ஏ.எஸ்.எம்.ஜாவித்-
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோயை முழமையாக கட்டுப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த வகையில் இந்த நோய் தொற்றியுள்ள நோயாளிகளை சுகப்படுத்தி அவர்களை நோயிலிருந்து மீட்டெடுக்கும் பாரிய பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தலை நகர் கொழும்பில் கொரோனா நோயாளிகளை பாராமரிக்கும் வைத்தியசாலைகளாக கொழும்பு ஐ.டி.எச். தேசிய தொற்று நோயியல் நிறுவன வைத்தியசாலையும், முல்லேரியாவில் உள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்திய சாலையும் காணப்படுகின்றது.
இந்த இரண்டு வைத்தியசாலைகளிலும் கடமை புரியும் வைத்தியர்கள், தாதிமார்கள் உள்ளிட்ட சகல அலுவலர்களும் இரவு, பகல் என்று பாராது முழு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதை கருத்திற் கொண்டு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை முஸ்லிம் சமுக அமைப்பு ( SRI LANKA MUSLIM CIVIL SOCIETY)பெறுமதியான சுமார் 1500 உலர் உணவுப் பொதிகளை வழங்கியுள்ளது.
உலர் உணவுப் பொதிகளை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று மருதானையில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் வைத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இலங்கை முஸ்லிம் சமுக அமைப்பின் தலைவர் சுரேஸ் ஹாசிம், திட்ட முகாமையாளர் றிஷான் நசீர் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கையளித்தனர்.
அதன் பின்னர் அமைப்பினர் உலர் உணவுப் பொதிகளை ஐ.டி.எச். தேசிய தொற்று நோயியல் நிறுவன வைத்தியசாலையில் கடமை புரியும் அலுவலர்களுக்கு வழங்கவதற்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க மற்றும் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சிந்த சூரியாராச்சிடமும் கையளித்தனர்.
முல்லேரியாவில் உள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்திய சாலை ஊழியர்களுக்கான பொதிகளை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரத்ன மற்றும் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் முடித பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளிடம் கையளித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சுகாதாரத் துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த நிவாரணப் பொருட்களை வழங்கியதன் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் பேரன்பு வெளிப்படுவதாக தெரிவித்தார். உயிரைப் பனயம் வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஐ.டி.எச் மற்றும் முல்லேரியா வைத்தியசாலையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நோயாளர்களை குணப்படுத்துவதற்கு உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள். ஊழியர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் பேரன்பைக் காண்பித்துள்ளீர்கள் என்று தெரிவித்த அமைச்சர். பெறுமதியான இந்த பொருட்களை வழங்கியமைக்கு அமைப்பினருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.