ஐ. ஏ. காதிர் கான்-
ஏப்ரல் 21 ல் அரங்கேறிய மிலேச்சத்தனமான தாக்குதலின் போது கிறிஸ்தவ மக்களை நிதானப்படுத்தி, அவர்களுக்கு அழகிய பல வழிகாட்டல்களை வழங்கி, அச்சமூகத்தை நெறிப்படுத்திய கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் கௌரவ கர்தினால் மெல்கம் ரன்ஜித் அவர்களுக்கு நன்றி நவிழ்கின்றேன்.
என, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ் ஷேஹ் ரிஸ்வி முப்தி, இன்று (10.04.2020) கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் ஆற்றிய விழிப்புணர்வு உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அந்த உரையில் மேலும் தெரிவித்ததாவது,
அக்கோரச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கிளர்ந்தெழாமலும் இவ்வீனச் செயலை முஸ்லிம்கள் என்ற போர்வையில் சில அயோக்கியர்களால் தான் நடாத்தப்பட்டமை என, கிறிஸ்தவ மக்களை மெல்கம் ரன்ஜித் அவர்களே சமாதானப்படுத்தினார்.
மேலும், அச் சந்தர்ப்பத்தில் அவர் எம்மோடு மிகவும் சினேக பூர்வமாக நடந்து கொண்டது மட்டுமல்லாது, இலங்கை முஸ்லிம்கள் இவ்வாறு ஒரு நாளும் செயற்பட மாட்டார்கள் என என்னிடம் உறுதியளித்தார்.
எனவே, கர்தினால் மெல்கம் ரன்ஜித் அவர்களே!! உங்களது மகத்தான அச்செயற்பாடுகளை முழு உலக முஸ்லிம்கள் சார்பாகவும் இன்றைய ஜும்ஆத் தினத்திலும் நினைவு கூர்ந்து, உங்களைப் பாராட்டுகின்றேன். இலங்கை முஸ்லிம்கள் உங்களை ஒருநாளும் மறக்கவே மாட்டார்கள்* எனவும் விழித்துக் கூறினார்.
அத்தோடு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்காகவும் பிரார்த்திக்கின்றேன் என மேலும் தனது உரையில் குறிப்பிட்டார்.
அத்தோடு, கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் காத்திரமான நிகழ்ச்சித் திட்டங்களை வரவேற்பதோடு, இதற்காக தங்களது உயிரையே பணயம் வைத்து பாடுபடும் முப்படை, பொலிஸ் , வைத்தியர்கள், தாதிகள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் முஸ்லிம் சமூகம் சார்பாக, தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
