாத்திரமே பயன்படுத்திவிட்டு அகற்றப்படும் பொருட்களை தவிர்ப்பது,( one day cup).ஒரே வகையான தேவைகளுக்கு தனித்தனி பொருட்கள் பயன்படுத்துவதைக் குறைத்தல். போன்ற உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. 

மீள்பயன்பாடு (Reuse) என்பது குறிப்பிட்ட ஒரு பொருள் கழிவாக இனங்காணப்பட்ட பின்னர் அதனை சுழலிற்கு உகந்ததாக மாற்றியமைத்து பயன்படுத்துதலைக் குறிக்கும். 

சில கழிவுப்பொருள்களைக் கொண்டு எரிபொருள் உற்பத்தி செய்தல், கழிவுகளை கொதிகலன்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தி நீராவி மற்றும் விசைச்சுழலி (turbine) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தல், மேலும் ஒரு திடமான கழிவுப்பொருளை வெப்பச்சிதவு செய்யும்போது, கிடைக்கும் பொருட்கள் திடப்பொருள், திரவப்பொருள் மற்றும் வாயுப்பொருளாக மாறிவிடுகிறது. திரவ மற்றும் வாயுப்பொருட்களை எரித்து சக்தி உற்பத்தி செய்யலாம் அல்லது இதர பொருட்களாக மாற்றலாம். 

திடமான எச்சம் (கரி) மீண்டும் பலவிதமான பொருட்களாக மாற்றியமைக்கப் படுகின்றது. உதாரணமாக ஊக்குவிக்கப்பட்ட கார்பன் (activated carbon). மேம்படுத்திய வளிமயமாக்கல் மூலமாக கரிமப்பொருட்கள், நேராக ஒரு செயற்கைவளி கார்பன் மோனாக்சைடு மற்றும் ஐதரசன் கொண்டவையாக மாற்ற பயன்படுத்தப்படுவதுடன் இந்த வளியை எரித்து மின்சாரம் மற்றும் நீராவி உற்பத்தியும் செய்யப்படுகிறது.

மீள் சுழற்சி( Recycle) எனும்போது
பிவிசி (PVC), எல்டிபிஈ (LDPE), பிபி (PP), மற்றும் பிஎஸ் (PS) போன்ற பிளாஸ்டிக் குழாய்கள் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறன. இப்பொருட்கள் யாவும் ஒரே வகையான உட்பொருளை பொதுவாக கொண்டுள்ளன, அதனால் அவற்றை கொண்டு புதியதான பொருட்களை எளிதாக செய்யலாம். பொலித்தீன்,பிளாஸ்டிக், காகிதம், துணி, போன்றவற்றினால் ஆன பொருட்கள் பிரதானமாக மீள் சுழற்சியிற்கு பயன்படுத்தப்படுகிறன. 

மேலும்
செடிகளின் இலை தழை , (plant material), உணவுப்பொருள், காகிதப்பொருட்கள் போன்ற இயற்கையாகவே கரிமப்பொருளாக (organic) இருக்கும் கழிவுப்பொருள்கள், உயிரியல் ரீதியில் மக்குதல் (biological composting) மற்றும் செரித்தல் (digestion) போன்ற முறைகளை பயன்படுத்தி கரிமப்பொருளை மக்கி உருச்சிதைப்பதன் மூலம் (decompose) கிடைக்கும் கரிமப்பொருளை மீள் சுழற்சிசெய்து பத்திரக்கலவை (mulch) அல்லது கூட்டுரமாக (compost) பயன்படுத்தப்படுகிறன. மேலும் இந்த செய்முறை மூலம் மீதேன் வாயு (methane) உற்பத்தியாவதோடு அது மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

கழிவு முகாமைத்துவம் எனும்போது பல நாடுகளில்
கழிவுப்பொருட்களை ஒரு குப்பை நிரப்பு நிலத்தில் நிரப்புவது அதாவது கழிவுப்பொருட்களை புதைக்கும் முறை பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது . இதற்கு கைவிடப்பட்ட கற்சுரங்கக்கள், பாரிய குழிகள் போன்றன பயன்படுகிறன. பல நாடுகளில் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட குப்பை நிரப்பு நிலங்கள் பயன்படுத்தப்படுவதன் மூலம் பலவகையான சுற்றுச்சூழல் பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.

மேலும் கழிவுப்பொருட்களை எரித்து சாம்பல் மற்றும் வாயு மீதிகளாக அகற்றும் முறையும் பிரதான கழிவு முகாமைத்துவ முறையாக காணப்புகின்றது. அந்தவகையில் எரிசூளைகள் கழிவுப்பொருட்களை வெப்பம், வளி, நீராவி மற்றும் சாம்பலாக மாற்றுகிறது. இதனால் திண்மக் கழிவுப்பொருள் நிறையளவில் 20-30 சதவீதம் வரைக்கும் குறைவடைகின்றது. இத்தகைய சாம்பலாக்குதல் மற்றும் ஏனைய மிகை வெப்பத்தில் கழிவுப்பொருட்களை பரிகாரப்படுத்தும் முறைகளும் காணப்படுகின்றன. 

இது "வெப்பப்பரிகார முறை"என அழைக்கப்படும். இது
சில வகை இடர் விளையக்கூடிய கழிவுப்பொருட்களை அதாவது உயிரியல் மற்றும் மருத்துவ கழிவுப்பொருட்களை அகற்ற நடைமுறைக்கு ஒத்த அங்கீகாரம் பெற்ற அகற்றும் முறையாகும். சாம்பலாக்குதல் என்பது சர்ச்சைக்குரிய கழிவுப்பொருட்களை அகற்றும் முறையாகும்,
ஜப்பான் போன்ற நாடுகளில், நிலம் கிடைப்பது அரிதாக இருப்பதால், கழிவை சாம்பலாக்கும் முறையையே பொதுவாக பின்பற்றுகிறார்கள், ஏன் என்றால் இதற்காக குப்பைநிரப்பு நிலத்தைப்போல மிகையான இடவசதிகள் தேவை இல்லாததாகும்.

 மேலும்
ஆஸ்திரேலியாவில், கழிவுப்பொருட்களை சாலையோரத்தில் சேகரிக்கும் முறை பயன்படுத்தப் படுகிறது. ஒவ்வொரு நகர வீட்டு குடியிருப்பிற்கும் மூன்று மூடுதொட்டிகள் வழங்கப்படுகிறது: ஒன்று மீட்கப்படும் பொருட்களுக்காக, இன்னொன்று பொதுவான கழிவுப்பொருட்களுக்காக மற்றும் மூன்றாவது பூங்காவில் உற்பத்தியாகும் கழிவுகளுக்காக இத்தொட்டிகள் நகராட்சி மூலம் வழங்கப்படுகின்றது.

 மேலும், பல குடியிருப்புகளில் குப்பையுரத்திற்கான மூடுதொட்டியும் உண்டு மேலும் மீள் சுழற்சி முறையை ஊக்குவிப்பதற்காக, நகராட்சிகள் பெரிய மூடுதொட்டிகளை அளிக்கின்றன, அவை பொதுவான கழிவுப்பொருள் மூடுதொட்டிகளை விட பெரியதாகும். நகராட்சி சார்ந்த, வணிகவியல், தொழில் துறை மற்றும் கட்டிடப்பணிகள் மற்றும் தகர்த்தல் காரணம் உற்பத்தியாகும் கழிவுப்பொருட்கள் குப்பைநிரப்பு நிலப்பகுதியில் கொட்டப்படுகிறது மேலும் அவற்றில் சில மீட்கப்படுகிறது. வீட்டுக்கழிவுப்பொருட்கள் பிரிக்கப்படுகிறது: 

மீட்கப்படுபவை பிரித்தெடுத்து புதிய பொருட்களாக மாற்றப்படுகிறது, மற்றும் பொதுவான கழிவுப்பொருட்கள் குப்பைநிரப்பு நிலப்பகுதியில் கொட்டப்படுகிறது. ஏ. பி. எஸ் (ABS) என்ற அமைப்பின்படி, மீட்கப்படும் பொருட்களின் விகிதம் மிகையாக உள்ளது மேலும் அது 'உயர்ந்து கொண்டே போகிறது, 99% குடியிருப்புகள், கடந்த ஆண்டில், அவர்களுடைய கழிவுப்பொருட்களை மீட்டுள்ளதாகவும், மீண்டும் பயன் படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்கள்,இது 2003 ல் மேற்கொள்ளப்பட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 1992 ஆண்டில் அது 85% ஆக இருந்தது'. இதிலிருந்து தெரியவருவது என்ன என்றால், ஆஸ்திரேலியர்கள் குறைந்த அளவு அல்லது குப்பைநிரப்பு நிலமுறையை ஆதரிக்கவில்லை என்றும் மற்றும் கழிவுப்பொருட்களை மீண்டும் மீட்கும் முறையை (மீள் சுழற்சியை) விரும்புகின்றனர் என்பது தெளிவாகிறது.

ஐரோப்பா மற்றும் சில இதர உலகநாடுகளில், என்வக் எனப்படும் தனியுடைமையுடைய சேகரிப்பு முறையினை கையாளுகின்றனர், அது ஒரு வெற்றிடத்தைக்கொண்டு நிலத்திற்கு அடியில் கொண்டு சென்ற குழாய்கள் மூலமாக குப்பையை உறிஞ்சி வெளியேற்றி விடுகிறது. மேலும் கனடாவில் உள்ள நகர மையங்களில் சாலையோர குப்பை சேகரிப்பு மிகவும் பொதுவான கழிவுப்பொருட்களை அகற்றும் முறையாகும், அதன்படி அந்நகரத்தில் கழிவுப்பொருட்கள் மற்றும் / அல்லது மறு பயனீடு செய்யும் பொருட்கள் மற்றும் / அல்லது கரிமப்பொருட்களை பட்டியலிட்டபடி சேகரிக்கவேண்டும். அதுபோல
தாய்பெய் யில் உள்ள நகராட்சி அந்நகரிலுள்ள வீடுகள் மற்றும் தொழில்கூடங்கள், அவர்கள் உருவாக்கும் கழிவின் கன அளவைப்பொறுத்து அரசிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். 

இதற்காக அரசு நல்கியுள்ள கழிவுப்பொருட்க்ளுக்கான பையில் கழிவுப்பொருட்களை சேகரித்து அதை மட்டுமே நகர மன்றம் ஏற்றுக்கொள்ளும். இந்தக் கொள்கையால் நகரத்தில் உருவாகும் கழிவுப்பொருள்களின் அளவை வெற்றிகரமாக, கணிசமாக குறைத்துள்ளது மேலும் மீள் சுழற்சியின் விகிதமும் அதிகரித்துள்ளது.

அந்தவகையில் சூழல் மாசுக்களிலிருந்து பாதுகாப்பதற்கு கடுமையான தர நியமங்களை இலங்கையும் 1980 ம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் ஒரு தொகுதி ஒழுங்கு விதிகளைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இது 1990 ம் ஆண்டின் 1ம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் என அழைக்கப்படுகின்றது. இவை 1990 பெப்ரவரி 02 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் உள்ளடக்கப் பட்டுள்ளது.

 உள்ளூர் நீர்நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றுவதற்கான பொதுவான நியமங்களை வலியுறுத்துவதுடன் இதனைத் தவிர இறப்பர் , கைத்தொழில் , தோல் தொழிற்சாலைகள் என்பனவற்றிலிருந்து வெளியேறும் திரவக் கழிவுகள் சம்பந்தமான நியமங்கள் மேற்குறிப்பிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்கு விதிகளில் தரப்பட்டுள்ளன. இந்த நியமங்களில் பொசுபரசு சேர்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

உதாரணமாக எண்ணெய், கிரீஸ் (mg/l) - தாங்கிக்கொள்ள கூடிய எல்லை 10.0
மேலும் அதில் திண்மக் கழிவுகளைப் பெறும் துப்பரவான நீரானது அக்கழிவுகளை அதன் கனவளவில் ஆகக் குறைந்தது 8 மடங்கு ஐதாக்குகின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டே நீரானது தாங்கிக்கொள்ளக் கூடிய கழிவுப் பெறுமானங்களின் கூடிய எல்லை கணிக்கப்பட்டுள்ளன. ஐதாக்குவது எட்டு மடங்கை விட குறைவாக இருக்குமாயின் , அனுமதிக்கப்பட்ட எல்லைகளை உண்மையான செறிவுடன் 1/8 மடங்கு பெருக்குதல் வேண்டும் .

மேலும் ஐக்கிய நாடுகளிற்கான சர்வதேச கடல் நிறுவனம் தூய்மையான கடலை பேணிப் பராமரிப்பதற்கு வசதியாக 1989 ஜுன் 1ஆம் திகதி முதல் அமுலிற்கு வரும் வகையில் கப்பல்களினால் கடலில் வீசப்படும் கழிவுகள் தொடர்பாக கடும் நிபந்தனைகளைக் கொண்ட பின்வரும் சர்வதேச விதிமுறைகளை விதித்துள்ளது.
(அ). நிலத்தில் இருந்து 5km தூரம் வரையில் எவ்வகையான கழிவுப்பொருட்களையும் வீசக்கூடாது.

(ஆ).எந்தவொரு இடத்திலும் பிளாஸ்டிக் போன்ற இலகுவில் பிரிந்தழியாத பொருட்களை வீசக்கூடாது.

(இ).ஏனைய கழிவுகளை அதன் தன்மைக்கேற்ப பல தூரங்களில் வீசலாம். உதாரணமாக சில கழிவுகளை நிலத்திலிருந்து 40km ற்கு அப்பாலேயே வீச வேண்டும்.
பல நாடுகளில்
மேலும் ஆபத்தான கழிவாக கருதப்படும்
ஈ-கழிவின் தீங்கிளைக்கும் தன்மையைக் கவனத்தில் கொண்டு ஈ-கழிவு முகாமைத்துவம் ஒருங்கிணைந்த தின்மக் கழிவு முகாமைத்துவத்தின் அங்கமாக கருதப்படுகிறது. 

ஈ-உற்பத்திப் பொருட்களின் துர்முகாமைத்துவத்தில் சூழல் பாதிப்புகளை ஒருங்கிணைந்த இலத்திரனியல் அறிவை ஊக்குவிப்பதற்கான தொகை மற்றும் பண்புரீதியான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதன. 

குறுகியகால, நடுத்தரகால,மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட விசேட இலக்குகளை நோக்கமாகக் கொண்டு அனைத்து கழிவுத் துறைகள் மற்றும் பிரிவுகளை உள்ளடக்கி விருத்தி செய்யப்பட்டுள்ள கொள்கைகளின் பயனுறுதிமிக்கதும் வினைத்திறன் மிக்கதுமான அமுலாக்கத்திற்கு
வசதியேற்படுத்துவதற்கான மூலோபாயங்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளதோடு, பல வளர்ச்சியடைந்த நாடுகளில் நடைமுறைப் படுத்தப் படுகின்றன.

கழிவு முகாமைத்துவத்தில் புதிய தொழில்நுட்பங்களான RFID, GPS போன்றன பயன்படுத்தப்படுகிறன இவை நல்ல தரமான தரவுகளை பெற உதவுகிறன. அதாவது RIFD என்பது இணைப்புப்புரிவது இது சாலையோரங்களில் கழிவுகளை வழங்கும் விதத்தை அறிந்துகொள்ள உதவுவதோடு மீள் சுழற்சி பற்றிய தரவகளையும் பெற உதவுகிறது. GPS என்பது சுவடுபற்றிச் செல்லல் ஆகும். அதாவது இது பிரதானமாக கழிவுப் பொருட்களை சேகரிக்கும் முறையை கணிக்க பயன்படுகிறது. 

ஆகவே கழிவு முகாமைத்துவம் பற்றி ஒவ்வொரு தனி மனிதனும் சிந்தித்து உரிய சுகாதார முறையில் கழிவுகளை அகற்றுவதன் முலம் சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது சுகாதாரமான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வோம்.

'வழித்தடம்'- அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம்
ஜாஸிரா ஜுனைதீன்
கொழும்பு பல்கலைக்கழகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :