ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
எதிர்கட்சியினர் தங்களது இயலாமையைக் காட்டுவதற்காக என்னையும் சஹ்ரானையும் இணைத்து விமர்சனங்களை பரப்பிவருகின்றனர். அப்பாவி நாட்டுப்புற சிங்கள மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பணிமனை முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியினால் நேற்றிரவு (24) மாளிகாவத்தையில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் அமைச்சர் மேலும் கூறியதாவது;
கொழும்பு நகரில் மாளிகாவத்தையானது ஏழை மக்கள் செறிந்துவாழும் பிரதேசமாகும். ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களை இலகுவில் பட்டியலிட முடிக்க முடியாது. பாதாள கும்பலை ஒழிப்பதாகக் கூறி, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு ஏராளமான உயிர்களை காவுகொண்ட வரலாறுகள் ஏராளமாக உள்ளன. எவ்விதமான விசாரணைகளும் தடயங்களும் இல்லாமல் பல உயிர்கள் வேட்டையாடப்பட்டன.
பாதாள உலகக் கும்பலை ஒழிப்பதை நாங்கள் தவறாக கூறவில்லை. அதனை சட்டத்தின் பிரகாரம், நீதி நியாயத்தோடு மேற்கொண்டிருக்க வேண்டும். எவ்வித கணக்கு வழக்குமின்றி உயிர்களை கொன்று புதைப்பது முறையல்ல. எங்களது ஆட்சியிலும் பாதாள உலகக் கும்பலை ஒழிப்பதற்கு பல நடவடிக்கைள் சட்டரீதியில் மேற்கொள்ளப்பட்டன. ராஜபக்ஷ ஆட்சி போன்று எங்களது ஆட்சியில் எந்த முறைகேடான சம்பவங்களும் இடம்பெறவில்லை.
ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்றது போல, ஆட்களை கடத்திச்சென்று காணாமலாக்கி மறுநாள் கொன்றுவிட்டு காட்டுக்குள் புதைக்கின்ற சம்பவங்கள் எங்களது ஆட்சியில் நடைபெறவில்லை. இதுவே எங்களது அரசாங்கத்துக்கும் முன்னைய அரசாங்கத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசமாகும். சமூகத்திலிருக்கும் தீயதை ஒழிப்பதற்கு ஒரு நியாயமான முறை இருக்கிறது. அதை அரசாங்கம் பின்பற்ற வேண்டும்.
ஆட்சியை பின்கதவால் பறிப்பதற்கு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட அட்டகாசம் போன்றதொரு விடயத்தை எனது 25 வருட பாராளுமன்ற வாழ்க்கையில் கண்டதில்லை. எதிர்க்கட்சியில் இருக்கும்போதே இவ்வளவு அட்டகாசம் புரிந்தவர்கள் ஆளும் கட்சியில் இருந்தால் நிலைமை இன்னும் தலைகீழாக மாறும். இத்தகையவர்களிடம் ஆட்சியைக் கொடுத்தால், நாம் இதைவிட பல மடங்கு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
சிலர் பீதியாலும் பயத்தாலும் சரணாகதி அரசியலில் ஈடுபடுகின்றனர். எமது சமூகத்தை மூட்டை மூட்டையாக விற்கின்ற வேலையை தற்போதைய மேல் மாகாண ஆளுநர் செய்துகொண்டிருக்கிறார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் இருந்த மூத்த தலைவர் ஏ.எச்.எம். பௌசி எங்களுடன் இணைந்த பின் முஸ்லிம் தலைவர்களாகிய நாங்கள் அவரை தலைவராகக் கொண்டு செயற்படுகிறோம்.
அவர் எதிரணிக் கூட்டத்தின் உண்மைத் தன்மையை நன்கறிந்தவர். ஏனையவர்கள் வெறுமனே வியாபாரம் நோக்கிலே செயற்படுகின்றனர். சமூகத்தை விற்று பிழைப்பு நடாத்துபவர்கள் மத்தியில், பௌசி அவ்வாறானவரல்ல. இவர் எம்முடன் வந்து இணைந்துகொண்டதால் எதிரணியினர் மேலும் பலத்தை இழந்துவிட்டனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் மும்முரமாக செயற்பட்டு வாக்களித்தார்கள். கல்முனை, மூதூர் பிரதேசங்களில் அதிகூடிய வாக்களிப்பு வீதம் பதிவாகியது. அதைவிட கூடுதலான வேகத்துடன் இந்த தேர்தலிலும் மக்கள் வாக்களிக்க வேண்டும். அதன்மூலம் ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் வீட்டுக்கு அனுப்பவேண்டும்.
கடந்த ஆட்சியாளாளர்கள் கடன் சுமையினால் பயந்து போனார்கள். மேற்குலக நாடுகளின் பொருளாதார தடைக்கு அஞ்சினார்கள். மனித உரிமைகள் ஆணையகம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மூடிமறைத்து, தனக்கு ஆதரவிருப்பதைக் காட்டும் நோக்கில் இரண்டு வருடங்களுக்கு முன்னரே தேர்தலை நடாத்தினார்கள். தப்பிப்பிதற்காக தேர்தலை முன்னெடுத்து குப்புற விழுந்தவர், இன்னும் எழுந்திருக்கவில்லை.
எதிர்கட்சியினர் தங்களது இயலாமையைக் காட்டுவதற்காக என்னையும் சஹ்ரானையும் இணைத்து விமர்சனங்களை பரப்பிவருகின்றனர். அன்று காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வினால் மேற்கொள்ளப்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்கு வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன்.
காத்தான்குடிக்குச் சென்ற என்னுடன் பொலிஸாரும் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் வருகைதந்திருந்தனர். அவர் இப்போது மொட்டு கட்சியின் அமைப்பாளராக இருக்கிறார். சஹ்ரானோ அவரது சகோதரனோ தீவிரவாதி என்று 2015இல் எனக்கோ அல்லது என்னுடன் வந்தவர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, மக்கள் மத்தியில் வாக்குகளை சிதறடிப்பதற்காக எதிரணி செய்த லீலைதான் இந்த விசமப் பிரசாரம். இதனால் அப்பாவி நாட்டுப்புற சிங்கள மக்களை உசுப்பேற்றி வாக்குச் சேகரிக்கவே இப்படியான காரியங்களைச் செய்கின்றார்கள். வாக்குகளை அதிகரிப்பதற்கு அவர்களிடம் வேறு யுக்திகள் இல்லை என்பது தெரிந்துவிட்டது.
சிறுபான்மை மக்களின் வாக்குகள் ஒருபோதும் அவர்களுக்கு கிடைக்காது. ஆகவே, இவ்வாறான களங்கத்தை ஏற்படுத்தி, பெரும்பான்மை மக்கள் மத்தியில் எனக்குள்ள நற்பெயருக்கு பங்கம் விளைவிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இதனை மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். இந்த ராஜபக்ஷ கும்பலை விரட்டியடிப்பதற்கு சஜித் பிரேமதாசவை அதிகப்படியான வாக்குகளால் நாம் வெற்றிபெறச் செய்வோம்.