சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, கள்ளு மற்றும் அனுமதியின்றி சாராய விற்பனை செய்த 5 நபர்களை அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஐ.ஜே.ஏ.பெரேரா தெரிவித்தார்.
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பத்தலாவ பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை நேற்று இரவு 10.30 மணியளவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடமிருந்து 2250 மில்லிலீற்றர் கசிப்பும் கசிப்பு தயாரிப்பதற்காக தயார் நிலையில் இருந்த 25 லீற்றர் கோடாவும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை கினிகத்தேனை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சாராய விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்களும் சட்டவிரோத கள்ளு விற்பனை செய்த நபர் ஒருவருமாக மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மதுபான விற்பனை நிலையங்களை மூடியதைத் தொடர்ந்து மலையகப்பகுதிகளில் கசிப்பு மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.