நூல்களை அச்சிடும்போதே அதன் முதல் பிரதியை புரவலருக்கே வழங்கவேண்டுமென எல்லாப்படைப்பாளிகளும் தீர்மானித்துவிடுகின்றார்கள்.
இந்தவகையில் நூல்களின் முதற்பிரதிகளை 1994ம் ஆண்டிலிருந்து வாங்க ஆரம்பித்த புரவலர் ஹாசிம் உமர் இலங்கையில் மட்டுமின்றி தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, துபாய் என பல நாடுகளில் நடைபெற்ற நூல்வெளியீடுகளில் கலந்து கொண்டு முதற்பிரதிகளை பெற்றுள்ளார்.
ஆயிரம் முதல் பிரதிகளை வாங்கிய முதல்வர்- உலகிலேயே ஒரே புரவலர் என்ற சாதனையை நிலைநாட்ட வேண்டும் என்ற உத்வேகத்துடன் நூல்களை வாங்கிக் குவித்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள, புரவலரின் ஆயிரமாவது முதல் பிரதி எப்போது என எல்லோரும் எதிர்பார்த்திருந்த வேளையில் அந்த அதிர்ஷ்டம் கொழும்பு ஸாஹிராக் கல்லூரிக்கு கிடைத்திருக்கின்றது.
மேற்படி கல்லூரியின் சிங்கள மொழியில் சிரேஷ்ட பிரிவில் கல்வி பயிலும் குமர சஹன் நெத்மின எனும் மாணவன், இலங்கையின் சிங்கள கலாச்சார மரபுரிமைகளின் பாரம்பரியங்களை எதிர்கால சந்ததிக்கு கையளிக்கும் வகையில் எழுதியுள்ள “சிறகொடிந்த பறவை” எனும் காவியத்தின் முதற்பிரதியை வாங்குவதன்மூலம், ஆயிரமாவது முதற்பிரதியை பெற்றுக்கொண்ட புரவலர் என்ற புதிய வரலாறு படைக்கின்றார் தமிழ்த் தொண்டாளர் ஹாஷிம் உமர்.
இந்நிகழ்வு 30.11.2019 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஸாஹிராக் கல்லூரி வளாகத் திறந்தவெளி அரங்கில் கல்லூரி அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலைமையில் நடைபெறவுள்ளது.
