வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் என்றவகையில் நீர்வை பொன்னையன் அவர்களது குடும்பத்திற்கு அனுப்பிவைத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அச் செய்தியில் மேலும், வலிகாமம் கிழக்கில் மண்ணின் உணர்வுடன் தன் தொழிலைக்கூட உதறி எறிந்துவிட்டு அரை நூற்றாண்டுகளாக முற்போக்கு இலக்கியவாதியாக இடதுசாரி அரசியல் கொள்கையினை முன்னெடுத்த ஓர் போராளியாக களமாடியவர் நீர்வை பொன்னையன். அவரது சிறுகதைகளாக இருக்கலாம், நாட்டார் கதைகளாக இருக்கலாம், இலக்கியக் கட்டுரைகளாக இருக்கலாம் அவை அனைத்தும் தொழிலாளர் விவசாயிகள், உழைக்கும் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும் விடுதலையினையும் வலியுறுத்தியதாகவே அமைந்தன.
வலி கிழக்கின் புகழ்பூத்த கல்லூரிகளில் ஒன்றான அத்தியார் இந்துக்கல்லூரிகற்று இந்தியாவில் உள்ள கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலைமானி பட்டத்தினை அன்றைய காலகட்டத்தில் அவர் பெற்றுள்ளார். கல்விக்குப் பின் இலங்கைத்திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் சிறிது காலம் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியபோதும் மக்கள் துன்பங்களை வெளிப்படுத்துவதற்காக பதவிகளை துறந்து வாழ்ந்தவர்.
1957 ஆம் ஆண்டு முதல் ஈழநாடு பத்திரிகை வாயிலாக தனது நெடும் பயணத்தை ஆரம்பித்தார். அவரது அறிமுக சிறுகதையான மேடும் பள்ளமும் என்ற சிறுகதை பற்றி நேர்காணல் ஒன்றில் அவர் பதிலளிக்கையில் மன உறுதியுடன் இலாவகமாக 'ஆடுமேய்க்கும் ஒருவரின் கதையைத்தான் தான் எழுதினேன். அது என்னுடைய மண்ணின் கதை' என்று பதிலளிக்கும் போது நீர்வேலி மண்ணின் செம்பாட்டு உறுதி புலப்பட்டது. அவரது இழப்பிலும் அவரது தெளிவான தொனி நினைவுகளில் நிழலாடுகின்றது.
நீர்வை பொன்னையன் அவர்கள் வலிகாமம் கிழக்கிற்கு உரிய புலமை சொத்து மாத்திரமல்ல. எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகி;ன்றார்களோ அவர்களின் பாதிப்பிற்காக எதிர்த்து சமதர்மத்தினை வலியுறுத்தி உழைத்த பெருந்தகை ஆவார். அவரது இழப்பின் துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம். வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அஞ்சலிக்கின்றது. இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளரின் அஞ்சலிக்குறிப்பில் உள்ளது.
