தான் முதல்வராக இருந்த காலம் தொட்டு சாய்ந்தமருது எழுச்சி போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்ற காலம் வரை கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கடும் தியாகங்களுக்கு மத்தியில் பல விட்டுக் கொடுப்புகளை சாய்ந்தமருது மக்களுக்காக செய்து வருகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளரும் கட்சியின் மாவட்ட செயற்குழுச் செயலாளருமான எம்.எம்.ஜுனைதீன் (மான்குட்டி) தெரிவித்தார்.
அண்மையில் கல்முனையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் அங்கு குறிப்பிடும் போது,
சிராஸ் மீராசாஹிப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு தரப்பினராலும் ஏமாற்றப்பட்டும், குழி பறிக்கப்பட்டும் கூட சாய்ந்தமருது மக்களுக்காக தனது அரசியல் வாழ்க்கையையே விட்டுக்கொடுத்த ஒரு தியாகியாகும்.
இவர் சாய்ந்தமருது மக்களின் எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் உன்னிப்பாக இருந்து பல்வேறு தியாகங்களை செய்தவர் என்றால் மிகையாகாது.
அதுபோன்று சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக தான் ஒருபோதும் குறுக்கே நிற்கக் கூடாது என்பதனை மிகவும் ஆணித்தரமாக வெளிப்படையாக அவர் சொல்லி வந்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு தியாகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றிய பால் போத்தல் அரசியல் செய்ய எத்தனிக்கும் ஒருவரால் என்னை சீண்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் ஒரு போதும் பலிக்காது.
எங்கள் கட்சி உறுப்பினர்களின் முன்னிலையிலும், எனது முன்னிலையிலும், எங்களது கட்சி தவிசாளர் அமீர் அலியின் கையை பிடித்து, நான் தேர்தல் கேட்பதாக இருந்தால் உங்கள் கட்சியிலேயே கேட்பேன் என்ற வஃதாவை பால் போத்தல் அரசியல் வாதி தந்திருந்தார். இது பொய் என்றால் நான் அழிவுச் சத்தியம் செய்யத் தயார். இதற்கு அவர் தயாராக உள்ளாரா?
இது சாய்ந்தமருது நகர சபை கோசத்தை வைத்து தனிப்பட்ட அரசியல் அஜந் தாக்களை அரங்கேற்றுவதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
இவர் சாய்ந்தமருது மக்களுடைய, அங்குள்ள புத்திஜீவிகளுடைய உணர்வுகளை தூண்டி அரசியல் செய்ய எத்தனிக்கின்றார்.
புதிய கட்சி ஒன்றில் இணைந்து கொண்டு மக்களை ஏமாற்ற இன்று முனைந்து கொண்டிருக்கின்றார்.
புதிதாக அரசியலுக்கு வந்து எங்களையும் எங்களது கட்சியையும் எங்களது கட்சியிலுள்ள சிராஸ் மீராசாஹிப் போன்ற முக்கியஸ்தர்களையும் விமர்சிக்கும் அளவுக்கு இவர் தள்ளப்பட்டு இருக்கின்றார் என்றால் இது ஒரு வங்குரோத்து அரசியலின் ஆரம்பம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சாய்ந்தமருது நகர சபை சம்பந்தமாக இடம் பெற்ற 16 சந்திப்புக்களில் மயில் கட்சி தொடர்பில் நேருக்கு நேர் விவாதிக்கவும் உண்மை சத்தியம் செய்யவும் மக்களுக்கு உண்மையை நேரடியாக தெளிவுபடுத்தவும் அனைத்து சந்திப்புக்களிலும் பங்கேற்று அனைத்து சந்திப்பிலும் இடைத்தரகராக இருந்த என்னை விமர்சிப்பதை விட்டு விட்டு நேருக்கு நேர் வர முடியுமா? என்று நான் அவருக்கு சவால் விடுக்கிறேன் என்றார்.
