ஜே.எப்.காமிலா பேகம்-
தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த அரசாங்க காலப்பகுதியில், வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காது, அரசியல் இலாபங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே செயற்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்,
அலரி மாளிகையில் இன்று காலை தமிழ் ஊடக முக்கியஸ்தர்களை சந்தித்த போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த நல்லாட்சி அரசாங்கம், வடக்கு, கிழக்கு மக்களுக்கு எந்தவித அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலிலில் வடக்கு கிழக்கு மக்கள் தமக்கு பணி செய்யும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வெறும் வாய்ப் பேச்சுகளை பேசுவோரை தவிர்த்து தமக்கான அபிவிருத்திகளை மேற்கொள்வோரை மக்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்,
தமது அரசாங்கம் வடக்கு தெற்கு என்ற பேதமின்றியே அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் வடக்கிற்கும் தெற்கிற்குமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படாத நிலையில் தமது ஆட்சியில் அனைத்து பகுதிகளுக்குமான சமமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்,
தமது ஆட்சியில் நடந்த அபிவிருத்திகளே இன்னும் வடக்கில் காணப்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன் போது மேலும் தெரிவித்தார்.