நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று (20.03.2020) மாலையுடன் மலையகத்திலுள்ள பிரதான நகரங்கள் முற்றாக முடங்கின.
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன.
பாதுகாப்பு தரப்பினரின் பணிப்புரைகளை பின்பற்றி, மக்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் பிரதான நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
நுவரெலியா மாவட்டத்தை பொருத்தமட்டில் அட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோர்வூட், வட்டவளை, கினிகத்தேனை, நுவரெலியா, இராகலை, வலப்பனை, நல்லத்தண்ணி, நோட்டன் பிரிட்ஜ், திம்புள்ள - பத்தன, பூண்டுலோயா மற்றும் கொத்மலை, ஹங்குராங்கெத்த ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகரங்களில் ஊரங்கு சட்டம் முழுமையாக பின்பற்றப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
மூன்று நாட்களுக்கு பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும் என நேற்று (20.03.2020) அறிவிக்கப்பட்டதையடுத்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்து, தொடரூந்து நிலையங்களிலும் மக்கள் குவிந்தனர். இதனால் 6 மணி தாண்டியும் நகரங்கள் பரபரப்பாகவே காணப்பட்டன.
எனினும், இன்றைய தினம் (21.03.2020) பொலிஸ் ஊரடங்கு சட்டத்தின் போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகளை முழுமையாக பின்பற்றப்படுவதை காணமுடிந்தது. அத்துடன், பொலிஸாரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அதேவேளை, அட்டன் நகரில் இன்றைய தினம் (21.03.2020) அட்டன் நகரம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கிருமி ஒழிப்பு நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படும் மருத்துவம், மின்சாரம், நீர்வழங்கல் ஆகிய துறைகளுடன் தொடர்புடைய பணியாளர்கள் இன்றைய தினம் பணியில் ஈடுபட்டிருந்தனர். வைத்தியசாலைகள் இயங்கினாலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
பொலிஸ் ஊடரங்குச்சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.