இலங்கையில் இருக்கின்ற மாணவச் செல்வங்களின் போஷாக்கு மட்டம் அவர்களுடைய கற்றல் விடயங்களில் மிகக் கூடுதலான தாக்கத்தை செலுத்துகிறது என்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மெளலான தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்குணவு வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (6) ஓட்டமாவடி – மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
மாணவர்கள் மத்தியில் போஷாக்கு மட்டம் குறைவடைவதன் காரணமாக மாணவர்களின் கல்வி அடைவுகளில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படலாம் என்பதனைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசு மிக நீண்ட காலமாக பல்வேறு வடிவங்களில் மாணவர்களின் போஷாக்கை அதிகரித்துச் செல்வதற்கான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.
எனவே மாணவர்களுக்கு சத்துள்ள உணவுகளை வழங்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். இன்று நம்மில் பலர் சந்தோசமாக விரும்பி உண்ணுகின்ற உணவாக பரோட்டா காணப்படுகின்றது அதைத்தான் எங்களுடைய பிள்ளைகளுக்கும் வழங்கி வருகின்றோம். அதனை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். என்னைப்பொறுத்தவரை உலகத்திலே மிகமோசமான உணவாக பரோட்டாதான் காணப்படுகின்றது. அது சமிபாட்டில் அநேகமான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது.
எனவே பெரியவர்கள் உண்ணுகின்ற உணவுகளில் எண்ணெய்ப் பதார்த்தங்களைக் குறைக்கலாம். ஆனால் இந்தச் சின்னஞ்சிறுசுகளுடைய உணவுகளில் நீங்கள் அதனைக் குறைக்க தேவையில்லை. எண்ணெய்ப் பதார்த்த உணவுகளை நீங்கள் குறைக்கின்ற போது அவர்களுடைய அழகு சில வேளைகளில் குறைவடைவதற்கான வாய்ப்பு உள்ளது.
மாணவர்களுக்கு தேங்காய், எண்ணெய் கலந்த உணவுகளை கொடுத்துத்தான் ஆகவேண்டும். எங்களுக்கு வருத்தம் வருகின்றது என்பதற்காக அதை நாங்கள் மாணவர்களுக்கு வழங்காமல் இருக்கக்கூடாது. மாணவர்கள் வளர்ப்பு நிறைந்தவர்களாக மாறுவதற்கு இந்தவகை உணவுகள் கட்டாயம் தேவைப்படுகிறது.
அதனால்தான் அவர்களுக்கு வறுத்த, தாளித்த உணவுகள் கொடுக்க பணிக்கப்படுகின்றன ஒரு பிள்ளைக்கு குறைந்தது ஒரு நாளைக்கு காலை உணவு கொடுக்கும் போது பத்து கிராம் எண்ணெய் சேர்ந்த உணவுகள் கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.