20வது திருத்தம் ஓர் பார்வை பாகம்-4 வை எல் எஸ் ஹமீட்-


வை எல் எஸ் ஹமீட்-



ஆணைக்குழு அங்கத்தவர்களை நீக்குதல்
——————————————————
17 மற்றும் 19 வது திருத்தத்தின் கீழான சுயாதீன ஆணைக்குழுக்களின் அங்கத்தவர்களை நீக்குவதாயின் அரசியல் அமைப்பில் அல்லது ஏதாவது ஒரு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளின்படி நீக்கவேண்டும். அவ்வாறு எதுவித சட்ட ஏற்பாடும் இல்லாதபோது அரசியலமைப்புப் பேரவையின் முன்கூட்டிய அனுமதியுடனேயே நீக்கவேண்டும். 17A- Article 41B(4) 19A- Article 41B (5)

இதன்மூலம் அவர்களது சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

அதேபோல் குறித்த பதவிநிலைகளுக்கு நியமிக்கப்பட்டவர்களை ( Schedule-2) நீக்கும்போது அரசியலமைப்பில் அல்லது ஏதாவதொரு சட்டத்தில் குறிப்பிடப்பிடப்பட்ட விதிமுறைகளுக்கிணங்க நீக்கவேண்டும். அவ்வாறு சட்ட ஏற்பாடு இல்லாதபோது என்ன செய்வது என்பது குறிப்பிடப்படவில்லை. 17A, 19A இரண்டிலும் [Article 41C(3)]

18A மற்றும் 20A யின் கிழான ஆணைக்குழுக்கள் மற்றும் பதவி நிலைக்குரியவர்களைப் பொறுத்தவரை அரசியலமைப்பில் அல்லது ஏதாவது ஒரு சட்டத்தில் குறிப்பிட்டபடி நீக்கவேண்டும். அவ்வாறு ஏற்பாடு இல்லாதபோது ஜனாதிபதியே நீக்கலாம். பாராளுமன்றப்பேரவையின் அனுமதியும் தேவையில்லை; கலந்தாலோசிக்கவும் தேவையில்லை.

பொதுச்சேவை ஆணைக்குழு- சரத்து 54
——————————————————
நியமனம்
—————
இவர்களது நியமனம் தொடர்பாக ஏற்கனவே பார்த்தோம். சுருக்கமாக, 1978ம் ஆண்டு யாப்பில் ஜனாதிபதி நேரடியாக நியமிப்பார். 17வது, 19 வது திருத்தத்தங்களில் அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசில் ஜனாதிபதி நியமிப்பார். 18வது, 20வது திருத்தங்களில் ஜனாதிபதி பாராளுமன்றப் பேரவையின் அவதானங்களைக் கவனத்திற்கொண்டோ, கொள்ளாமலோ நியமிக்கலாம்.

நீக்கம்
————
1978ம் ஆண்டு யாப்பில் ஜனாதிபதி நீக்கலாம் ஆனாலும் நீக்கக் கடிதத்தில் நீக்கலுக்கான காரணம் கூறவேண்டும். 17வது திருத்தத்தில் அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசின் அடிப்படையில் ஜனாதிபதி நீக்கலாம். சரத்து 54(4). 19இல் அரசியல் அமைப்புப் பேரவையின் அனுமதியுடன் ஜனாதிபதி நீக்கலாம்.

இங்கு கவனிக்க வேண்டியது; 17இல் “ அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசில்”; 19இல் “ அரசியலமைப்புப் பேரவையின் அனுமதியுடன்” என்று குறிப்பிடப்பட்டதன் காரணமென்ன?

அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்கள் நிறைவேற்றுத் துறையைச் சேர்ந்தவர்களல்ல. ( பிரதமர் மற்றும் அங்கத்தவர்களில் யாராவது அமைச்சர்கள் இருந்தாலே தவிர) பொதுச்சேவை ஆணைக்குழு என்பது அரச உத்தியகத்தர்களோடு சம்பந்தப்பட்டவை. எனவே, அவர்களின் செயற்பாடு திருப்தியானதா? இல்லையா? என்பது நிறைவேற்றுத் துறைத் தலைவருக்கு தெரிகின்ற அளவு நிறைவேற்றுத் துறையோடு உத்தியோகபூர்வ தொடர்பில்லாதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

பேரவை சிபார்சு செய்கின்றது என்கின்றபோது அவர்கள்தான் நீக்குதல் தொடர்பாகத் தீர்மானிக்கிறார்கள். தொடர்பில்லாதவர்கள் எந்த அடிப்படையில் தீர்மானிப்பார்கள்?

எனவே, அதிலிருந்து ஒருபடி முன்னேற்றமாகத்தான் ஜனாதிபதி ஒருவரைத் நீக்கத் தீர்மானிக்கின்றபோது அவர் அதனை எதேச்சதிகாரமாக செய்யாமல் நீக்கலுக்கான காரணங்களை பேரவைக்கு அனுப்பி அவர்கள் அதனை ஆராய்ந்து நியாயமெனப்படும்போது அதனை அங்கீகரிக்கலாம்; நியாயமில்லை என அறியும்போது ( சிலவேளை அரசியல் காரணங்களுக்காக ஜனாதிபதி நீக்கமுற்பட்டால்) நிராகரிக்கலாம்; என்ற அடிப்படையில் இந்த மாற்றம் 19இல் செய்யப்பட்டது.

எனவே, இங்கு பொதுச்சேவை ஆணைக்குழுவினருக்கு தமது பதவிநிலை தொடர்பாக, நினைத்தபடி நீக்கமுடியாது; என்ற உறுதிப்பாடு இருக்கின்றது. அதனால் அவர்கள் சற்று சுதந்திரமாக செயற்படலாம்.

18, 20 ஐப் பொறுத்தவரை ஜனாதிபதி நேரடியாக நீக்கலாம். இதில் முக்கியம் என்னவெனில் 1978 ம் ஆண்டு யாப்பில் ஜனாதிபதி காரணம் கூறவேண்டும்; இங்கு காரணம்கூட கூறத்தேவையில்லை. இங்கு நியமனம், நீக்குதல் இரண்டும் ஜனாதிபதி ஒருவரின் கைகளிலேயே இருக்கும்போது அரச அதிகாரிகள் சுதந்திரமாக செயற்படுவதில் சிரமமிருக்கிறது. இது அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும். ( இந்த விடயத்தில் 1978ம் ஆண்டில் J R இற்கு இருந்த அதிகாரத்தைவிட, 20 நிறைவேற்றப்பட்டால் தற்போதைய ஜனாதிபதிக்கு அதிகாரம் கூடுதலாக இருக்கும்.) எனவே, 20 இல் பொதுச்சேவை ஆணைக்குழுவை சுதந்திர ஆணைக்குழு என்று கூறவே முடியாது.

தேர்தல் ஆணைக்குழு- சரத்து 103
———————————————-
இது 17 வது திருத்தத்தில்தான் முதல்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குமுன் “தேர்தல் ஆணையாளர்தான்” இருந்தார்.

நியமனம்
————-
நியமனம் எல்லா ஆணைக்குழுக்களுக்கும் ஒரே விதம்; என்பதனால் “நீக்கம்” தொடர்பாக மட்டும் பார்ப்போம்

நீக்கம்
————-
1978ம் ஆண்டு யாப்பில் தேர்தல் ஆணையாளர் உடல் நலமின்மை, உளரீதியான, உடல்ரீதியான உறுதியற்ற தன்மை இருந்தால் அவரை ஜனாதிபதி பதவி நீக்கலாம். 103(3)(d)

அடுத்தது, பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணை நிறைவேற்றுவதன்மூலம் அவரை ஜனாதிபதி பதவி நீக்கலாம். 103(3)(e)

17இல் உயர்நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை நீக்கும் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறை தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களை நீக்கும் விடயத்திலும் பின்பற்றப்பட வேண்டும்; என்று குறிப்பிடப்பட்டது. சரத்து 103(4) இது 18, 19 இலும் தொடர்ந்து தற்போது 20 இலும் தொடர்கிறது. எனவே, 20 பின்பும் தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவர்களை ஜனாதிபதி நினைத்த மாத்திரத்தில் நீக்கிவிட முடியாது. ஆனாலும் தாம் விரும்பியவர்களை நியமிக்கமுடியும்.

நீதியரசர்களை நீக்கும் நடைமுறை: சரத்து 107
————————————————————-
இதன்பிரகாரம் மேற்குறிப்பிடப்பட்ட ஒரு நீதியரசரை நீக்குவதாயின் பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும். சாதாரண பெரும்பான்மை ( சமூகமளித்திருப்போரில் பாதிக்குமேல்) போதாது. மாறாக 113 அல்லது அதற்குமேல் வேண்டும். பிரேரணை சமர்ப்பிக்கும்போது மொத்தப் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாதோர் கையொப்பமிடவேண்டும்.

பெரும்பான்மை மாத்திரம் போதாது. நிரூபிக்கப்பட்ட பிழையான செயற்பாடு அல்லது செயலாற்றும் தகவின்மை போன்ற ஒரு குற்றச்சாட்டின்பேரிலேயே அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும். அதற்குமுன் அது விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும்.

இந்த நடைமுறை தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவர் விடயத்திலும் பின்பற்றப்பட வேண்டும்; என்பதுதான் 17வது திருத்தத்தில் கூறப்பட்டது. அதுதான் தொடர்கிறது.

1978ம் ஆண்டு யாப்பில், பாராளுமன்றப் பாராளுமன்றப் பிரேரணை மூலம் தேர்தல் ஆணையாரை நீக்கலாம்; என்றுதான் கூறப்பட்டது. அதன்பொருள் சாதார பெரும்பான்மையாகும். குற்றச்சாட்டுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே, 17வது திருத்தம் தேர்தல் ஆணைக்குழு விடயத்தில் முன்னேற்றகரமானதாகும். இது 18வது திருத்தத்திலும் 19வது திருத்தத்திலும் தொடர்ந்தது. அது 20 வது திருத்தத்திலும் தொடர்கிறது. அந்தவகையில் தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவர் நியமன அதிகாரம் முழுக்க ஜனாதிபதியிடம் வருகின்றபோதிலும் நீக்குதல் விடயத்தில் அதே நடைமுறை தொடர்வது சற்று ஆறுதலானது.

ஒரு முக்கிய அம்சம்
————————-
தேர்தல்காலத்தில் வானொலி, தொலைக்காட்சி, மற்றும் பத்திரிகை நிறுவனங்களுக்கு நீதியான, சுதந்திரமான தேர்தலை நடாத்துவதற்காக வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு 17வது திருத்தம் வழங்கியது-104B(5)(a) அது 20வது திருத்தம் வரை தொடர்கிறது.

ஆனால்

17வது திருத்தமும் 19 வது திருத்தமும் அவ்வாழிகாட்டுதல்களை அரச தொலைக்காட்சி, மற்றும் வானொலி நிறுவனங்கள் பின்பற்றுவதைக் கட்டாயமாக்கி பொதுவாக சகல பத்திரிகைகளுக்கும் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அதனைக்கட்டாயமாக்காமல் ஒரு சலுகையை வழங்கியது. 104B(5)(b)

இது கடந்த காலங்களில் தனியார் ஊடக நிறுவனங்கள் பக்கசார்பாக செயற்படும் சந்தர்ப்பத்தை வழங்கியது. இந்த தனியார் ஊடகத் துறையையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் 19இல் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கியிருந்தால் சில தனியார் ஊடகங்கள் எல்லைமீறி இனவாதத்தை
கட்டவிழ்த்துவிட்டதை தேர்தல் ஆணைக்குழுவினூடாக ஓரளவாவது கட்டுப்படுத்தியிருக்கலாம். சிலவேளை அது தேர்தல் முடிவுகளில்கூட மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

இப்பொழுது 20இல் தனியார் ஊடகங்களும் இக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த அதிகாரம் அரசுக்கு வழங்கப்படவில்லை. மாறாக தேர்தல் ஆணைக்குழுவிற்கே வழங்கப்படுகிறது. எனவே, அரசு இதனை துஷ்பிரயோகம் செய்யமுடியாது.

அந்தவகையில் இது 19 இல் இருந்து இது ஒரு படி முன்னேற்றகரமான, வரவேற்கப்படவேண்டிய ஒரு நிலையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :