தகவலறியும் உரிமைச் சட்ட செயற்பாடுகளுக்கு ஆபத்து
கணக்காய்வு சேவை ஆணைக்குழு நீக்கப்பட்டமையானது பொதுச் செலவினங்கள் மீதான கண்காணிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகான அதிகாரங்கள் பலீனப்படுத்தப்படுகின்றது.
பொதுச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் தொடர்பாக செயற்படுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களில் மட்டுப்பாடு
தகவலுக்கான உரிமை
தகவல் அறியும் உரிமை அரசியலமைப்பிற்குள் மேன்மையானதாக இருக்கும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், முன்மொழியப்பட்டுள்ள 20ம் திருத்தமானது, தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக பொதுமக்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் வலியுறுத்த விரும்புகின்றது. ஆணைக்குழுவை நியமிக்கும் அதிகாரம் தகவலுக்கான உரிமைச் சட்டத்தினூடாக அரசியலமைப்புப் பேரவைக்கே வழங்கப்பட்டுள்ளது, எனினும் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தமானது அரசியலமைப்புப் பேரவையை நீக்கியுள்ளதோடு, பாராளுமன்றப் பேரவையின் வரையறுக்கப்பட்ட நோக்கு மற்றும் அதிகாரங்களோடு பரிந்துரைகளை வழங்க முடியாத நிலையானது தகவலுக்கான உரிமைச் சட்ட செயற்பாட்டை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகின்றது.
இது சம்பந்தமாக,TISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர குறிப்பிடுகையில் ‘2017 பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட தகவலுக்கான உரிமைச் சட்டத்தினூடாக நாடளாவிய ரீதியில் சமூகங்களும் தனிநபர்களும் அடைந்த நேர்மறையான மாற்றத்தின் விளைவுகளை நாம் கண்கூடாகவே கண்டோம். பிரஜைகளின் அடிப்படை உரிமையான தகவல் அறியும் உரிமை தொடர்ந்தும் நடைமுறையில் இருந்தாலும், தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது, குறிப்பாக அது எவ்வித உள்நோக்கின்றி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அது தகவல் அறியும் உரிமையை பாரதூரமாக பாதிக்கும்’ எனவும் தெரிவித்தார்.
ஊழல் தொடர்பான விசாரணை
முன்மொழியப்பட்டுள்ள 20 வது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பின் 156அ பிரிவை ரத்து செய்வது குறித்தும் TISL கவனத்தில் கொள்கிறது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் சட்டரீதியான அங்கீகாரத்தை பலவீனப்படுத்துவதோடு, 19 வது திருத்த சட்டத்தில் வழங்கப்பட்ட ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை மீது சுயமாக விசாரணைகளை ஆரம்பிக்கும் அதிகாரத்தை 156 அ பிரிவை நீக்குவதன் ஊடாக ரத்து செய்துள்ளது.
சட்டத்தை நிலைநாட்டும் அதிகார சபைகள் மக்கள் முறைப்பாடுகளை செய்யும் வரை, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு காத்திருப்பதானது, நீண்ட காலமாகவே மக்கள் மத்தியில் மனக்குறையாக உள்ளது. முறைப்பாடுகள் இல்லாமல் சுயமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான செயல்திறன் மிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரத்தை இல்லாமல் செய்வதானது ஊழலை எதிர்த்து போராடுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து மக்கள் மத்தியில் எதிர்மறையான செய்தியையே வழங்கியுள்ளது என்றும் அசோக்க ஒபேசேக்கர தெரிவித்தார்.
பொதுநிதி தொடர்பான கண்காணிப்பு
அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20 வது திருத்தம் ஊடாக அரசாங்கத்தின் பொதுச் செலவுகள் தொடர்பாக பிரதானமான மேற்பார்வை செய்யும் கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்முதல் ஆணைக்குழு என்பவற்றையும் நீக்கியுள்ளது. அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20 வது திருத்தம் ஊடாக கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு தொடர்பான ஏதாவதொரு விடயத்தை நீக்கினாலும் அந்த ஆணைக்குழுவின் சட்டம் இயல்பாகவே செயல் இழந்து விடும். அரசாங்கத்திற்கு ஏதேனும் இழப்பை ஏற்படுத்தும் பொது அதிகாரிகளிடமிருந்து இழப்புகளை மீட்டெடுக்கும் திறன் போன்ற குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் தேசிய கணக்காய்வு அணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவை நீக்குவதானது இப்படியான அத்தியவசிய அதிகாரங்கள் கூட செயல் இழந்து விட காரணமாகின்றது.
மேலும், தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் கட்டளைகள் ( விதிமுறைகள்) முழுமையாக செயல்படவில்லை என்றாலும் ஒரு வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டமைந்த கொள்முதல் கட்டமைப்பை உறுதி செய்வதற்கு இந்த ஆணைக்குழுவின் இருப்பு முக்கியமானது என்றும் கூறினார். தேசிய கொள்வனவு என்பது ஊழல் அதிகம் நிகழ்வதற்கு சாதகமான ஒரு செயற்பாடாகும்
ஊழலை ஒழிப்பதற்கும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன பரப்புரையில் தனது சொந்த உறுதிப்பாட்டின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில் அந்த உறுதிப்பாட்டை நிலைநாட்டுவதற்கு சுயாதீன தேசிய கொள்வனவு ஆணைக்குழுவின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளுமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் ”.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்
முன்மொழியப்பட்டுள்ள 20 திருத்தமானது, இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் (ECSL) அதிகாரங்களையும் மட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக தேர்தல் காலங்களில் பொதுச் சொத்துக்களின் துஷ்பிரயோகத்தை தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் இதனூடாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 20வது திருத்தமானது ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்ற விதிமுறைகளின் வரம்பையும் கட்டுப்படுத்துகின்றது, ‘பகிரங்க சேவை தொடர்பான ஏதேனும் விடயங்கள்’ தொடர்பான கட்டுப்பாடு மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்புகூறலானது எதிர்காலத்தில் தேர்தல்களின் நேர்மைத்தன்மை குறித்தும் கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது.
இறுதியாக, முன்மொழியப்பட்டுள்ள 20 திருத்தமானது நடைமுறையிலுள்ள கண்காணிப்பு மற்றும் பொறுப்புகூறலின் பொறிமுறையில் கட்டமைப்பில் அரசியலமைப்பில் பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment