ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அண்மையில் காலமான சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான மர்ஹும் எப்.எம். பைறூஸ் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொருளாளருமான மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோரின் நினைவுச் சொற்பொழிவுகள் நாளை 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, கொழும்பு 10, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், உலக அறிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் மற்றும் டெய்லி மிரர் ஆலோசக ஆசிரியர் எம்.எஸ்.எம். ஐயூப் ஆகியோர் விசேட பேச்சாளர்களாகக் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்வில் இரு ஊடகவியலாளர்களதும் குடும்பத்தினர் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவர்கள் நினைவாக புலமைப்பரிசில்களும், வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.
மர்ஹும் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கடந்த (19.01.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
மர்ஹும் எப்.எம்.பைரூஸ் கடந்த 2019 ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இந்நிகழ்வில் எவரும் கலந்து கொள்ளலாம் என திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.