பொதுத்தேர்தலின் பின்னர் அரச சேவையின் முக்கிய பதவிகளுக்கு 60 ராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு முயற்சி எடுக்கப்படுவதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது. இதனால் நாடு ராணுவ ஆட்சியை நோக்கிப் பயணிக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக UNPயின் பாரளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
ராணுவ அதிகாரிகள் மீது எமது அரசாங்கம் மதிப்பு வைத்திருந்தது. அவர்களின் கௌரவம் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியின்கீழ் ராணுவத்தின் கௌரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளால் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைகளை ராணுவம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த நிலைமை ஏனைய துறைகளுக்கும் வந்துவிடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சுகளின் செயலாளர்கள், சுங்க திணைக்கள பிரதானி என சிவில் சேவைகளுக்கு தொடர்ச்சியாக ராணுவ அதிகாரிகளின் நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 20 ராணுவ அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் அதிபர் மற்றும் GA ஆகிய பதவிகளுக்குகூட ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்தலின் பின்னர் அரச சேவையின் முக்கிய பதவிகளுக்கு 60 ராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு முயற்சி எடுக்கப்படுவதாகவும் எமக்கு அறியக்கிடைத்துள்ளது.
நாம் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் சேவையை மதிக்கின்றோம். அவர்கள் நாட்டுக்காக அளப்பரிய பணியை ஆற்றியுள்ளனர். எனினும், அவர்களுக்குரிய பணிகளுக்கு அப்பால் செயலாற்றுமாறு பணிப்புரை விடுக்கப்படுவதே சிக்கலுக்குரிய விடயமாகும்.
ஜனாதிபதி தமது பணிகளை செய்து கொள்வதற்காக ராணுவத்துடன் செல்லும் பயணமானது, நாடு ராணுவ ஆட்சியை நோக்கி சென்றுவிடுமோ என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது" என்றார்.