கொரோனா தொற்று இன்றி உடல் தகனம் செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வேண்டும்.-முஜிபுர் ரஹ்மான்


கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்து கொழும்பு முகத்துவாரத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் கவலையடையச் செய்வதாக அமைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சரியான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
இலங்கையில் 9ஆவது கொரோனா வைரஸ் இறப்பாக பதிவான கொழும்பு முகத்துவாரத்தை சேர்ந்த முஸ்லிம் பெண் உள்ளிட்டவரின் PCR அறிக்கை உள்ளிட்ட, கொரோனா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பல பி.சி.ஆர் சோதனைகள் தவறானவை என, இலங்கை அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் (The Sri Lanka Association of Government Medical Laboratory Technologists (SLAGMLT) தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அந்தப் பெண்ணின் இறப்புக்கு கொரோனா தொற்று காரணமாக அமையவில்லை என்ற போதிலும், அந்தப் பெண்ணின் கணவனுக்கு கூட உடலை பார்க்க அனுமதி வழங்காமல் அந்தப் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அந்தப் பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அந்தப் பெண் உயிரிழந்த மறுநாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியிருந்ததும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
இதன்மூலம் இந்நாட்டு முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு சிறிதும் மதிப்பளிக்காமல் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுகின்ற நிலையில், தவறான பரிசோதனை அறிக்கைகள் மூலம் வேறு காரணங்களால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களையும் தகனம் செய்யும் நிலையே தற்போது உருவாகியுள்ளது.
உயிரிழந்த நபரின் உடலை உரிய பாதுகாப்பு முறைகளுடன் அடக்கம் செய்ய முடியும் என்று உலக சுகாதார தாபனம் பரிந்துரை செய்துள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மத விவகாரங்களுக்கான செயலாளரும் இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றது.
அத்துடன் உலகத்தில் ஏனைய நாடுகள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் நிலையில், இலங்கையில் மாத்திரமே முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படும் என்ற விடாப்பிடி கொள்கையில் அரசாங்கம் இருக்கின்றது.
இந்நிலையில் சுகாதாரத் துறை அதிகாரிகளின் தவறு காரணமாக குறித்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட விடயம் மிகவும் வருந்தத்தக்கது என்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை வேண்டும்.
அத்துடன் இனிமேல் இதுபோன்ற தவறுகள் இடம்பெறாது இருப்பதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -