ஒரு குடையின்கீழ் ஒன்றிணைய சாதகமான சமிக்ஞைகள்
அம்பாறை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழுதலைவர் கருத்து
காரைதீவு சகா-தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான தவராசா கலையரசனுடனான சந்திப்பு திருப்தியளிக்கிறதென அம்பாறை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் கண.வரதராஜன் தெரிவித்தார்.
அன்புக்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் உதயமான அம்பாறை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் தமிழ்தரப்பினர் அனைவரும் ஒரே சின்னத்தில் ஒரே குடையின்கீழ் போட்டியிட்டு 3பிரதிநிதித்துவங்களையும் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் அரசியல் கட்சி முக்கியஸ்தர்களைச் சந்தித்துவருகிறது.
அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனை குழுவினர் அவரது இல்லமுன்றலில் சந்தித்து இருமணிநேரம் கலந்துரையாடினர்.
1994 மற்றும் 2020 பொதுத்தேர்தல்களில் அம்பாறை மாவட்ட தமிழர் பிரநிதித்துவம் இழக்கப்பட்டதால் தமிழ்மக்கள் அநாதைகளாக்கப்பட்டனர். ஆனால் இம்முறை அதற்குப்பிரதியீடாக தேசியபட்டியலை மாவட்டத்திற்கு தந்தமைக்காக கட்சிக்கும் அதனூடாக வந்த எம்மவரான தங்களுக்கும் வாழ்த்துக்களைத் முதலில் தெரிவிக்கிறோம் என்று குழுவினர் முதலில் கூறினர்.
குழுவினர் தமது நோக்கங்களை எடுத்துக்கூறியபோது அதற்கு தாம் மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும் வரலாற்றில் முதற்தடவையாக புத்திஜீவிகள் குழுவொன்று தம்மைச்சந்தித்து இவ்வாறான நல்லவிடயத்தை முன்வைத்திருப்பதுகுறித்து பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
இம்முயற்சி வெற்றியளிக்கவேண்டும்.அதற்கு தன்னாலான பூரண ஆதரவைத்தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதுவரை கருணாஅம்மான் எஸ்.கஜேந்தின் எம்.பி. உள்ளிட்ட பலரையும் சந்தித்து எமது நோக்கத்தைக்கூறியபோது சாதகமான பதில்களை கூறியுள்ளனர். இன்னும் சிலரை சந்திக்கவிருக்கிறோம். அதன்பின்னர் ஒட்டுமொத்தமான தீர்மானத்தை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment