சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதாக, லிட்ரோ மற்றும் லாப் நிறுவனங்கள் அரசுக்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
தினமும் 75,000 கேஸ் சிலிண்டர்களைச் சந்தைக்கு விடும் லிட்ரோ நிறுவனம், அதனை ஒரு இலட்சமாக அதிகரித்து கேஸ் தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளது.
அத்துடன், தற்போது சந்தைக்கு விடும் லாப் கேஸ் சிலிண்டர்களை 35 வீதம் அதிகரிப்பதாகவும் லாப் நிறுவனம் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளது.
இந்த வாரத்திலிருந்து கேஸ் தட்டுப்பாடு முற்றாக நீக்கப்பட்டுவிடுமென்றும் அமைச்சர் ஹெரிசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்களுக்குப்போதுமான அளவு கேஸ் விநியோகிக்கக் கூடியவாறு தருவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை இன்னும் இரண்டொரு தினத்தில் நாட்டுக்குள் வந்துவிடும் என்றும் அமைச்சர் ஹெரிசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது லிட்ரோ நிறுவனம் தினமும் நாட்டுக்குள் 75,000 சிலிண்டர்களை விநியோகிக்கிறது. அதனை ஒரு இலட்சமாக அதிகரிப்பதுடன் இன்னும் இரண்டொரு தினத்தில் தங்கள் நிறுவனத்துக்கு 15,000 மெற்றிக் தொன் கேஸ் நாட்டுக்குள் கொண்டுவரப்படுமென லிட்ரோ நிறுவன விற்பனை பணிப்பாளர் ஜனக்க பத்திரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், 35 வீதம் தமது விநியோகத்தை அதிகரிக்கவுள்ளதாக லாப் கேஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சமிந்த எதிரிவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான கேஸ் தட்டுப்பாடு நிலவுவதைத் தடுக்கும் நோக்கில் 27,000 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை கையிருப்பில் வைத்திருக்கும் நடைமுறையைப் பின்பற்றவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கேஸ் விலை குறைப்பின் காரணமாக கேஸ் பாவனை அதிகரிப்பு, சவூதி அரேபிய பிராந்தியத்தில் ஏற்பட்ட தாக்குதல் நிலவரம் மற்றும் சீரற்ற கால நிலையால் கப்பல் போக்குவரத்தில் சிக்கல் போன்ற காரணிகளும், கேஸ் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணிகளாக அமைந்திருந்தன என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.