இந்து சமய பிராத்தனைகளின் பின்னர் அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், "தேர்தல் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் அரசியல் பேசுவதுதான்
உகந்ததாக இருக்கும். ஆனால் நான் அந்த எண்ணத்தில் இங்கு வரவில்லை.
கடந்த 18 வருடங்களாக கல்வி சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கக் கூடிய நான், கல்வித்துறையில் அதிக நாட்டம் கொண்டவன் என்ற அடிப்படையில் பல்வேறு மாணவர்களின் கல்வி சார்ந்த பல வேலைத்திட்டங்களை எனது ஜனனம் அறக்கட்டளையின் ஊடாக கடந்த 10 வருடங்களாக முன்னெடுத்து வருகின்றேன்.
எங்கெல்லாம் கல்வியின் தேவை அதிகமாக உணரப்படுகிறதோ அங்கெல்லாம் எனது முழுமையான முயற்சியுடன் சேவைகளை வழங்குவேன். கல்வி கற்றலை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது மிகப் பிரதான குறிக்கோளாகும்.கல்வியை மாணவர்கள் தேடிப் பெற்றுக் கொள்வதை விட அதனை நாங்கள் நாடிச் சென்று வழங்குவதில்தான் எங்களின் பங்கு இருக்கின்றது.
உள்நாட்டு மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கூட வடக்கு கிழக்கில் எங்களது கணிணித் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தை ஸ்தாபித்து செயற்படுத்தினோம்.
இலங்கையின் கல்வித் துறை தொடர்பாக சர்வதேச நாடுகளில் மிகுந்த வரவேற்பு இருக்கின்றது. குறிப்பாக நான் பயணம் மேற்கொண்ட சுமார் 28 நாடுகளிலும் இந்த நிலைப்பாடு இருப்பதை அறிந்து கொண்டேன்.
எமது நாட்டில் கல்வி கற்றவர்கள் என்று அறிந்தால் வெளிநாட்டவர்கள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கினார்கள்.இந்த தருணத்தில்தான் நாம் ஏற்றுமதிக் கல்வியை பற்றி சிந்தித்து அதனை செயற்படுத்த முனைந்தோம்.
அதேவேளை, எமது தமிழ் பேசும் சமூகத்தின் கல்வியை மேம்படுத்த வேண்டுமாக இருந்தால்இரண்டரை கிலோமீற்றருக்கு உட்பட்ட பகுதியில் குறைந்தது 2 பாலர் பாடசாலைகளையேனும் அமையப்பெற்றிருக்க வேண்டும்.இந்த பிரதேசத்தில் கூட பாலர்கள் பாடசாலைகள் இன்மையால் சிங்கள மற்றும் ஆங்கில மொழியிலான கல்விக் கூடங்களில் மாணவர்களை சேர்க்கின்ற துரதிஸ்டவசமான நிலைமை இருக்கின்றது.
ஆனால், மாணவர்களின் பெற்றோர் சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ பேசத் தெரிந்த போதும் எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் முடியாத நிலையில் உள்ளனர். இதனால் மாணவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.அதேவேளை, குறிப்பிட்ட 5 கிலோமீற்றர் இடைவெளியில் ஆரம்ப மற்றும் மேல்நிலை பாடசாலைகளும் இருக்க வேண்டும்.ஆனால் அதற்கான வாய்ப்புகள் எமது தமிழ் பேசும் சமூகத்திற்கு கிடைக்கவில்லை. இருந்த போதும் இருக்கின்ற பாடசாலைகளின் வளங்களை அதிகப்படுத்தி அதனூடாக உயர்ந்த
கல்வியை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
குறித்த பாடசாலைகளின் வளங்களை அதிகரிப்பதன் ஊடாக அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றால் அதற்கு பரிந்துரைகளை வழங்கி ஏனைய நிதியளிப்புகளை பெற்றுக் கொடுக்கக் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களிடமில்லை.
அதேவேளை எமது சமூகத்தினருக்கான மாகாண சபை உறுப்பினர்களும் குறைவாகவே இருக்கின்றார்கள்.ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை தமிழ் பேசும் மக்கள் வழங்கவில்லை.
எனவே, தலைவர் மனோகணேசன் இந்த முறை முயற்சியை தளர விடாமல் என்னை தெரிவு செய்திருக்கிறார் என்றால் நான் கல்வித் துறை சார்ந்த ஒரு என்பது மாத்திரமன்றி கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களுடைய அபிருத்தி சார்ந்த விடயங்களில் முறையோடு, துணிவோடு, களப்பணிகளில் ஈடுபடக் கூடிய வலுவும், இளமையும் எனக்கு இருப்பதனால் அந்த வாய்ப்பை எனக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.
அந்த வாய்ப்பினை பயன்படுத்தி எமது கொழும்பு மாவட்டத்திலே தமிழ் பேசும் மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை முறையாக வழங்கி, எங்களின் பிள்ளைகளுக்கு கல்வியையும் சிறந்த எதிர்காலத்தையும் ஏற்படுத்துவதற்காக என்னுடைய இந்த பயணத்தினை ஆரம்பிக்க முயற்சித்து வருகின்றேன்.
கடந்த 18 வருடங்களாக எமது மாணவர்களுக்கான தொழிநுட்ப கல்வியை வழங்கி இருக்கிறேன். எதிர்வரும் காலத்திலும் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காகவும்,சேவையாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.