ஜனாசாக்களை எரிப்பதை விடுத்து அடக்கம்செய்ய வேண்டும்! சட்டத்தரணி சுமந்திரனுக்கு உறுப்பினர் பஸ்மீர் நன்றிதெரிவிப்பு.


காரைதீவு பிரதேசசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறேவேற்றம்!
காரைதீவு நிருபர் சகா-கொரோனா காரணமாக மரணிக்கும் முஸ்லிம் ஜனாசாக்களை எரியூட்டுவதை விடுத்து இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யவேண்டும்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் 27வது அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சபையின் 27ஆவது அமர்வு நேற்று(19)செவ்வாய்க்கிழமை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக முள்ளிவாய்க்கால் கொடுரத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு சகல உறுப்பினர்களும் எழுந்துநின்று அஞ்சலி செலுத்தினர்.
அமர்வில் மாளிகைக்காடு சுயேச்சைக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் ஜனாசா எரியூட்டுவது தவறு என்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமென கேட்டுக்கொண்டதற்கிணங்க அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் உறுப்பினர் பஸ்மீர் அங்கு உரையாற்றுகையில்:
முஸ்லிம் ஜனாசாக்கள் எரியூட்டப்படுவதற்கு எதிராக எமது இனத்தைச்சார்ந்த எந்தச்சட்டத்தரணியுமே முன்வராதிருந்தவேளையில் சகோதர பிரபல சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் இனமதத்திற்கு அப்பால் மனிதநேயம் கொண்டு நீதிமன்றில் வாதாட முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. அவருக்கு விசேடமாக நன்றிகூறுகிறேன்.
அண்மையில் அக்கரைப்பற்று மாநகரசபையும் இவ்வாறானதொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. எனவே எமது தீர்மானத்தையும் சம்பந்தப்பட்ட ஜனாதிபதி தொடக்கம் அனைவருக்கும் அனுப்பவேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.

உதவிதவிசாளர் எ.எம்.ஜாகீர் உரையாற்றுகையில்: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு சபையால் நிவாரணம் வழங்கப்படவேண்டும். சபை அனுமதி தந்தால் இதற்கான அங்கீகாரத்தை கிழக்குமாகாண ஆளுநரிடம் பெற்றுத்தருகிறேன் என்றார்.

தவிசாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் சபையால் மக்களுக்கு உதவுவதில் விருப்பம் கொண்டிருந்தபோதிலும் சபையின்நிதிநிலைமை மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் கொரோனாப்பாதிப்புக்கு நிதிஉதவி செய்யமுடியாது என்ற சட்டதிட்டத்தை ஆராய்ந்தபின்னர் தீர்மானிப்போம் என முடிவானது.

சுயேச்சை உறுப்பினர் ஆ.பூபாலரெத்தினம் காரைதீவு பிரதேசசபையின் முறைகேடான நடைமுறையும் ஊழல் மோசடியும் என உள்ளுராட்சி ஆணையாளர் தொடக்கம் ஆளுநர் வரை அனுப்பிய பிட்டிசம் தொடர்பாக சபையின் கவனம் திரும்பியது.

உறுப்பினர் ஆ.பூபாலரெத்தினம் உரையாற்றுகையில்:
நாம் இங்குவந்து இவ்வளவுகாலமும் இங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியர்து. உபகுழுக்கள் கூட்டப்படுவதில்லை. முறைகேடு நடக்கிறது. முகத்தாட்சனைக்காக எல்லாபிரேரணைக்கும் அனைவரும் கையை உயர்த்துகிறார்கள். பிரேரணை நிறைவேற்றப்படுகிறது.ஆனால் நடைமுறையில் இல்லை. 5ஆயிரம் ருபா கிறவலுக்கு 19ஆயிரம் ருபா செலவிடப்பட்டது. எனது மனதில்பட்டதை எழுதினேன்.என்றார்.
உறுப்பினர் மு.காண்டீபன் உரையாற்றுகையில்:
'மோசடிக்கோ ஊழலுக்கோ துணைபோபவர்கள் நாங்களல்ல. ஏதோ அனைத்திற்கும் நாம் கண்ணைமூடிக்கொண்டு கைதூக்குபவர்கள் போன்று உங்கள் கதை இருக்கிறது. முதலில் இதனை உறுப்பினர் பூபாலரெத்தினம் வாபஸ் பெறவேண்டும்.இன்றேல் அவருக்கு சபை நடவடிக்கை எடுக்கவேண்டும்.' என்றார்.
பல தடவைகள் கூறியும் வாபஸ் பெறாத நிலையில் தவிசாளர் தலையிட்டு நிலைமையை விளக்கி வாபஸ் பெறுகிறீர்களா? இல்லையா? அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவா? என்று கேட்டார்.
இறுதியில் உறுப்பினர் பூபாலரெத்தினம் 'நான் அப்படிகூறியிருந்தால் வாபஸ் பெறுகிறேன்' என்று சொன்னார்.

அவரது பிட்டிசம் தொடர்பாக சபை உறுப்பினர்களின் கருத்து கேட்கப்பட்டது. ஊழல் முறைகேடு மோசடி நடந்திருந்தால் சரியான தரவுகளோடு சமர்ப்பிப்பதை விட்டுவிட்டு தேவையில்லாமல் பிட்டிசம் அடித்து ஊர்மானம் சபையின் கௌரவம் உறுப்பினர்களின் கௌரவத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என பல உறுப்பினர்களும் காரசாரமாக உரையாற்றினர்.

இறுதியாக தவிசாளர் கே.ஜெயசிறில் உரையாற்றுகையில்:

இந்த சபைக்கு வந்த காலம் தொடக்கம் இதுவரை 26அமர்வுகளிலும் நீங்கள் சபையில் குழப்பம் விளைவித்தது மட்டுமல்லாமல் அபிவிருத்திக்கு தடையாகவும் இருந்துள்ளீர்கள். ஊழல்மோசடி என்றால் அதன் அர்த்தம் வேறு. அப்படியிருந்தால் நீங்கள் நிருபிக்கவேண்டும்.
ஊழல்மோசடிக்கு கைதூக்கியவர்கள் என்று கௌரவ உறுப்பினர்களை கொச்சைப்படுத்தியுள்ளீர்கள். கேவலப்படுத்தியுள்ளீர்கள். இங்குள்ள 26அமர்வுகளின் அறிக்கைகளைப்பார்த்தால் தெரியும். சகல அமர்வுகளிலும் உறுப்பினர்கள் எதிர்த்தும் ஆதரவாகவும் சுயநினைவோடுதான் வாக்களித்துள்ளனர். யாரும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கவில்லை.

இலங்கையில் 1ருபா கூட மோசடி செய்யாத உள்ளுராட்சிசபை இருக்குமானால் அது காரைதீவு பிரதேசசபையாகத்தானிருக்கும். அந்தளவிற்கு நேர்மையாகவும் நிதானமாகவும் பயணிக்கிறோம்.
நீங்கள் மக்களுக்கு சேவை செய்வதை விட்டுவிட்டு பிட்டிசம் அடிப்பதிலும் குழப்பம் விளைவிப்பதிலுமே ஈடுபட்டுவருகிறீர்கள். நீங்கள்தான் தான்தோன்றித்தனமாக கதைப்பதிலும் என்ன கதைத்தோம் என்று தெரியாமல் பிதற்றுவதும். சுயபுத்தி இல்லாவிட்டாலும் சொந்தப்புத்தி இருக்கவேண்டும்.

கடந்தகாலங்களில் பலதடவைகள் உங்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க பல ஆதாரங்கள் இருந்தன. ஏதோ மூத்தவயது மனிதர் என்பதற்காக விட்டோம். ஆனால் நீங்கள் அதற்கு மதிப்பளிக்காமல் ஊர்மானத்தையும் சபை மரியாதையையும் கேவலப்படுத்துகிறீர்கள்.

எனவே ஏதாவது முறைகேடு என்றால் அதற்குரிய அலுவலர்கள் செயலாளர் இருக்கிறார். அவர்களிடம் அவற்றைக்கேட்டுத் தெளிவதைவிடுத்து ஆணையாளருக்கும் ஆளுநருக்கும் பிட்டிசம் அடித்து ஆகப்போவதொன்றுமில்லை. இனியாவது திருந்தி நடவுங்கள். என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -