நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 2 கோடி ருபா இலஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது என விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான் ) கூறியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள தலைமை வேட்பாளராகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனை வரவேற்று வீரமுனை பகுதயில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் இன்று இரவு கலந்துகொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தெரிவித்ததாவது
கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்கட்சி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு சுகபோகங்களை அனுபவித்தனர்.இந்த கூட்டமைப்பினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை அதே அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட போது ரூபா 2 கோடி பணத்தை இலஞ்சமாக வாங்கியுள்ளனர்.இந்த விடயத்தை அந்த நேரம் அம்பலத்திற்கு கொண்டு வந்தவர் சிவசக்தி ஆனந்தன் என்பவராவார்.
சிவசக்தி ஆனந்தன் நேர்மையானவன்.இந்த 2 கோடி பணத்தினை கூட்டமைப்பின் சகல உறுப்பினரும் பெற்றுக்கொண்டிருந்தனர்.இவ்வாறானவர்களின் போக்கினால் தான் அதாவுல்லாஹ் ஹரீஸ் போன்றவர்கள் தமிழ் மக்களை பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வருகின்றனர் என குற்றஞ்சாட்டினார்.