கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தால் இன்றுடன்; 18 நாட்கள் முற்று முழுதாக தலைநகரும் முடங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் மக்களுக்கான உணவுப் பொருட்களை தடையின்றி வழங்குவதற்கு அரசாங்கம் மெனிங் பொதுச் சந்தையை இயங்க வைத்துள்ளதால் சிறு வியாபாரிகள் நாளாந்தம் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்தன.
இவ்வாறான நிலையில் இன்று போயா விடுமுறை தினம் என்பதால் இன்று கொழும்பு மெனிங் பொதுச் சந்தை வியாபார நடவடிக்கைகள் முடங்கின. வியாபாரிகள் வராததால் மிகவும் மந்தகதியில் இடம் பெற்றதுடன் பெருமளவான காய்கறி வகைகள் பழுதடைந்தும், அழுகியும் வீசப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இவ்வாறு பழுதடைந்த பொருட்களை ஒருசில நபர்கள் சுத்தம் செய்து கொண்டு விற்பதற்கு முயற்சித்ததை அங்குள்ள வியாபார சங்க உறுப்பினர்கள் கண்டு அவர்களை எச்சரித்து விரட்டியதையும் காண முடிந்தது.