கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மலையகப்பகுதியில் பாதிப்புக்குள்ளாகியிருந்த இயல்பு வாழ்க்கை கடந்த ஒரு மாத காலமாக பாதிப்புக்குள்ளாகியிருந்தன.இதனால் நடைபாதை வியாபாரிகள் வர்த்தகர்கள், தோட்டத்தொழிலாளர்கள், விவசாயிகள், சாரதிகள் , முச்சக்கரவண்டி சாரதிகள் , பஸ் நடத்துனர்கள் உட்பட அனைத்து பிரிவினர்களும் பாதிப்புக்குள்ளாகினர்.பலரது குடும்பங்கள் தங்களுடைய அன்றாட தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டன.
இந்நிலையில் நேற்று முதல் பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளன.இன்றைய தினம் மலையக நகரங்களில் அன்றாட செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியிருந்தன.மக்கள் வழமை போல் பொருட்களை கொள்வனவு செய்வதனையும், நடைபாதை வியாபாரிகள், முச்சக்கரவண்டி சாரதிகள், பஸ் நடத்துனர்கள் , பஸ் சாரதிகள் ஆகியோர் தங்களுடைய பணிகளில் ஈடுபடுவதனையும் காணக்கூடியதாக இருந்தன.
இதேவேளை நகரங்களுக்கிடையிலான தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுபட்டிருந்தன.அரச நிறுவனங்கள் தொற்றுநீக்கி தெளித்ததன் பின்னர் தங்களுடைய கடமைகளில் ஈடுபட்டனர்.அத்தோடு ஏனைய தொழிற்துறைகளும் வழமைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக வருகை தந்திருந்த மக்கள் முகக்கவசம் அணிந்திருந்ததுடன் சுகாதாரப்பிரிவினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதனையும் காணக்கூடியதாக இருந்தன.