நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்துவரும் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கமைய, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில் கலை கலாசார பீட மாணவி லக்சிகா 1147 வாக்குகளைப் பெற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இத்தேர்தலில் கலைகலாச்சார பீடத்திலிருந்து செல்வி. பரிமளராஜ் லக்சிகா மற்றும் செல்வன். அக்பர் அலி முகம்மது அஸாம், விஞ்ஞான பீடத்திலிருந்து செல்வன். மணிசேகரன் பவித்ரன் மற்றும் செல்வன். வீரசேகரகே ஷமித் மதுஷங்க அத்துடன் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தைச் சேர்ந்த மாணவன் செல்வன். சத்தியநாதன் கிளின்ரன் ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் லக்சிகா - 1147, கிளின்ரன் - 388, மதுசங்க - 292, பவித்ரன் - 285, அஸாம் - 73 வாக்குகளைப் பெற்றுள்ளனர். இதில் தமது பீட மாணவிக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு கலை கலாசார பீட மாணவன் அஸாம் விட்டுக் கொடுப்புச் செய்து போட்டியிலிருந்து விலகியதாக பிந்திய தகவல்களினூடாக அறிய முடிகின்றது.
வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வளாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிலையத்தில் நடைபெற்ற இத்தேர்தல் கணணி வாக்குப் பதிவு இயந்திரத்தின் ஊடாக நடைபெற்றது.
தேர்தல் நடவடிக்கைகள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச செயலக அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் விவகாரப் பிரிவு, மாணவர் ஒத்துழைப்பு மற்றும் நலன்புரி பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன.
இதேதேர்தலினூடாக,
கொழும்பு பல்கலைக்கழகம் - 2
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் - 2
மொரட்டுவ பல்கலைக்கழகம் - 2
திறந்த பல்கலைக்கழகம் - 1
கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் -1
இலங்கை சட்டக் கல்லூரி - 1
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) -1
தேசிய வியாபார முகாமைத்துவ பாடசாலை (NSBM) - 1
தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகம் (NIBM) -1
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் - 1
இலங்கை வாழ்க்கைதொழில் தொழிநுட்பவியல் பல்கலைக்கழகம் - 1
இலங்கை தொழிநுட்ப பல்கலைக்கழகம் - 1
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் - 1
றுகுணு பல்கலைக்கழகம் - 2
கிழக்கு பல்கலைக்கழகம் -1
தென்கிழக்கு பல்கலைக்கழகம் - 1
ரஜரட்ட பல்கலைக்கழகம் - 1
சப்ரகமுவ பல்கலைக்கழகம் - 1
வயம்ப பல்கலைக்கழகம் - 1
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் - 1
பேராதெனிய பல்கலைக்கழகம் - 2
களனி பல்கலைக்கழகம் - 2
என மொத்தமாக 28 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
கடந்த காலங்களில் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் இருந்து மாறுபட்டு, இந்த வருடம் பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவர்களையும் உள்வாங்கி உள்ளமை தற்போதைய அரசாங்கத்தின் சிறப்பான செயற்பாடாக அமைந்துள்ளமை விஷேட அம்சமாகும்.
