சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், இனவாத ரீதியில் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியல் செய்ய முற்பட்டால், சிறுபான்மைச் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதனை நாம் மறந்துவிடக் கூடாது என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,
நாம் தான் கிங் மேக்கர்கள் என, சிறு பான்மைச் சமூகத் தலைவர்கள் தொடர்ந்தும் கூறி வந்துள்ளனர். இது வழமையானதாகவே காணப்பட்டது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை பெளத்த சிங்கள மக்கள், மிகவும் ஆழமாகவே சிந்தித்தனர். இதற்கு முடிவு கட்ட ஓரணியில் திரண்டனர். சிறுபான்மைத் தரப்புக்களின் இலக்கை நோக்கிக் குறி வைத்து தவிடுபொடியாக்கி விட்டனர். ஆனால், வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் கோட்டாபய ராஜபக்ஷ்வை முற்று முழுதாகவே நிராகரித்தனர். இதனால் என்ன நடைபெற்றுள்ளது என்பதை, சிறுபான்மைச் சமூகம் குறிப்பாக முஸ்லிம் சமூகம் உணர்ந்திருப்பார்கள் என்பதை, நான் இங்கு சொல்லாமலேயே புரிந்திருக்கும்.
எனவே, முஸ்லிம் சமூகம் இனிமேலாவது சிந்திக்க வேண்டும். சுய நல அரசியல் தலைவர்களின் பின்னால் அணி திரளாமல் சுயமாகச் சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும். அத்துடன், இந்த முஸ்லிம் தலைமைகளும் இனிமேல் சிந்திக்க வேண்டும். அவர்கள் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் அரசியல் செய்ய முற்படக் கூடாது.
சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், இனவாத ரீதியில் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால், சிறுபான்மைச் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒற்றுமையுடன் "நாம் இலங்கையர்" என்ற ரீதியில் எமது அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும். இதேவேளை, தனது சமூகத்தின் கெளரவம் பாதிக்கப்படுவதற்கு இந்த பைஸர் முஸ்தபா ஒருபோதும் துணை போகப் போவதில்லை என்பதையும் இங்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
