சுயபிரார்த்தனையுடன் ஆரம்பமான விழாவின் முதலாவது அமர்வில் வரவேற்புரையினை ஸாஹிறா கல்லூரி அதிபர் எச்.ஏ. ஜப்பார் நிகழ்த்தியதுடன், தலைமையுரையினை புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு W.P.S.K. விஜேசிங்ஹ நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அதிதிகளின் வாழ்த்துரைகளும் இடம் பெற்றன. பின்னர் வித்தியாலயத்தின் மறுபக்கம் என்ற உரையினை ஓய்வுநிலை ஆசிய ஆலோசகர் ஶ்ரீ வத்ஸலா நாகராஜா ஆற்றினார். முதலாவது அமர்வின் இறுதி நிகழ்வாக வித்தியாலயம் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. சஞ்சிகையின் முதற்பிரதியினை இதழாசியரியர் இஸட்.ஏ. சன்ஹிர் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்க, அவர் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் செல்வி U.M.B. ஜெயந்திலா அவர்களுக்கு வழங்கிவைத்ததுடன் ஏனைய அதிதிகளுக்கும் வழங்கப்பட்டது.
புத்தளம் பிரதேசத்தின் முன்னோடி ஆசான் என்.ஜே. அல்பிரட் அவர்களின் பெயரில் இடம்பெற்ற இரண்டாவது அமர்வில் ஆசிரியர் அல்பிரட் தொடர்பான வரலாற்றுக் குறிப்பினை கரைத்தீவு மு.ம.வி. அதிபர் எஸ். எம். றஸ்மி வழங்கினார். தொடர்ந்து புத்தளத்தில் கல்வி – அன்று என்ற தலைப்பில் ஓய்வுநிலை பிரதிப் கல்விப் பணிப்பாளர் ஜவாத் மரைக்கார், புத்தளத்தில் கல்வி – இன்று என்ற தலைப்பில் தேசிய கல்வி நிறுவன முன்னாள் பணிப்பாளர் எம்.அப்துல் வாஹித், புத்தளத்தில் கல்வி அபிவிருத்தி என்ற தலைப்பில் தர்ஹா நகர் கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் எம் எப் முஹம்மது றியாஸ், எமது வித்தியாலயங்கள் என்ற தலைப்பில் ஓய்வுநிலை அதிபர் வீ. நடராஜா, நுழைவாயில் – பழமையும் புதுமையும் என்ற தலைப்பில் முன்னாள் உதவிப் பணிப்பாளர் ஆர்.எஸ்.ஈ. புஷ்பராஜன் ஆகியோர் ஆய்வுரைகளை நிகழ்த்தியதுடன் இதழாசிரியர் தனது இதயத்திலிருந்து கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். இறுதியில் பிரதம அதிதி உரை இடம்பெற்றது. நன்றியுரையினை தில்லையடி மு.ம.வி. அதிபர் ஏ.எம். ஜவாத் நிகழ்த்தினார்
நாயக்கர் சேனை வித்தியாலய அதிபர் ராமநாதன், உடப்பு தமிழ் மகா வித்தியாலய அதிபர் சந்திர சுப நேமி, ஆசிய ஆலோசகர்களான என் எம் ரிஸ்கியா, எம்.ஜீ. அனிபா மற்றும் ஏ.டி.எம். நிஜாம் ஆகியோரினால் விழா நிகழ்ச்சிகள் யாவும் தொகுத்து வழங்கப்பட்டன.