'உலகில் ஒவ்வொரு 40 செக்கன்களுக்கு ஒருவர் வீதம் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. தற்கொலைக்கு மிகப் பிரதானமான காரணமாக அமைவது உளவியல் பிரச்சினைகளும் அதனைத் தீர்க்க முடியாமல் தவிப்பதுமேயாகும்' என அட்டாளைச்சேனை பிரதேச செயலக உளவள ஆலோசகர் மனூஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை (14) அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'உளநல மேம்பாடும் தற்கொலைத் தவிர்ப்பும்' எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் பி. முஹாஜிரீன் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உளவள ஆலோசகர் மனூஸ் அபூபக்கர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'கடந்த 2009 ம் ஆண்டில் இலங்கை அதிக தற்கொலைகள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் 23 ம் இடத்தில் இருந்தது. இந்நிலை 2015 இல் 3 ம் இடத்திற்கும் தற்போது 2019 இல் 1 ம் இடத்திற்கும் வந்துள்ளது. இந்நிலைமையினைக் கருத்திற்கொண்டே இவ்வருடம் மேற்படி தொனிப்பொருளில் உளநல தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் நாளாந்தம் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு ஒரு விபத்து நிகழ்வதாக புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. விபத்தினால் ஏற்படுகின்ற மரணங்கள் இலங்கையில் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில், போதைப் பொருள் பாவனை மற்றும் புகைத்தலாலும், தற்கொலையாலும் அதிக மரணங்கள் ஏற்படுகின்ற நிலைமையானது இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியில் பெரும் தாக்கத்ததை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
தற்கொலைகள் அதிகம் நடைபெறுவதற்கு உளவியல் சார் பிரச்சினைகளும் மன நெருக்குவாரங்களுமே அதிக காரணமாகும். சிறு வயது முதலே தற்கொலை செய்யும் மனநிலை உருவாகிறது. எனவே, மாணவப் பருவத்திலிருந்து மனநிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களை முகாமை செய்யக்கூடிய திறனை மாணவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் மாணவர்களது மனநிலையை விருத்தி செய்வதற்கான 10 வாழ்க்கைக்கான ஆற்றல்களை வகைப்படுத்தி இருக்கிறது. அதிலே சமூக ஆற்றல்கள், மனவெழுச்சி ஆற்றல்கள், தனிப்பட்ட ஆற்றல்கள் என இவற்றை வகைப்படுத்தலாம். இவற்றில் சிறந்த தொடர்பாடல் திறன், ஆளிடைத் தொடர்புத் திறன், மற்றவர்களது நிலையை புரிந்து கொள்ளும் ஒத்துணர்வுத் திறன், சுய விழிப்புணர்வுத் திறன் ஆகிய முக்கிய ஆற்றல்களை மாணவர்கள் அறிந்து புரிந்து செயற்படுகின்றபோது நல்ல மனநிலை உருவாகுவதோடு வாழ்வதற்கான ஆற்றல் கட்டியெழுப்பப்படும். பதின்ம பருவ நிலையிலுள்ள மாணவர்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை விரும்புபவர்களாகவும், சவால்களை எதிர் கொண்டு செயற்படக்கூடிய மனோநிலை உடையவர்களாகவும், எதிலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று விரும்புபவர்களாகவும், சாதனைப் பதிவுகளை தானே நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாகவும் இருக்கிறார்கள்;. இவ்வாறான விடயங்கள் கட்டிளமைப் பருவத்தினரிடையே காணப்படுகின்ற எதிர்பார்ப்புகளாகும்.
இதேபோன்று மாணவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் வழிமுறை தெரியாமல் அதிகமான மாணவர்கள் தற்கொலை முடிவுக்குச் செல்கின்றனர். எனவே மாணவர்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும். உலகில் 4 பேருக்கு ஒருவர் வீதம் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான சோர்வு நிலையிலிருந்து தற்கால இளைய தலைமுறையினரை மீட்டெடுக்க வேண்டிய தேவைக்கு சமூகம் மாற்றப்பட்டிருக்கிறது.
எனவே, சமூக ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளவும், சிந்தனைத் திறன்களை மேம்படுத்தவும், உணர்வுகளை முகாமை செய்யும் திறனை விருத்தி செய்து கொள்ளவும் ஆற்றலுள்ளவர்களாக மாணவர்களை வழிப்படுத்த வேண்டும். சிந்தனை ஆற்றல்களில் ஆக்கத்திறன் சிந்தனை, சூழ்நிலைக்கேற்ப சிந்திக்கும் திறன், பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல், சரியான தீர்மானமெடுக்கும் ஆற்றல் போன்றவைகளை வளர்ப்பதன் மூலமும் மன நிலையை ஸ்திரமாக வைத்திருப்பதுடன் உள நெருக்கீடுகளை போக்குவதற்கும் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த உலகில் சிறப்பான வாழ்க்கை ஆற்றல்களுடன் செயற்பட முடியும்' எனக் கூறினார்.