தேசிய பிரச்சினையை தமிழன் பேசக்கூடாதென பேரினவாதிகள் நினைப்பது, இனவாதத்தின் உச்சகட்டம் என, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் கொழும்பு மாவட்ட தமிழர் வேட்பாளருமான கலாநிதி வி. ஜனகன், கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளவையாவன:
“வெளிநாட்டுக்காரன், கள்ளத்தோணி, பறத்தமிழன், சக்கிலியன், புலி, பிசாசு” என்றெல்லாம் சுந்தர சிங்களத்தில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனை திட்டிதீர்த்தார்கள் இந்த இனவாத விருப்பிகள்.
ஏன் ஒரு தமிழன் தேசிய பிரச்சஇனைகள் பற்றிப் பேசக்கூடாதா? கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளர்களுடன் முதல் தொடர்பு (First contact) நபர்களைப் பரிசோதிக்க வேண்டும் எனக் கேட்பது குற்றமா?
ஒரு விடயத்தினை இந்த இனவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். மனோ கணேசனின் இந்தக் கோரிக்கை தனக்கும் தனது குடும்பத்திற்குமான பாதுகாப்புத் தொடர்பான கோரிக்கை அல்ல. மாறாக இது இவ்வாறு இனவாதம் பேசுகின்றவர்களின் குடும்பங்கள் உட்பட அனைத்து நாட்டு மக்களினதும் பாதுகாப்பு தொடர்பான பொதுவான அக்கறையே.
இனவாதத்தினை தங்களுடைய தேர்தல் துரும்பாக வைத்துள்ள இந்தக் கூட்டம், தமிழ் பேசும் மக்களின் கருத்துகள் அனைத்துக்கும் தங்களுடைய தேவைக்கு ஏற்ற வகையில் இனவாத சாயம் பூச ஆரம்பித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
முதல் நூறு கொரோனா தொற்றாளர்களை 58 நாள்களில் அடைந்த நாம், இன்று மூன்றாவது நூறு தொற்றாளர்களை வெறும் எட்டு நாள்களில் அடைந்துள்ளோம். இதில் இருந்தாவது இந்த இனவாதிகள் தெரிந்துகொள்ள வேண்டும், மனோ கணேசனின் ஆதங்கத்தில் இருக்கும் நியாயத்தினை.
கொரோனா வைரஸ் நெருக்கடியின் மிக மோசமான விடயங்கள் இனிமேல் தான் உலகத்தில் இடம்பெறும் என உலக சுகாதார ஸதாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அட்ஹனோம் கொப்ரேயேசஸ் எச்சரித்துள்ளார். அவர்களுடைய எச்சரிக்கை இப்போது இவர்கள் கண்களைக்கு தெரியப்போவதில்லை. ஏன் அவருக்கெதிராகவும் இத்தகைய இனவாதிகள் பேச வேண்டியது தானே.
நாட்டின் பொருளாதாரத்தில் அக்கறை உள்ளதாக கூறும் இந்த அரசாங்கம் கூறுவதில் தப்பில்லை. ஆனால் முறையாக இந்த வைரஸ்ஸின் தாக்கங்களை அறிந்துகொள்ள முடியாமல் எமது நாடு உட்பட பல நாடுகள் தடுமாறும் போது, தொற்றாளர்கள் தொடர்பான பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என சாமானிய மக்களே சிந்திக்கும் போது, ஓர்அனுபவம் உள்ள மக்கள் தலைவர் மனோ கணேசனின் கேள்வியில் என்ன தேச விரோதம் உள்ளது அல்லது எந்த விதி மீறல் உள்ளது?
சட்ட ரீதியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல் செய்யாது ஊடகங்கள் வாயிலாக அவ்வாறான நிலைமையைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என விடுத்த கோரிக்கைக்கு மக்கள் இக் காலகட்டத்தினை உணர்ந்து மதிப்பளித்து செயற்படுகிறார்கள். இதனைப் போல் அனைத்துவிடயங்களிலும் இந்த கொரோனாவைப் பயன்படுத்தி காட்டுச் சட்டத்தினை கொண்டுவரலாம் என ஒரு தரப்பினர் முயல்கின்றனர். இங்கு மனோ கணேசன் மீது கூறும் வியாக்கியானங்கள் இதற்கான எடுத்துக்காட்டு.
இனவாதத்தினை தேர்தல் துரும்பாக பயன்படுத்தும் இக் கூட்டத்திற்கு இலங்கை மக்கள் சரியான தீர்ப்பினை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.