கல்குடாத்தொகுதியின் அடுத்த தேவநாயகம்! பிள்ளையான்?

எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி-

ற்போது நாட்டில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக அதிகம் பேசப்படுவதைக் காணலாம். அதிலும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென்று ஜனாதிபதி தொடக்கம் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை கருத்துக்களைக் கூறுவதை அவதானிக்கலாம்.

தொகுதி மக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையிலான தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம் முறை தொடர்பாகவே இங்கு அதிக கவனஞ் செலுத்தப்படுகிறது.

1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பிற்கு முதல் தொகுதிவாரித்தேர்தல் முறை இலங்கையில் காணப்பட்டது. 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 2ம் ஜனநாயக சோசலிச குடியரசு யாப்பில் விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்று மீண்டும் விகிதாசாரத்தேர்தல் முறைக்கு விடை கொடுத்து பழைய தேர்தல் முறை தொடர்பாக கவனஞ் செலுத்தப்படுவதைப் பார்க்கலாம். அவ்வாறு தொகுதிவாரித்தேர்தல் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டால் கல்குடாத்தொகுதியில் யார் செல்வாக்குச் செலுத்தக்கூடியதாகவிருக்கும்?

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாத் தொகுதியில் பல அரசியல்வாதிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டவர்களாக தமிழ் சகோதரர்கள் காணப்படுகிறார்கள். தொகுதிவாரித்தேர்தல் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டால், தமிழர் ஒருவரே பாராளுமன்றப் பிரதிநிதியாகத்தெரிவு செய்யப்படும் வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1989 ஆம் ஆண்டு வரை தொகுதிவாரித்தேர்தல் முறையினூடாக கல்குடாத் தொகுதியில் வி.நல்லையா, ஏ.எச்.மாக்கான் மாக்கார், பொ.மாணிக்கவாசகர், கே.டபிள்யூ.தேவநாயகம் போன்றவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். தொகுதிவாரித்தேர்தல் முறையில் கல்குடாத்தொகுதியின் இறுதி பிரதிநிதியாக 1989 ஆம் ஆண்டு வரை கே.டபிள்யூ.தேவநாயகம் காணப்பட்டார்.

கல்குடாத்தொகுதியில் பெரும்பான்மைச் சமூகமாக தமிழர் காணப்பட்டாலும், தொகுதிவாரித்தேர்தல் முறையில் தேவநாயகம் ஐயாவின் வெற்றியை பலத்த போட்டிக்கு மத்தியில் உறுதிப்படுத்தும் பிரதேசங்களாக வாழைச்சேனை முஸ்லிம் பிரதேசம், ஓட்டமாவடி, மீராவோடை போன்ற முஸ்லிம் பிரதேசங்களே காணப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தொடக்கம் 1989 ஆம் ஆண்டு வரை முஸ்லிம் மக்களின் ஆதரவோடு பாராளுமன்றம் சென்றார்.

தேவநாயகம் ஐயாவின் காலத்தில் இன,மத வேறுபாடுகளின்றி பல்வேறு சேவைகளை கல்குடாத்தொகுதியில் முன்னெடுத்திருந்தார். முஸ்லிம் பிரதேசங்களில் வீட்டுத்திட்டம், புதிய பாடசாலை உருவாக்கம், பாடசாலைகளுக்கான கட்டடங்கள் அமைத்துக் கொடுத்தல், மாஞ்சோலை கிராம உருவாக்கம், மாஞ்சோலை வைத்தியசாலை உருவாக்கம், (மாஞ்சோலை கிரம உருவாக்கம், வைத்தியசாலை உருவாக்கம் போன்றவைகளில் முன்னின்று செயற்பட்டவர்களுள் மாதர் சங்கத்தலைவி ஜோரா பீவீ நினைவுகூறத்தக்கவர்) 

அரச வேலைவாய்ப்புகள் போன்றவைகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் காரணமாக முஸ்லிம் மக்களின் கணிசமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற முடிந்தது. ஐக்கிய தேசிய கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்து கல்குடாத்தொகுதியின் முதலாவது அமைச்சரவை அந்தஸ்துள்ள நீதியமைச்சராக,உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் கே.டபிள்யூ.தேவநாயகம் நியமிக்கப்பட்டிருந்தார்.

எனவே தான் மீண்டும் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை கொண்டு வரப்படுமாக இருந்தால், பெரும்பாலும் ஒரு தமிழ் சகோதரரே எம்.பியாகத் தெரிவு செய்யப்படும் வாய்ப்புக் காணப்படுகிறது. கல்குடாத் தொகுதியில் சுமார் 80 ஆயிரத்திற்குட்பட்ட தமிழ் வாக்குகளும், சுமார் 38 ஆயிரத்திற்குட்பட்டதாக முஸ்லிம் வாக்குகளும் காணப்படுகிறது. தொகுதிவாரித்தேர்தல் முறையில் வெற்றி பெறும் வாய்ப்பு தமிழ் வேட்பாளர் ஒருவருக்கே அதிகமுள்ளது.

தற்போது கல்குடாத்தொகுதியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக விகிதாசார முறையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

 இவர் கடந்த காலத்தில் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஜனநாயக வழியில் அரசியல் நீரோட்டத்திற்குள் தன்னை இணைத்துக் கொண்டவர். பிரிக்கப்பட்ட கிழக்கின் 2008 ஆம் ஆண்டு முதலாவது மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு, கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு தனது முதலமைச்சர் பதவியூடாக பல்வேறுபட்ட சேவைகளை மக்களுக்கு குறித்த காலப்பகுதியில் வழங்கியிருக்கிறார். இவ்வாறு தொடரான அரசியல் பயணத்தின் போது, 2005 ஆம் ஆண்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிள்ளையான் இன்று வரை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறைச்சாலையில் இருந்தவாறு தேர்தலில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 54,198 விருப்ப வாக்குகளைப் பெற்று, மாவட்டத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் அதிகளவான விருப்பவாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

கல்குடாத்தொகுதியிலும் அதிகளவான வாக்குகளைப் பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெற்றுக்கொண்டது. இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகஸ்வரன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

தமிழ் தேசியக்கூட்டமை சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இருந்த போதிலும், சுமார் 20,622 வாக்குகளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பெற்றுக்கொண்டதும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 17,312 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டதற்கும் பிரதான காரணமாக கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தன்வசப்படுத்திக் கொண்டமையாகும்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றும் அதிகளவான வாய்ப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு காணப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 6 ஆசனங்களையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பு கட்சி 6 ஆசனங்களையும் பெற்று சமநிலையில் இருந்தது. 

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் ஏனைய கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்று ஆட்சியமைக்க முயற்சித்தாலும் இறுதி சந்தர்ப்பம் வரை அதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது 3 ஆசனங்களைக் கொண்டு காணப்பட்டது. ஆரம்பத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் புரிந்துணர்வு காணப்பட்டது.

 முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை தேவைப்படும் இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க பெரும்பான்மை தேவைப்படும் இடங்களில் முஸ்லிம் காங்கிரஸும் ஆதரவு வழங்குவது என்று மேல் மட்டங்களில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு வாய்ப்புக்குறைவாக இருந்தது மாத்திரமின்றி, இவ்வாறான நிலையில் தாங்கள் ஆட்சியமைக்க முடியாதென்ற நிலமையை உணர்ந்திருந்தார்கள்.

கல்குடாத்தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் கணக்கறிஞர் எச்.எம்.முஹம்மது றியாழ் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடவடிக்கை, தேர்தலின் பின்னரான ஆட்சியமைக்கும் விடயங்களுக்கு பொறுப்பாக கட்சித்தலைவருடன் சேர்ந்து இயங்கி வந்தார்.

அந்த அடிப்படையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்குத் தேவையாக இருந்த உறுப்பினர்களுள் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச்சேர்ந்த ஒரு உறுப்பினரை தங்களுக்கு ஆதரவு வழங்குமாறும், அதற்குப்பதிலாக கோறளைப்பற்று பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க தங்களின் கட்சியின் மூன்று உறுப்பினர்களைத் தருவதாக சொல்லப்பட்டிருந்தது.

கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு இரு பிரதேச சபைகளுக்கும் ஒரே நாளில் தவிசாளர் தெரிவு நடைபெறவிருந்த சந்தர்ப்பத்தில், அதற்கு முதல் நாள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஆட்சியமைப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடன் றியாழ் கலந்துரையாடிய போது, ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு உடன்பாடுகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைபின் ஆதரவு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு மறுக்கப்பட்டு றிசாட் பதியுதீன் கட்சி சார்ந்தவர்கள் ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்கத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், கல்குடாத்தொகுதிக்கு சீ. யோகேஸ்வரன் எம்.பி.தான் பொறுப்பு எனக்கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அதிரடியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் முஹம்மது றியாழ் மேற்கொண்ட முயற்சியினூடாக இறுதி நேரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். 

இப்பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கௌரவ தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் இறுதி நேரத்தில் இணைந்து கொண்டார். பல தடவைகள் சீ.யோகேஸ்வரனுடன் பேச முயற்சித்தும், அவர் அதற்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்காது தவிர்ந்து கொள்ளவே இறுதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கோறளைப்பற்றில் ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தை முஹம்மது றியாழின் வேண்டுகோளின் பேரில் தலைவர் ரவூப் ஹக்கீமால் வழங்கப்பட்டது.

 பல விமர்சனங்களுக்கு மத்தியில் முஹம்மது றியாழ் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் ஆரம்பத்தோடு, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கல்குடாவில் தங்களின் கட்சிக்கான மக்கள் ஆதரவை அதிகரித்துக் கொண்டது. இவ்வாறான சந்தர்ப்பங்களினூடாக தொகுதியை வெற்றி கொண்ட பிள்ளையான் அணியினர் எதிர்கால தேர்தல் தொகுதி முறையில் அமையுமாக இருந்தால், வெற்றி வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கும்.

எனவே, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது அரசியலை மட்டக்களப்பு வாழ் மூவினங்களையும் இணைத்துக் கொண்டு தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். 

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இன, மத வேறுபாடுகளுக்கப்பால் அபிவிருத்திகளை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பார் என்பதோடு, இனவாதத்திற்கெதிராகவும் தனது செயல்களூடாக மக்களை ஒற்றுமைப்படுத்துவதோடு, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்தும் போராடுவார் என எதிர்பார்க்கிறோம்.

கல்குடாத்தொகுதியில் தேவநாயகம் ஐயாவிற்கு பிறகு அமைச்சரவை அமைச்சராக பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்காலத்தில் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புடன், கல்குடாத்தொகுதியில் தமிழ், முஸ்லிம் உறவைப்பலப்படுத்தி எதிர்கால சந்ததிக்கு முன்னுதாரணமாக செயற்படுவார் என எதிர்பார்க்கிறோம். அத்தோடு, சிறந்த சேவையை தனக்கான தடைகளிலிருந்து விடுதலை பெற்று தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கும், மாவட்டத்திற்கும் செய்ய வேண்டும் என வாழ்த்துகிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :