தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறினால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்குமென்றும், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் 1,300 கோடிக்கு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக நிலுவையாக ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக குறை நிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன இன்று காலை தெரிவித்துள்ளார்.
இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனைத் சுட்டிக்காட்டியிருந்தார்.
தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான கொடுப்பனவு தொகை இந்த குறை நிரப்பு பிரேரணையில் உள்ளடங்கியுள்ளதா? என்று அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள்
கேட்டபோது:-
தோட்டங்கள் அரசாங்கத்துக்கே சொந்தமானவை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதனை தோட்ட நிர்வாகங்கள் நிறைவேற்ற தவறினால் தோட்டங்களை பொறுப்பேற்று அதனை இளைஞர்களுக்கு பிரித்து கொடுக்கப்படுமென்றும் ,தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.