பிரதமரினால் ஒன்லைன் விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டது.
ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் தகவல்களை ஒன்லைன் முறையில் (Online Registration System) பெற்றுக்கொள்ளும் முறையொன்று பாராளுமன்ற செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் வகையில் பூரணப்படுத்தி கையளித்தார்.
கொவிட்-19 தொற்றுநோய் நிலைமை காரணமாக தற்பொழுது பாராளுமன்றத்தினுள் காணப்படும் தகவல் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி ஒன்லைன் மூலம் தகவல்கள் திரட்டப்படுவதுடன், இதன்மூலம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தராமல் தேர்தல் தொகுதிகளில் இருந்தே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளமுடியும்.
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் registration.parliament.lk எனும் இணைய பக்கத்திற்கு பிரவேசித்து உரிய கடவுச்சொல்லை பயன்படுத்தி இந்த விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்த கடவுச்சொல் தொடர்பில் அறிவுறுத்துவதற்கு பாராளுமன்ற பணியாட்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் அல்லது உறுதியுரை செய்வதற்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் உறுப்பினர்களின் தரவுகள் கட்டாயம் தேவைப்படுவதுடன் முடிந்தளவு விரைவில் அவற்றை வழங்குமாறு பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் வழங்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்தல் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment