இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உயர்தர சர்வதேச சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தமைக்காக விரிவுரையாளர்களுக்கான பல்கலைக்கழக மூதவையினால் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக ஆய்வு மற்றும் வெளியீட்டு மதிப்பீட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் திருமதி எப்.ஹன்சியா அப்துல் ரஊப் தலைமையில் பல்கலைக்கழக மூதவை கேட்போர் கூடத்தில் அண்மையில்; நடைபெற்ற இந்த வரலாற்று நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்து கொண்டு விருதுக்கான சான்றிதழ் களை வழங்கி வைத்தார்.
உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்களின் ஆலோசனைக்கமைவாக பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் உயர்தர ஆய்வுகளில் ஈடுபடவும் அவ் ஆய்வு முடிவுகளை தரம் வாய்ந்த சஞ்சிகைகளில் வெளியிடுவதனூடாக அறிவைப் பரப்புவதையும் ஊக்குவிக்கும் நோக்கில் ' உயர்தர வெளியீடுகளுக்கான மூதவை விருது' (Senate Award for High Impact Publications) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக சர்வதேச சிறந்த உயர் தரத்திலான ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச சஞ்சிகைக்கு சமர்ப்பித்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.முஸ்தபா, கலை, கலாசார பீடத்தின் அரசியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பசீல், சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எம்.ஐ.எம்.ஹிலால், கலாநிதி கே.எம்.முபாரக், விரிவுரையாளர்களான திருமதி ஜெம்ஸியா பேகம், திருமதி எம்.பாத்திமா வஸீமா ஆகியோர்களுக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் , உட்பட மூதவை உறுப்பினர்கள் பீடாதிபதிகள், பகுதித் தலைவர்கள் , நிருவாக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.










