கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட எல்லையினுள் பிரவேசிக்கும் வாகனங்கள் தரித்து நிற்பதற்காக அறவிடப்படும் கட்டணம் தொடர்பில் வாகனச் சொந்தக்காரர்கள் மற்றும் சாரதிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கவனத்தில் கொண்டு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநகர சபை விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை எல்லைப் பிரதேசம் 04 வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு பகுதியிலும் வியாபார நோக்கத்திற்கல்லாத லொறி மற்றும் டிப்பர் வாகனங்களுக்கு 100 ரூபாவும், வியாபார நோக்கத்திற்குரிய லொறி மற்றும் டிப்பர் வாகனங்களுக்கு 200 ரூபாவும், கார், வேன் மற்றும் அதனையொத்த வாகனங்களுக்கு 50 ரூபாவும் முச்சக்கர வண்டிகளுக்கு 20 ரூபாவும் அறவிடப்படும்.
இதற்காக வழங்கப்படுகின்ற பற்றுச்சீட்டின் பின்பகுதியில் மாநகர சபையின் இலச்சினை உள்ளிட்ட இறப்பர் முத்திரை பதிக்கப்பட்டிருப்பதுடன் கணக்காளரின் கையொப்பமும் இடப்பட்டிருக்கும். அத்துடன் பற்றுச்சீட்டில் தொடரிலக்கமும் திகதியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட ஒரு வலயத்திலுள்ள ஓரிடத்தில் கட்டணம் செலுத்தினால், அதனைத் தொடர்ந்து மற்றொரு வலயத்திலுள்ள இன்னொரிடத்தில் தரிக்கும்போது கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அன்றைய தினத்தில் கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட எந்தவொரு வலயத்திலுள்ள இடத்திற்கும் அப்பற்றுச்சீட்டு செல்லுபடியாகும்.
வாகனத் தரிப்பிடக் கட்டணம் அறவிடுவோர் அடையாள அட்டை அணிந்திருப்பதுடன் அவர்களது மேலங்கியில் மாநகர சபையின் இலச்சினை காணப்படும்.
மேற்படி விதிமுறைகள் குறித்து வாகனத் தரிப்பிடங்களை குத்தகைக்கு பெற்று, நடாத்துவோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இவற்றை மீறி எவராவது கட்டணம் அறவிட முற்பட்டால் வாகனச் சொந்தக்காரர்கள் மற்றும் சாரதிகள் கல்முனை மாநகர சபைக்கோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.