வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீன்
ஆதார வைத்தியசாலை
அக்கரைப்பற்று
இன்றைய விஞ்ஞான உலகுக்கு பெரும் சவால் விடுக்கின்ற ஒரு நோயாக தொற்றா நோய் காணப்படுகின்றது. இது எதனால் ஏற்படுகின்றது? இதற்கான காரணம் என்ன?
விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப இன்றைய நவீன காலகட்டத்தில் தொற்றா நோய்களும் அதிகரித்துச் செல்வதை உலகில் மட்டுமல்லாது இலங்கையிலும் காணமுடிகின்றது. இது உலகமயமாக்கல் காரணமாக ஏற்பட்ட நகரமயமாக்கத்தின் மூலம் ஏற்பட்டதாகும். குறிப்பாக சொல்லப்போனால் கைத்தொழில் மயமாதல், புலம்பெயர்வு அதிகரித்தமை, வருமான அதிகரிப்பு போன்றவைகளுடன் ஊடகங்களின் செல்வாக்கு மற்றும் வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற விடயங்கள்தான் இந்த தொற்றா நோய்க்கு வழி வகுக்கின்றது.
தொற்று நோய்கள் குறித்து மக்கள் இன்று பீதிகொள்கின்ற போதிலும், தொற்றல்லாத நோய்கள் பற்றி இன்று மக்கள் குறைவான அவதானத்தையே கொண்டுள்ளதால் அவர்கள் மத்தியில் மிகவும் வேகமாகப் பரவி பயங்கர விளைவுகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. தொற்றா நோய்கள் தோற்றுவிக்கப்படுவதற்கான காரணம் மனிதர்களின் செயற்பாடுகள் என்பதே இதன் மறைமுகமான உண்மையாகும்.
இலங்கை மக்களின் ஆயுட்காலம் 74. 9 வருடங்களாக இருந்த போதிலும் ஆரோக்கியமான ஆயுட்காலம் 67 வருடங்கள்தான் அமைவதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த 67 வருட ஆயுட்காலத்துக்குள் மனிதனை ஆட்டிப்படைக்கின்ற ஒரு நோயாக தொற்றாநோய் இருக்கின்றது.
இந்த தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைவது புகையிலை பாவனை, மது பாவனை, பொருத்தமற்ற பிழையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியற்ற சோர்வு மற்றும் இவற்றின் காரணமாக ஏற்படுகின்ற அதீத உடற்பருமன் என்பன இதன் பிரதான காரணங்களாக காணப்படுகின்றன.
இவை தவிர அதிகமான உப்பின் பாவனை, சூழல் மற்றும் சூழலின் வளி மாசடைதல் போன்ற ஏனைய விடயங்களும் இத்தொற்றா நோய்களுக்கு காரணிகளாக அமைகின்றன என்றும் குறிப்பிடலாம்.
எமது நாட்டில் எவ்வகையான தொற்றா நோய்கள் காணப்படுகின்றன? அதில் பெரும் தாக்கம் செலுத்துகின்ற நோய் எது?
இருதய நோய்கள், இரத்த அழுத்தம் (heart diseases hypertension), பக்கவாதம் (stroke), புற்றுநோய்கள் (cancers), நீரிழிவு (diabetes), சுவாச நோய்கள், சிறுநீரக நோய்கள் என்பன எமது நாட்டில் காணப்படுகின்ற தொற்றா நோய்களாகும்.
இவை வயது வந்தவர்களையே பாதித்து வந்தது. ஆனால் இன்று பாடசாலை மாணவர்களிடையேயும் கூட இத்தொற்றா நோய்கள் அதிகரித்து வருகின்றது. இவ்விடயம் மிகவும் அபாயகரமானதாகவும், கவலைக்குரிய விடயமாகவும் இருக்கின்றது. உதாரணமாக நீரிழிவு நோயை குறிப்பிடலாம். பாடசாலை மாணவர்களில் 50 வீதமானவர்கள் நீரிழிவின் ஆரம்ப நிலையில் இருந்து கொண்டிருக்கின்றனர். இத்ற்கு பிரதான காரணங்களாக அவர்களது பிழையான உணவு முறை , அதன் காரணமாக உடற்பருமன் அதிகரித்தல் என்பன காரணமாகின்றன.
தற்போது இலங்கை சனத்தொகையில் ¼ பங்கினர் நீரிழிவுக்குப் பலியாகியிருக்கின்றார்கள். இது 2050 ஆம் ஆண்டாகும்போது நாட்டில் பாதிப்பேர் நீரிழிவால் பாதிப்புக்குள்ளாவர் என்று இலங்கை சுகாதார பகுதியினர் அபாய எச்சரிக்கை அறிப்பும் விடுத்துக்கொண்டிருக்கின்றது.
இந்த நோய் எமக்கு இருக்கின்றதா என்பதை நாம் எவ்வாறு அறிந்துகொள்வது?
எமக்கு தொடர்ச்சியான சிறுநீர்போக்கு குறிப்பாக இரவில் அதிகம் சிறுநீர் வெளியாகுதல், அசாதாரணமான தாகம் அல்லது நா வரட்சி,உ டல் நிறைக்குறைவு போன்ற அறிகுறிகளுடன் ஆறாத காயங்கள், பாதங்கள் எரிவதைப் போல உணர்தல் போன்ற அறிகுறிகளும் எமது உடலில் தென்படுவது மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறான அறிகுறிகள் எமக்கு தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடி அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு உங்களை பரிசோதிக்க வேண்டும். இதற்கான வசதிகள் எமது எல்லா வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்றன. இது குறித்து சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் அவதானமாக விளங்கிக்கொண்டு செயற்படுவதுடன், தொற்றா நோய்கள் தொடர்பில் தௌிவான விளக்கம் பெற்றவர்களாக நாம் இருக்கவேண்டும் .அப்போதுதான் எம்மையும், எமது எதிர்கால சந்ததியினரையும் நாம் பாதுகாத்துக்கொள்ளலாம்.
இத்தொற்றா நோய்கள் மூலம் எமக்கு ஏற்படும் இழப்புக்கள் பற்றி சொல்ல முடியுமா?
சுமார் 80 வீதமான மரணங்கள் தொற்றா நோய்கள் மூலமாகவே நடைபெறுவதாக இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளது. அதில் 34 வீதமான மரணங்கள் இதய நோய்களினால் ஏற்படுகிறது. இதுதவிர புற்றுநோய், நாட்பட்ட சுவாச நோய்கள், நீரிழிவு என்பன இம்மரணத்திற்கு பிரதான காரணமாக அமைகின்றன. இம்மரணங்களில் 45 வீதமானவை 70 வயதுக்கு குறைந்தவர்களுக்கு ஏற்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் 30 தொடக்கம் 69 வயதுக்குட்பட்ட 15 மில்லியன் மக்கள் தொற்றா நோயின் மூலமாக இறக்கின்றார்கள். இத்தொற்றா நோய்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திலும் ஏனைய விடயங்களிலும் ஒரு அபாயகரமான தாக்கத்தையும், இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது.
எமது நாட்டில் இருக்கின்ற வயது வந்த ஆண்களில் 03 பேரில் ஒருவர் புகையிலைப் பாவனை உள்ளவராக இருப்பதோடு மூவரில் ஒருவர் உயர் குருதி அழுத்தம் (பிரஷர்) உள்ளவராகவும், பெண்களில் மூன்றில் ஒருவர் அதீத உடல் நிறையையும் கொண்டுள்ளனர். அத்துடன் உப்பின் பாவனை அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக காணப்படுகின்றது. இதனால் நீண்ட ஆயுட்காலம் மற்றும் குறைந்த இனப்பெருக்க தன்மை என்பனவும் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது
இந்த தொற்றா நோய்களில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி? அதற்கான வழிமுறைகள் யாது?
தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவது எமது கைகளிலேயே தங்கியுள்ளத எனவே அதிலிருந்து நாம் பாதுகாப்பு பெறுவதாக இருந்தாலும் சரி, அதனை கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் சரி, முதலில் எம்மை அதற்கு தயார்படுத்திக்கொண்டு , கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முறையான உணவுப் பழக்கம், தொடரான உடற்பயிற்சி என்பவற்றுக்குள் நாம் வாழ வழி வகுத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் தொற்றாநோய்களின் தொற்றிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
அதுமாத்திரமல்லாமல், புகைத்தல் பாவனையில் இருந்து முற்றாக விடுபடுதல், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உரிய நேரத்துக்கு உற்கொள்ளுதல், நாளொன்றுக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தல், மது பாவனையில் இருந்து முற்றாக நீங்குதல், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்குதல் போன்றவற்றை நாம் முறையாக பேணி வரவேண்டும்.
இதை முறையாக பேணி வராமல் உதாசீனம் செய்துவிட்டு, பின்னர் அவஸ்தைபடுவதையே நாம் வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம். எம்மில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரமால் அதில் பாதுகாப்புத் தேட முனைவதென்பது ஒரு வேடிக்கையானதும், நகைச் சுவையான விடயமாகும்.
நீரிழிவை இல்லாதொழிக்க உரிய மருந்துகள் இதுவரையும் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நோய் இருப்பது தெரிய வந்ததன் பின்னர், நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான மருந்துகள் மாத்திரமே இருக்கின்றது. மருந்துகள் மூலமாகவும், வைத்தியர்கள் மூலமாகவும் இதை குனப்படுத்த முடியாது. ஆனால் அந்த நோய்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அதனை இல்லாமல் செய்வதும் தொடராக் கொண்டு செல்வதும் அவரவர்களின் முயற்சில்தான் இருக்கின்றது.
கடந்த காலங்களில் முழு உடல் பரிசோதனை வசதிகள் அதிகளவில் இல்லை. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரி (MOH) காரியாலயங்கள் இதற்காக விஷேட கிளினிக்குகளை கொண்டுள்ளன. அதுதொடர்பான விழிப்புணர்வும், மருத்துவ வசதிகளும் இவற்றில் வழங்கப்படுகின்றன. இருப்பினும் குறிப்பிட்ட சிலர்தான் இதனைப் பயன்படுத்துகின்றனர். இளம் வயதினர் அத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை. இதை நாம் செய்துகொள்வதன் மூலம் தொற்றா நோய்களின் பிடியிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
