தலவாக்கலை பி.கேதீஸ்-
கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவும் முகமாக வே பவுண்டேஷன் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நமக்கு நாமே நிவாரண வேலைத்திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அவ் அமைப்பின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாநகர சபையின் உறுப்பினருமான நடராஜா விஷ்ணுவரதன் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்
இவ்வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக ஒரு வைரஸ் தொற்று ஒழிப்பு நடவடிக்கையாக மலையகப் பிரதேசங்களில் கிருமி நாசினி ஒழிப்பு நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகின்றது.
மலையக மக்கள் வாழும் குடியிருப்பு பிரதேசங்களை மையமாகக் கொண்டு இவ் வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது.
இதனடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் லிந்துல்லை, பம்பரக்கலை, பெல்மோரோல்,என்போல்ட், ஹைய்பொரஸ்ட், டொரின்டன், இராகலை தோட்டம் உட்பட 34 தோட்டங்களில் உள்ள 116 தோட்ட பிரிவுகளுக்கு வைரஸ் தொற்று ஒழிப்பு நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஏறக்குறைய 17500 குடும்பங்களிலுள்ள சுமார் 90,000 மக்கள் பயன் பெற்றுள்ளனர். இதற்கு மேலதிகமாக இப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை தோட்ட முகாமையாளரின் பூரண ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரண பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
ரதெல்ல, நேஸ்பி, மூன்பிலேன்,ஸ்கிரப்,தங்கக்கல,சென் கிளயர் ஆகிய பிரதேசங்கள் உட்பட 15 தோட்டக் கிராமங்களிலுள்ள 513 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளன.
வே பவுண்டேஷன் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நுவரெலியா கிளை தமது மகத்தான பங்களிப்பினை வழங்கி வருகின்றது.
பயனாளிகள் தொடர்பான தகவல் திரட்டல்,ஆலோசனை வழிகாட்டல் வழங்கல், கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், பொருள் பகிர்வு போன்ற நடவடிக்கைகள் செஞ்சிலுவை சங்கத்தின் நுவரெலிய கிளையினால் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது எனவும் தெரிவித்தார்.
