ஜனநாயக ஆட்சியென்பது இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் கருத்தியல் ரீதியான பெரும்பான்மையாகும். அதனால்தான் அமெரிக்காவில் ஒபாவும் லண்டன் மேயராக சாதிக்கானும் வரமுடிந்தது.
இலங்கையில் ஒரு ஜனாதிபதியோ, பிரதமரோ பெரும்பான்மையில் இருந்துதான் வரமுடியும். பெரும்பான்மை சமூகத்திற்குள் அவர் யார்? என்பதைத் தீர்மானிப்பதில் இதுவரை சிறுபான்மைக்கு ஒரு பங்கு இருந்து வந்தது. இத்தேர்தலில் அவரைத் தீர்மானிப்பதும் பெரும்பான்மை சமூகம் மட்டும்தான் என்பதை நிறுவுவதில் அவர்கள் “அண்ணளவாக” வெற்றிபெற்றுபெற்றுவிட்டார்கள். ( ஏன் அண்ணளவாக என்பது இறுதியில் புரியும்).
அதனை பதவியேற்பு விழாவில் ஜனாதிபதியும் தெரிவித்துவிட்டார்.
ஆட்சியாளர்களும் அவர்களே! ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பவர்களும் அவர்களே! என்ற விதியை கிட்டத்தட்ட எழுதிவிட்டார்கள். இது எதிர்கால அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் பாரதூரமானவையாக இருக்கலாம்.
இதை கொண்டாடுபவர்களில் நம்மவர்களும் இருக்கிறார்கள்; என்பது ஒரு விடயம். ஆதரித்தவர்கள் சரியோ, பிழையோ தாம் ஆதரித்தவர்களின் வெற்றியைக் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால், இன்று இவர்கள் புதிய விதியை உருவாக்க முனைவதுதான் விந்தையானது.
அதாவது, அவர் வெற்றிபெற்றதனால் அவர் சரியானவர். அவருக்கே எல்லோரும் வாக்களித்திருக்க வேண்டும்; என்பதாகும். மறுதிசையில் வாக்களித்தவர்களில் ஒரு சிலரும் ஓம், நாங்கள் தவறுதான் செய்துவிட்டோம்; என வருந்துவதாகத் தெரிகிறது.
இங்கு புரியாத அதிசயம் என்னவென்றால் “ பிழை” ஒன்று வெற்றியடைந்ததனால் அது “சரி”யாகிவிடுமா? “சரி” தோல்வியடைந்ததனால் “பிழை”யாகிவிடுமா? என்பதுதான்.
“ பிழை” வெற்றிபெற்றதால் “ சரி”யாகிவுடவும் முடியாது. “ சரி” தோல்வியடைந்ததால் “ பிழை”யாகிவிடவும் முடியாது. “சரி” சரிதான். “ பிழை” பிழைதான்.
இதில் முக்கியம் என்னவென்றால், அவர்கள் அந்தத் தரப்பை “ சரி” எனவும் இந்தத் தரப்பை “பிழை “ எனவும் தேர்தலுக்கு முன்பே கண்டவர்கள். அதன் மறுதலையை இந்தத் தரப்புக் கண்டவர்கள். அந்தக் கருத்தியலின் அடிப்படையில் ( அதாவது அவர்கள் முஸ்லிம்களுக்கு சிறந்தவர்கள்; என்பது)
இன்றும் இந்தத் தரப்பின் நிலைப்பாட்டை “ பிழை” காண்பதிலும் தவறில்லை; மற்றவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாதபோதிலும்கூட. ஏனெனில் அது தொடர்ச்சியாக அவர்களது நிலைப்பாடு.
அந்தத் தரப்பு வெற்றிபெற்றதனால் இந்தத் தரப்பின் நிலைப்பாடு பிழை என அவர்கள் விமர்சிப்பதும் சிலர் ‘ தவறுசெய்துவிட்டோமோ’ என அங்கலாய்ப்பதும் அறிவுடமை ஆகாது.
சிலவேளை, இந்தத் தரப்பு வெற்றிபெற்றிருந்தால் அவர்கள் ‘ மொட்டுத் தரப்பினர்தான்’ முஸ்லிம்களுக்கு நன்மையானவர்கள்’ என்ற நிலைப்பாடு பிழையானதென்பார்களா? நாங்கள்
எத்தனையாம் நூற்றாண்டில் வாழ்கின்றோம்?
இங்கு ஒரு விடயம் இருக்கின்றது. “பிழை” அதாவது முஸ்லிம்களுக்கு அதிகம் பாதகமானது; என முஸ்லிம்கள் கருதும் தரப்பை மொத்த சமூகமும் சேர்ந்தும் தோற்கடிக்கமுடியாது; என்பதுதான் யதார்த்தமானால் இன்றைய நாட்டின் சூழலைக் கருத்தில்கொண்டு அத்தரப்பை மொத்த சமூகமும் ஆதரிப்பது ஆரோக்கியமானதாகும்.
அதன்பொருள் அத்தரப்பு சரியென்பதல்ல. “பிழை”யின் வெற்றியைத் தடுக்கமுடியாதபோது அந்தக் காற்றலையில் நாமும் மிதந்துசெல்வது இன்றைய காலகட்டத்தில் நமது குறைந்தபட்ச பாதுகாப்புக்கான ஒரு முயற்சியாகும். அதற்காக எப்போதும் இதேபோன்றுதான் முடிவெடுக்க வேண்டுமென்று அதனை ஒரு விதியாக கொள்ளமுடியாது.
இந்த சூழலில் எந்தத் தரப்பு வெற்றிபெறும் என்ற விடயத்தில் நாம், நமது அரசியல்தலைமகள் சரியான முடிவெடுத்தார்களா? களசூழ்நிலையை சரியாக மதிப்பீடு செய்தார்களா? என்ற கேள்வி எழுகின்றது.
“ அந்த கேள்விக்குள் வெற்றியின் சாத்தியங்கள் “ குறித்த எனது ஆக்கம் ஒன்றும் சிலரின் விமர்சனப் பார்வைக்குள்ளாகி இருக்கின்றது.
எனது குறித்த ஆக்கத்தில் “ நாம் மறைவானவற்றை அறியும் ஆற்றல் உடையவர்கள் அல்ல. மனிதன் என்ற முறையில் சில அனுமானங்களை பகுத்தறிவு ரீதியாக செய்கிறோம்”; என்று அதில் குறிப்பிட்டிருந்தேன்.
இங்கு கேள்வி என்னவென்றால், நமது கணிப்பீட்டின் அடிப்படை சரியானதா? என்பதாகும். அதேநேரம், இன்று அந்தக் கணிப்பீட்டை பிழை காண்பவர்கள் தேர்தல்முடிவு அறிவிக்கமுன் ‘ இக்கணிப்பீடு இந்த அடிப்படையில் பிழையானது’; எனக் கூறியிருந்தால் அது நியாயமாக இருந்திருக்கும். முடிவைப் பார்த்துக் கணிப்பீட்டிற்கு மாற்றமானது; என்பதால் விமர்சிப்பதாக இருந்தால் அக்கணிப்பீட்டை சொன்னவர் வஹி வருபவராக இருக்கவேண்டும்; அணுவும் பிழைக்காமல் கூறுவதற்கு.
அக்கணிப்பீட்டை ஒரு தடவை மீள அலசுவோம்.
இத்தேர்தலில் முதல் ஐந்து வேட்பாளர் தவிர்த்து ( ஹிஸ்புல்லா உட்பட) சுமார் 2% வாக்குகள் ஏனைய 30 வேட்பாளர்களுக்கு அளிக்கப்படலாம்; என குறிப்பிட்டிருந்தோம். அதேபோல் 1.94%, அண்ணளவாக 2% வாக்குகள் வீணாக்கப்பட்டிருக்கின்றன.
எஞ்சிய 68% பௌத்த வாக்குகளில் 8% வீதத்தை ஜே வி பி யிற்கு வழங்கியிருந்தோம். இது பாரிய அளவில் பிழைத்திருக்கிறது. ஜே வி பி 3.16% வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது.
இங்கு நாம் எழுப்பவேண்டிய கேள்வி இந்த 8% வழங்கியதற்கான அடிப்படை பகுத்தறிவு ரீதியில் ஏற்புடையதா? என்பதாகும்.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பலவிதமான ஆதரவாளர்கள் இருப்பார்கள். என் பாட்டன் பச்சை, என் தந்தை பச்சை, நானும் பச்சை அல்லது நீலம் என்கின்ற ஒரு தரப்பினர். காலத்திற்கு காலம் கட்சியின் தலைமைத்துவம், செயற்பாடு போன்றவற்றால் தம்மை குறித்த காலத்திற்கு ஒரு கட்சியோடு அடையாளப் படுத்தும் இன்னொரு தரப்பினர்.
அடுத்த தரப்பினர் தேர்தல் காலத்தில் வேட்பாளர், கொள்கைகள், விஞ்ஞாபனம், மேடைப்பேச்சுக்கள் போன்றவற்றின் அடிப்படையில் ஆதரவளிப்பவர்கள். ஜே வி பி யைப் பொறுத்தவரை சற்று வித்தியாசமான சூழல்.
ஜே வி பி ஒரு கொள்கைவாத கட்சி. அவர்களது கொள்கைகளில் நமக்கு உடன்பாடு இருக்கலாம்; முரண்பாடு இருக்கலாம்; அது வேறுவிடயம். அவர்களது ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களது கொள்கைகளை ஏற்று கருத்தியல் ரீதியாக ஒன்றுபட்டவர்கள். சடுதியாக கட்சிமாறக்கூடியவர்கள் அல்ல.
அவ்வாறானவர்களே இவ்வளவு பாரிய விகிதத்தில் இனவாதத்தால் கவரப்படுவார்கள்; என்பது சாதாரணமாக எதிர்பார்க்கக்கூடியதா? சற்று சிந்தியுங்கள். ஜே வி பி கூட்டங்களுக்கு கூடிய மக்கள் கூட்டத்தை மனக்கண் முன் கொண்டுவாருங்கள். மட்டுமல்ல, கல்விமான்களைக்கொண்ட பல சிவில் அமைப்புகள் இம்முறை ஜே வி இற்கு ஆதரவளித்தையும் நினைத்துப்பாருங்கள்.
இந்தப் பின்னணியில் ஜே வி பி யிற்கு கடந்த உள்ளூராட்சித் தேர்தலைவிட (5.75%) ஒரு இரண்டு வீதம் மேலதிகமாக வழங்கியது பகுத்தறிவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? இல்லையா? இன்று விமர்சிக்கின்ற சில படித்தவர்கள் தர்க்கரீதியாக இந்த அடிப்படை பிழை என தேர்தலுக்கு முன் நியாயங்களை முன்வைக்க முடிந்ததா?
மொட்டையாக நிராகரிப்பது எல்லோருக்கும் முடியும் . ஜே வி பி இத்தேர்தலில் வெற்றிபெறும் என்று வெறுமனே சொன்னவர்களும் இருக்கின்றார்கள். ஆங்கிலத்தில் கூறுவார்கள்; When you make a claim you have to substantiate it. நீங்கள் ஒரு விடயத்தைக் கூறும்போது தரவுகளுடன் அதனை நிறுவ வேண்டும் அல்லது தர்க்க ரீதியாக அதனை நியாயப்படுத்த வேண்டும்.
தேர்தல் முடிவு கணிப்பீட்டிற்கு மாற்றமாக அமைந்தது; என்பதைக் கண்டபின் விமர்சிக்க முற்படுவது நியாயமா? என சிந்திக்க வேண்டும்.
மறைவானவற்றை அறிந்தவன் படைத்தவன் மாத்திரமே. கணிப்பீடு செய்கின்ற ஒருவர் மறைவானவற்றை அச்சொட்டாக கணித்துக் குறிப்பிட்டிருக்க வேண்டும்; என எதிர்பார்ப்பதும் விமர்சிப்பதும் எமது ஈமானின் பார்வையில் எவ்வாறு இருக்கும்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
இங்கு எழுப்பவேண்டிய ஒரேயொரு கேள்வி பகுத்தறிவின் அடிப்படையில் அக்கணிப்பீடு நியாயமானதாக, ஏற்புடையதாக இருந்ததா? என்பது மட்டுமேயாகும். இன்று விமர்சிக்கின்ற யாரும் அவ்வாறான தர்க்க ரீதியான மறுதலிப்பை தேர்தலுக்குமுன் முன்வைக்கவுமில்லை; மக்களை அவர்களது கருத்தை நோக்கி வழிகாட்டவும் இல்லை.
சிலர் இந்த மாவட்டத்தில் இந்த வேட்பாளர் இத்தனை லட்சத்து, இத்தனை ஆயிரத்து இத்தனை நூற்று, இத்தனை பத்து, இத்தனை ஒன்றுகளைப் பெறுவார்; என எதிர்வு கூறினார்கள். இது மனித அறிவிற்கு சாத்தியானதா?
சிலர் நினைக்கிறார்கள்; தேர்தல் கணிப்பீடு என்பது ஒரு கணிதக் கணிப்பீடு; என்று. இக்கணிப்பீட்டிற்கு அடிப்படைக் கணித அறிவும் அவசியம்; என்பது வேறு. ஆனால் இது ஒரு கணிதக்கணிப்பீடு அல்ல. ஒரு தேர்தல் சமயத்தில் குறித்த சூழ்நிலையில் எவ்வாறு மக்கள் சிந்திக்கிறார்கள், சிந்திப்பார்கள்? நடந்துகொள்வார்கள்? என்பதை கடந்தகால அரசியல் அனுபவங்களின் அடிப்படையில் கணிப்பீடு செய்வதாகும்.
அது கட்டாயம் நூறுவீதம் சரியாக இருக்கவேண்டும்; என்று கூறமுடியாது; ஆனாலும் சரியான அடிப்படையை அக்கணிப்பீட்டிற்கு கையாண்டிருந்தால் பெரும்பாலும் அது அண்ணளவாக சரியாக வரும். என்னைப் பொறுத்தவரை 1989ம் ஆண்டிலிருந்து இது எமது அனுபவமாகும், அல்ஹம்துலில்லாஹ்.
இவை எல்லாவற்றையும் மீறி கணிப்பீடு பாரியளவில் பிழைத்திருக்கின்றதென்றால் அங்கு அசாதாரண காரணங்கள் இறுதி நேரத்தில் ஆட்கொண்டிருக்கவேண்டும். அவைகள்தான் ஆராயப்படவேண்டும். மட்டுமல்ல, அதுதான் படைத்தவனின் நாட்டம்; என்பதையும் நாம் பொருந்திக்கொள்ளவேண்டும்.
அதேபோல் மகேஷ் சேனாநாயக்கா. அவரை களத்தில் இறக்கியதே புத்திஜீவிகளைக்கொண்ட சில சிவில் அமைப்புகள். அவரும் சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் பத்திரிகை விளம்பரம் ஊடாகவும் ஓரளவு பிரச்சாரம் செய்தார். அவர் ஓர் முன்னாள் ராணுவத்தளபதி. அவர் 1-2 வீதம் பெறலாம்; எனக் கணிப்பிட்டோம். அவரால் 1% வாக்குகளைக்கூட பெறமுடியவில்லை; என்பது மிகவும் எதிர்பாராததாகும்.
அநுர மற்றும் மகேஷ் சேனநாயக்கா ஆகியோர் வெளிப்படையாகவே இனவாதத்திற்கெதிராக குரல் எழுப்பியவர்கள். குறிப்பாக தாம் தோல்வியடைந்தாலும் இனவாத அரசியல் செய்யப்போவதில்லை; என மதகுருமார் முன்னிலையிலேயே பிரகடனம் செய்தவர் அநுர.
இவர்கள் இருவரும் மிகமோசமான முறையில் பின் தள்ளப்பட்டார்கள் என்றால் அந்தளவு தூரம் இனவாதம் மிகைத்து இனசௌஜன்யம் தோல்வியடைந்திருக்கின்றது; என்பது பொருளாகும். இதில் நமது சகோதரர்கள் சிலர் மகிழ்ச்சியடைகின்றார்கள்; என்றால் அதனை என்னவென்பது. இறைவன் அவர்களது சிந்தனைகளில் தெளிவை வழங்கவேண்டுமென பிரார்த்திப்பதைத்தவிர வேறெதுவும் செய்யமுடியாது.
அன்னம்
———
எமது கணிப்பீட்டில் 70% பௌத்த வாக்குகளில் மேற்கூறப்பட்ட வகையில் 12% ஐ ஒதுக்கியபின் எஞ்சிய 58% வீதத்தில் ஒரு எடுகோளில் மொட்டுவிற்கு 32% மும் அன்னத்திற்கு 26% மும் அடுத்த எடுகோளில் மொட்டுவிற்கு 34% மும் அன்னத்திற்கு 24% மும் வழங்கியிருந்தோம்.
அதேபோல் சிறுபான்மை வாக்குகளில் ஒரு எடுகோளில் 22% மும் அடுத்ததில் 20% மும் அன்னத்திற்கு வழங்கினோம். எஞ்சிய 10% சிறுபான்மை வாக்குகளில் 9% ஐ மொட்டுவிற்கு வழங்கினோம். அதை ஒரு கணிப்பீட்டிற்காக வழங்கினோமே தவிர 9% மொட்டு பெறுவது சாத்தியமில்லை; என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.
இதனடிப்படையில் அன்னத்திற்கு 44% மும் மொட்டுவிற்கு 43% ம் எதிர்பார்த்தோம். அல்ஹம்துலில்லாஹ், அதில் குறிப்பிட்டதுபோல் சிறுபான்மை வாக்குகள் சுமார் 24% அன்னத்திற்கு கிடைத்திருக்கின்றது.
அன்னம் பெற்ற 42% ( 41.99) வாக்குகளில் சுமார் 18% இற்கு உட்பட்ட பௌத்த வாக்குகளையே அன்னம் பெற்றிருக்கின்றது; என்பது நிச்சயமாக ஆச்சரியத்திற்குரியது.
ஐ தே க இந்நாட்டின் ஒரு ஆரம்பகால கட்சி. அப்படிப்பட்ட ஒரு கட்சி 70% பௌத்த வாக்குகளில் வெறும் 18% வாக்குகளை மட்டும்தான் பெறும் என்பது சற்று அதீத கற்பனையில்லையா?
மட்டுமல்ல, அன்னத்தின் கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக திரண்ட சரத்திரளை யோசித்துப் பாருங்கள். ஒரு நாளைக்கு 6,7,8 என்று நடாத்தப்பட்ட அத்தனை கூட்டங்களுக்கும் அதீத சனக்கூட்டம் திரளவில்லையா?
அவ்வளவுபேரும் வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட சனத்திரளா? அது சாத்தியமா? காலையில் சுமார் 10 மணியளவில் கூட்டம் ஆரம்பிக்கின்றது. இறுதிக்கூட்டம் இரவ 10மணி, 11 மணி, 12 மணிக்குமேலும் தொடரவில்லையா? இந்த அத்தனை கூட்டங்களுக்கும் தினசரி பெரும் சனத்திரளை ஏற்றி இறக்கமுடியுமா?
இறுதி இரண்டு வாரகாலம் இருந்தபோது ஏற்கனவே மொட்டுக்கு ஆதரவாக எதிர்வுகூறிய சில வெளிநாட்டு நிறுவனங்கள்கூட அன்னத்தின் வெற்றியை எதிர்வு கூறவில்லையா? அவ்வாறான ஒரு சூழ்நிலையிலும் மொட்டுவிற்கு 34% பௌத்த வாக்குகளை வழங்கி அன்னத்திற்கு வெறும் 24% வாக்குகளை வழங்கிய ஒரு கணிப்பீடு பகுத்தறிவு ரீதியாக நியாயமானதாக படவில்லையா?
கணிப்பிட்டதுபோன்று அந்த மேலதிக ஆறு வீதமும் அன்னத்திற்கு கிடைத்திருந்தால் ஜே வி பி யின் பெரும்பாலான வாக்குகள் மொட்டுக்குத் திரும்பிய நிலையிலும் அன்னம் 48% மும் மொட்டு 46% மும் பெற்றிருக்காதா?
இங்கு செயற்படு விகிதாசாரமாக ஒரு 6% மே இருந்திருக்கின்றது. ஐ தே க வெற்றி நம்பிக்கையில் திளைத்திருந்தபோது, அல்லது வேட்பாளர் கூறியதுபோல் உட்கட்சி சதிகளால் தளர்ந்திருந்தபோது, மொட்டுத் தரப்பினர், குறிப்பாக அந்த இறுதியான ஒரு சில நாட்கள் கடுமையான உள்ளகப் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக தற்போது கூறப்படுகின்றது.
குறிப்பாக, தமிழ்த்தரப்பின் 13 அம்சக் கோரிக்கைகள் துண்டுப்பிரசுரமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வினியோகிக்கப்பட்ட கதைகள் கூறுகிறார்கள்.
மட்டுமல்ல, அடுத்த பொதுத்தேர்தலில் ஐ தே கட்சிக்கு அல்லது ஜே வி பி க்கு வாக்களியுங்கள். மொட்டு வேட்பாளர் ஒரு தனிக்கட்சிக்கான வேட்பாளர் அல்ல, தேசியத்திற்கான வேட்பாளர். இது சிங்கள தேசியமா? இல்லையா? என்று தீர்மானிக்கின்ற இறுதித் தேர்தல். இந்தத் தேர்தலில் மாத்திரம் மொட்டுக்கு வாக்களியுங்கள்; என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்ட கதையெல்லாம் கூறுகிறார்கள்.
இவ்வாறான அவர்களது இறுதிநேர செயற்பாட்டை ஈடு செய்ய போதிய எதிர்ப்பிரச்சார நடவடிக்கைகளை அன்னத் தரப்பு மேற்கொள்ளவில்லை; என்று கூறப்படுகிறது. இல்லையெனில் அவ்வளவு பெரிய சனத்திரள் திரண்ட கூட்டங்களுக்கு மத்தியில் வெறும் 18% பௌத்த வாக்குகள் என்பது எதிர்பார்க்க முடியாதது.
13 அம்சக் கோரிக்கை வெளியீடு ஒரு வரலாற்றுத் தவறு
—————————————————————-
தமிழர்களின் 13 அம்சக்கோரிக்கையின் பிரதான உள்ளடக்கம் என்பது காலாகாலமாக இருந்துவருகின்ற அவர்களுடைய நிலைப்பாடு. அது அனைவருக்கும் தெரியும். இனவாதம் உச்சம் தொட்டிருந்த இத்தேர்தல் சமயத்தில் எந்தவொரு வேட்பாளரும் அதனை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளமாட்டார்; என்பதைத் தெரிந்துகொண்டு அக்கோரிக்கையை வெளியிட்டது; ஒரு வரலாற்றுத்தவறு.
அதனைப் பூதாகரமாக்கியது த தே கூ உம் தன்னை அதற்குள் அடையாளப்படுத்திக்கொண்டது. த தே கூ, தனது அடுத்த பொதுத்தேர்தலுக்கான வாக்குவங்கியை யோசித்து நாட்டின் தலைமையைத் தீர்மானிக்கும் விடயத்தில் எதிர்மறையான தாக்கத்திற்கு வழியேற்படுத்திவிட்டார்கள்.
மறுபுறம் சில முஸ்லிம் தலைவர்களின் சாணக்கியமற்ற, வெறுமனே உணர்ச்சியூட்டுவதற்காக பேசிய சமயோசிதமற்ற பேச்சுக்கள், குறிப்பாக அவர்களைப் பற்றிய ஒரு எதிர்மறைப் பார்வை பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் விதைக்கப்பட்ட சூழலில் அவ்வாறான பேச்சுக்கள் அங்கு மிக லாவகமாக சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
மறுபுறம், சஜித்தை வேட்பாளராக தெரிவுசெய்ததில் பிரதான பங்களிப்புச் செய்தது தாமே! சஜித்தின் வெற்றி தமது வெற்றி, என்ற மேடைப்பேச்சுக்கள், சஜித் இவர்களது ஜனாதிபதி என்றால் சிங்களவர்கட்கு ஒரு ஜனாதிபதி வேண்டும்தானே! என்ற சிந்தனையை அவர்களுக்கு உருவாக்கியதில் ஆச்சரியமேதுமில்லை.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கள மக்களுக்கு மத்தியில் ஓரளவு நல்லபிப்பிராயம் இருந்த முன்னாள் அமைச்சர் ஹக்கீமை பயங்கரவாதி சஹ்ரானுடன் இணைத்து முஸ்லிம்களுக்குள்ளிருந்தே செய்யப்பட்ட பொய்யான காட்டிக்கொடுப்பு கடுமையாக பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இவ்வாறான பல காரணிகள் திரள் திரளாக வந்து சஜித் மீது ஆதரவு தெரிவித்த மக்களின் நிலைப்பாடு இறுதி நேரத்தில் மாறுவதற்கு காரணிகளாக அமைந்திருக்கின்றன.
சிறுபான்மை சமூகங்கள் சுமார் 24% வாக்குகளை அன்னத்திற்கு வழங்குகின்ற அளவு ஒற்றுமைப்பட்டு தங்களது பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் சில தமிழ்த் தலைவர்கள் தங்களது சொந்த அரசியல் எதிர்காலத்தை நினைத்தும் முஸ்லிம் தலைவர்கள் தங்களது சமயோசிதமற்ற பேச்சுக்களாலும் சிறுபான்மை எந்த இலக்கை நோக்கி செயற்பட்டார்களோ அந்த இலக்கை தோற்கடிப்பதற்கு கணிசமான பங்களிப்பினை வழங்கிவிட்டார்கள்; என்ற கசப்பான உண்மையையும் நாம் ஜீரணித்துத்தான ஆகவேண்டும்.
சிறுபான்மையின் கரங்களிலிருந்து தவறியதா?
————————————————————
மொட்டுவிற்கு அண்ணளவாக 6% சிறுபான்மை வாக்குகள் பெரும்பாலும் கிடைத்திருக்கலாம்; சிறுபான்மை வாக்களிப்பை துல்லியமாக கணிப்பிடுவதற்கு முடியாதபோதும்.
மொட்டு பெற்ற வாக்கு 52.25% இதில் 6% ஐக் கழித்து அன்னத்துடன் சேர்த்தால் மொட்டு 46.25% அன்னம் 48% , இப்பொழுது சிந்தியுங்கள் இந்த வெற்றியை மாற்றுகின்ற பலம் இந்த சூழ்நிலையிலும் சிறுபான்மைகளிடம் இருந்ததா? இல்லையா?
சிறுபான்மை மொட்டுவிற்கு அளித்த வாக்குகள் 5% எனக்கொள்வோம்.
இப்பொழுது மொட்டு 47.25%, அன்னம் 47% (46.99%)
இரண்டாம் சுற்று எண்ணிக்கையில் 0.26% ஐ அன்னம் பெறுவதற்கு சாத்தியமில்லாமல் போயிருக்குமா?
அல்லது முஸ்லிம் சுயேச்சை வேட்பாளர் பெற்ற வாக்குகள் 0.29% (38,814) இந்த வாக்குகள் வீணாகிப்போன வாக்குகள்தானே. இந்த வாக்குகள் அன்னத்திற்கு வழங்கப்பட்டிருந்தால் இரண்டாம் வாக்கு இல்லாமலே அன்னம் வெற்றிபெற்றிருக்குமே!
எனவே, உலகில் நூறுவீத ஒற்றுமை யதார்த்தம் இல்லையென்றபோதிலும் இது சிறுபான்மை சமூகங்களின் சக்திக்கு அப்பாற்பட்டுப்போன வெற்றியல்ல. தனியொரு சமூகத்தால் ஏற்படுத்தப்பட்ட வெற்றியல்ல. மாறாக சிறுபான்மை சமூகத்தின் ஒரு பகுதியினரால் உறுதிப்படுத்தப்பட்ட வெற்றியாகும்.
இருந்தபோதும் சிறுபான்மை சமூகத்தின் அந்த வாக்குகள் கண்டுகொள்ளப்படவில்லை. ஒரு சமூகத்தால் ஏற்படுத்தப்பட்ட வெற்றியாகவே பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறு கண்டுகொள்ளப்படமாட்டாது; என்பதை எனது முன்னைய ஆக்கமொன்றில் குறிப்பிட்டிருந்தேன்.
தனது உம்மத்து பிழையான வழியில் ஒன்றுசேரமாட்டார்கள்; என்பது நாயகத் திருமேனி நபி(ஸல்) அவர்கள் வாக்கு. அந்தவகையில் பெரும்பான்மையான முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு எடுத்த முடிவு பிழையாக இருந்திருக்க முடியாது. ஆனாலும் வெற்றி மறுதிசையில் சென்றிருக்கின்றதென்றால் அதன் சூட்சுமத்தை அறிந்தவன் அந்த வல்ல இறைவன் மட்டுமே.
எது எவ்வாறிருந்தபோதிலும் குறைந்த சிறுபான்மையினர் ஆதரித்து வெற்றிபெறச்செய்த அந்தத் தரப்புத்தான் இன்று ஆட்சியாளர்கள். நாமும் அவர்களுடன் முழுமையாக ஒத்துழைப்போம். அவர்கள் சிறுபான்மைகளை அரவணைத்துச் செல்லக்கூடிய மனோநிலையை இறைவன் அவர்களுக்கு வழங்கவேண்டுமென பிரார்த்திப்போம்.
