மதுரங்குளி கணமூலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கணமூலை ஒட்டு மொத்த மக்களும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான எஹ்யா ஆப்தீன் இவ்வாறான சம்பவங்களினால் எமது அரசியல் பயணத்தை தடுத்துவிடலாம் என பகற்கனவு காணுபவர்களுக்கு நல்ல பாடத்தை நாம் புகட்டுவோம் என்றும் கூறினார்.
கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் பைசல் மரிக்கார் தலைமையில் கனமூலையில் அமைந்துள்ள இல்லத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.
மேலும் கருத்துரைக்கையில் தெரிவிப்பதாவது –
தேர்தல் முடிவடைந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எமது கட்சியின் தேசிய தலைவர் கொண்தான்தீவில் இருந்து கணமூலை நோக்கி வருகைத்தந்த போது கனமூலையில் வைத்து சிலர் வீதியினை மறைத்து டயர்களை எதிர்த்து எமது பயணத்தை தடுக்க முற்பட்டனர்.நாம் எதிர்பாராத முறையில் இந்த சம்பவம் இடம் பெற்றது.
ஆனால் இங்கு நடந்த சம்பவத்தை சில ஊடகங்கள் வேறு முறையில் காண்பித்து சமூகங்களுக்கிடையில் மேலும் முறுகல் நிலையினை தோற்றுவிக்க விளைவதானது இந்த நாட்டில் வாழும் மக்கள் நன்கறிவார்கள் என்றும் அவர் கூறினார்.
ஒரு கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினருக்கு மக்களை சந்திப்பதற்கான ஜனநாயக உரிமை இல்லையென்ற நிலையில் தற்போதைய ஆட்சியின் பிற்பாடு சிலர் செயற்படுகின்றனர்.இதனை வன்மையாக நாம் கணடிப்பதுடன்,பிரதேச மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க வேண்டாம் என்று தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவாளர்களிடம் கேட்கவிரும்புகின்றேன்.
அதே வேளை வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் நிறைவுறாத நிலையில் அம்மக்கள் தமது உரிமையான வாக்கினை மன்னாருக்கு சென்று வழங்க வேண்டியுள்ளது.இது அவர்களுக்கு சிரமமானது எதிர்காலத்தில் இந்த சிரமம் தவிர்க்கபட வேண்டும் என்றும் யஹ்யா ஆப்தீன் இதன் போது கூறினார்.
நாங்கள் வாக்களித்தது ஒரு சிங்கள பௌத்தவரான சஜித் பிரேமதாசவுக்கு,ஆனால் சில ஊடகங்கள் முஸ்லிம்களையும்,தமிழர்களையும் பிழையான முறையில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டுகின்றது.
முந்தல் பொலீஸார் இது குறித்து பாராபட்சமற்ற விசாரணைகளை செய்ய வேண்டும் என கேட்கின்றேன்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பைசல் மரிக்கார்,எம்.ஆசிக் மற்றும் இளைஞர் அமைப்பாளர் இப்லால் அமீன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கறைப்பற்று மத்திய குழுவின் தலைவர் பஸ்லுர் ரஹ்மான் உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
