கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் தென்கிழக்கு பல்கலைக்கழகம், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றமடையவே விரும்பினார்.-கலாநிதி எம்.எம்.பாஸில்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு 2019.10.23 ஆம் திகதி பல்கலைக்கழக இஸ்லாமிய அரபு கற்கைகள் பீட கேட்போர் கூடத்தில் நிகழ்வின் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார் இங்கு அஷ்ரப் நினைவு விரிவுரையை கலாநிதி எம்.எம்.பாஸில் நிகழ்த்தினார். 

கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு விரிவுரையின் முழுவடிவம் 
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களே, 'ஸ்தாபகர் தின' நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அவர்களே, பேராசிரியர்களே, பீடாதிபதிகளே, துறைத் தலைவர்களே, நூலகர் அவர்களே, அனைத்து கல்விசார் உத்தியோகத்தர்களே, பதிவாளர் அவர்களே, நிதியாளர் அவர்களே, நிர்வாக உத்தியோத்தர்களே, நிர்வாகம் சாரா உத்தியோகத்தர்களே, அன்புள்ள மாணவ நண்பர்களே அனைவருக்கும் அன்பின் பணிவு அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம், அய்போவண்.
இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் வருடா வருடம் நடாத்தப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'ஸ்தாபகர் தின' (Founder’s Day) நிகழ்வில் இலங்கை முஸ்லிம்களின் மறைந்த தொலைநோக்குத் தலைவர், அரசியல்வாதி, தத்துவஞானி, கவிஞர் மற்றும் கல்வியியலாளர் எம்.எச்.எம். அஷ;ரஃப் குறித்த ஞாபகார்த்த விரிவுரையினை நிகழ்த்த என்னை அழைத்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவிற்கு எனது விஷேட நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்!.
எனது விரிவுரை இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதலாவது பகுதி அஷ்ரப்பின் அரசியல் பற்றியும் இரண்டாவது பகுதி இலங்கைத் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பற்றியும் அமையவுள்ளது.

காலனித்துவத்திற்குப் பின்னரான இலங்கையில் சிறுபான்மையினர்:

இலங்கையில் காலனித்துவத்திற்குப் பின்னர் உருவாக வந்த அரசானது பல்லின சமூகத்தின் மத்தியில் ஒற்றையாட்சித் தன்மையுடன் மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தை வெளிப்படுத்தியது. ஆவ் அரச அதிகாரமானது பெரும்பான்மை பௌத்த / சிங்கள சமூகத்துடன் இணைந்ததாகவே உருவாக்கப்பட்டது. பெரும்பான்மை உயர்குழாம் வர்க்கத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அரசானது சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களையும் முஸ்லிம்களையும் பாரபட்சமான சட்டங்கள், கொள்கைகள் மூலம் அரச முறைமையில் இருந்து வெளித்தள்ளியது.

அரசு உருவாக்கி, நடைமுறைப்படுத்திய பாரபட்சக் கொள்கைகளாகப் 1948 பிரஜா உரிமைச் சட்டம், 1956 சிங்கள அரச கரும மொழிச் சட்டம், அரச குடியேற்றத் திட்டங்கள், பல்கலைக்கழக தரப்படுத்தல் முறை போன்றவற்றுக்கு அப்பால் 1972, 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்களில் பௌத்த மதத்திற்கு முக்கிய ஸ்தானம் வழங்கப்பட்ட விடயமும் சிறுபான்மைத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் முழு வீச்சுடன் பாதித்தன. பலவீனமான முஸ்லிம் சமூகம் மௌனம் காக்க பல பின்புலங்களுடன் பலமாகக் காணப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் அரசியல் உயர் குழாமினர், மேலே சொல்லப்பட்ட பாரபட்சக் கொள்கைகளினால் ஏற்படவுள்ள பாதிப்புக்களில் இருந்து தமது சமூகத்தைப் பாதுகாத்துக் கொள்ள ஒற்றையாட்சி முறையை சமஷ;டியரசாக மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் விடுத்தனர். அக்கோரிக்கையை நிறைவேற்ற தமிழ் அரசியல் உயர்குழாமினர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பெரும்பான்மைச் சமூக சக்திகளால் அம்முயற்சிகள் வலுவிழத்தலுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்தச் சூழ்நிலையால் அதிருப்தியடைந்த தமிழ் இளைஞர்கள் சமூக சக்திகள் என்றடிப்படையில் ஆயுதக் குழுக்களைத் தோற்றுவித்தனர். அவற்றுள் பலம் பொருந்திய குழுவாகத் தமிழீழ விடுதலைக் குழுவினர் (LTTE) பரிமாணம் பெற்றனர். தன் மூலம் அரசு பலவீனப்படுத்தப்பட்டது. பலம் வாய்ந்த ஆயுதக் குழுவான LTTE யினர் அரசுக்குச் சமாந்தரமான பலத்தைப் பெற வந்தபோது சர்வதேச சூழல் காரணமாக இலங்கை அரசு தன் பலத்தைப் பெருக்கிக் கொண்டதுடன் தமிழ் சிறுபான்மை சமூகத்தின் பலம் பெற்ற சக்தியான LTTE பலம் இழக்க வந்தது. இதன் மூலம் அதன் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஊடுருவி, அதனை அழித்ததுடன் அதன் தலைவரையும் கொலை செய்து, மீண்டும் தன்னைப் பலம் வாய்ந்த ஒற்றையாட்சி அரசாக நிர்மாணித்துக் கொண்டது. இந்தச் சூழ்நிலைக்குள் இருந்து கொண்டுதான் நாம் இலங்கை முஸ்லிம் சமூகத்தையும் அச் சமூகத்தை வழிநடத்திய அஷ்ரப் அவர்கள் பற்றியும் நினைவுபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

சுதந்திர இலங்கையில் தமிழர்களுக்கு எவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டதோ அவ்வாறே முஸ்லிம்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இங்கு ஒரு புதுமை உள்ளது. முஸ்லிம்கள் அரசின் பாரபட்சமான கொள்கைகளால் மட்டுமன்றி LTTE மற்றும் ஏனைய தமிழ் ஆயதக்குழுக்களினாலும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பலவந்த வெளியேற்றம் போன்றனவற்றாளும் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்களின் இருப்பு, சமய உரிமை போன்றன மிகப் பலமான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டனர். அதனோடு இணைந்த வகையில் இலங்கை இந்திய அரசுகளிடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலும் முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தங்கள் இருப்புத் தொடர்பில் அதிக கவனம் எடுக்க வேண்டிய தேவையும் அரசியல் ரீதியாகப் பலம்பெற வேண்டிய கடப்பாடும் இச் சமூகத்திற்கு ஏற்பட்டது. இதன் விளைவால், பலர் ஒன்றிணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை (SLMC) தாபித்ததுடன் எம்.எச்.எம் அஷ்ரபின் தலைமையில் அதனை ஒரு சமூக சக்தியாகவும் உருவாக்கியமையானது முஸ்லிம் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக வரலாற்றை நிதர்சனமாக நின்று காண்பவர்கள் உணர்வார்கள்.
அந்தவகையில் அரசால் பலவீனப்படுத்தப்பட்ட தமிழ் சமூகம் ஆயுதக் குழுக்களைத் தமது சமூக சக்திகளாக உருவாக்க, அரசு மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களால் பலவீனப்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகம் சிறுபான்மை அரசியல் கட்சியான SLMC ஐ தனது சமூக சக்தியாக உருவாக்கியது. இதன்மூலம் தனது பேரம் பேசும் ஆற்றலினூடாக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், அரசும் முஸ்லிம்களை அரவணைக்க வந்தது. இதனால் முஸ்லிம் சமூகம் எழுச்சியடைந்தது.
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை 1950-1960கள் சேர் றாஸீக் பரீட் அவர்களின் காலம் என்றால் 1970களைப் பதியுதீன் மஹ்மூதின் காலம் என்றும் 1990களை அஷ;ரஃபின் காலம் என்றும் அழைக்கலாம். 1980களை எந்த முஸ்லிம் தலைவருக்கும் சொந்தமாக்கத் தகுந்த ஆதாரங்கள் போதாது.
ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் அதுவே தனது கட்சி எனக் கொண்டு இயங்கியவர் றாஸீக் பரீட். பதியுதீன் மஹ்முத் இலங்கை சுதந்திரக் கட்சியை ஸ்தாபிப்பதற்குப் பிரதான பங்கு கொண்டு, அது ஒன்றே தனது கட்சி என இறுதி மூச்சுவரை வாழ்ந்து கருமமாற்றியவர். தேசியக் கட்சிகள் எவையானாலும் அவற்றினால் முஸ்லிம்களுக்குப் பிரயோசனம் இல்லை, ஆதலால் முஸ்லிம்களுக்குத் தனிக் கட்சி வேண்டுமெனக் கருதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை நிறுவி அதன் தலைவராக வாழ்ந்து அகால மரணம் அடைந்தவர் அஷ்ரப். இவரது பயணம் ஒன்று எனினும்; சென்ற பாதைகள் வெவ்வேறு. இவற்றுள் அஷ்ரப் அவர்கள் எவ்வளவு சாதனைகள் படைத்து முஸ்லிம் அரசியலை எழுச்சியடையச் செய்தார்கள் என்பதையும் அதற்காக அவர் வகுத்த பாதைகளையும் அவரது மரணத்தின் பின் பல பிரிவுகளாக உடைந்து போயிருக்கும் முஸ்லிம் அரசியல் பற்றியும் ஆய்வு செய்வது இவ் உரையின் நோக்கமாகும்.
அவ்வாறான ஓர் ஆய்வினை அரசறிவியல் எதிர்பார்க்கின்றது. இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்கள், இன நெருக்கடிக்கான தீர்வு முயற்சிகள் என்பன சிங்கள, தமிழ் ஆகிய இரு இனங்களை வைத்தே பெரும்பாலும் விவாதிக்கப்பட்டன. சுருங்கக் கூறின், தேசிய விவகாரங்களில் முஸ்லிம் சமூகம் பார்வையாளராக அன்றி பங்காளிகளாக ஆட்சியாளர்களால் கருதப்படவில்லை. இப்போக்கு அஷ்ரப்பின் அரசியல் பிரவேசத்திற்குப் பின்னர் தலைகீழாக மாறியது எனின் மிகையாகாது.
நாட்டை ஆள வந்தவர்கள் ஆரியர்களும் திராவிடர்களும். வர்த்தகம் செய்ய வந்தவர்கள் முஸ்லிம்கள். ஆரியர்களின் வழித்தோன்றலான சிங்களவர்களும் திராவிடர்களின் வழித்தோன்றலான தமிழர்களும் ஆட்சியைப் பரிமாற வேண்டுமே ஒழிய, அரேபிய வாரிசுகளான முஸ்லிம்களுக்கு அதில் பங்கு இல்லை என்ற கருத்தானது சிங்கள, தமிழ் தலைமை பீடத்தில் நீண்ட காலமாகக் குடிகொண்டு இருந்தது என்பதை சுதந்திர இலங்கை வரலாற்றைக் கூர்ந்து பார்ப்போர் உணர்வர். இந்த அரசியல் இரகசியத்தை அஷ்ரபுக்கு முன்பிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் விளங்கியிருந்தனரா என்பதும் சந்தேகம். இவருக்கு முந்திய முஸ்லிம் தலைவர்கள் ஆட்சியில் வெவ்வேறு அரசாங்க மந்திரிகளாக இருந்து பல கோரிக்கைகளை வென்றபோதும் இவ்வெற்றிகள் எல்லாம் சிங்கள, தமிழ் தலைமைத்துவத்தின் பார்வையில் வெறும் சலுகைகளே அன்றி உரிமைகள் அல்ல. சலுகைகளுக்கு என்றிருந்த முஸ்லிம் சமூகத்தை உரிமைக்காகப் போராடும் சமூகமாக மாற்ற வேண்டும் என எண்ணியவர் அஷ்ரப்.
மேற்கு இலங்கையிலிருந்து தொன்றுதொட்டு உருவாகி வந்த முஸ்லிம் தலைமைத்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கிழக்கிலங்கையில் இருந்தும் முஸ்லிம் தலைமைகள் உருவாகலாம் என நிரூபித்தவர் அஷ்ரப்.
அஷ்ரப் ஸ்தாபித்த முஸ்லிம் காங்கிரஸும் அதன் வளர்ச்சியும் அவரது ஆளுமையும் இலங்கையின் தேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. அஷ்ரபின் திடீர் மறைவு எதிர்பார்க்காதது. தமிழ் மொழிப் பற்றும், இஸ்லாமிய உணர்வும் சட்ட வல்லமையும் நாவன்மையும் அசாதாரணத் துணிச்சலும் கொண்ட ஓரு புதிய முஸ்லிம் தலைமுறையின் தலைவனைப் பற்றி நாம் இன்று மீள் பரிசீலனை செய்கின்றோம்.

அஷ்ரபின் இழப்பில் இருந்து முஸ்லிம் சமூகம் தன்னை மீள் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு பகீரத முயற்சிகளில் ஈடுபடுகின்றது. மெல்ல மெல்ல அஷ்ரபின் அரசியலில் இருந்து அவரது வாரிசுகள் ஒதுங்கிக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருக்கின்ற அதேவேளை, தேர்தல் காலத்தில் அவ்வாரிசுகளின் பிரதான பேசு பொருளாகவும் காட்சிப் பொருளாகவும் அஷ்ரப் அமைந்து விடுகின்றார் என்ற பொதுவான கருத்தும் உண்டு. ஆனால், பொது அமைப்புக்களும் பொதுச் சனங்களும் எப்போதுமே அஷ்ரபை ஞாபகப்படுத்துவதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவில்லை.

அஷ்ரபின் சாதனைகள்:

இலங்கையின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ் அரசியலமைப்பின் 99ஆவது பிரிவில் குறித்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 12.5வீத வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மாத்திரமே ஆசன ஒதுக்கீட்டுக்கான கணிப்பீட்டில் சேர்த்துக் கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சிறுபான்மையினருக்குப் பாதகமாக இருந்தது. இந்நிலையில் அஷ;ரஃப் அவர்கள் அப்போதைய பிரதமராக இருந்த பிரேமதாஸ அவர்களுக்குப் பல விடயங்களில் சட்ட ஆலோசனைகளை வழங்கியதோடு அவர் ஜனாதிபதியாவதற்கு மறைமுக உதவிகளையும் செய்தார். இதனால் அஷ்ரபிற்கு ஜனாதிபதி சட்டத்தரணி பதவி தருவதாக பிரேமதாஸ வாக்களித்தார்.
இதன்போது அஷ்ரப் அவர்கள் தேர்தலின் போது செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையினடிப்படையில் பின்வரும் கோரிக்கையினை பிரேமதாஸாவிடம் முன்வைத்தார். 'என் சமூகத்திற்கு ஓர் உதவி செய்யுங்கள். தற்போதைய யாப்பின் பிரதிநிதித்துவ முறையின் விகிதாசாரப் பிரிவிற்குள் 12.5 வீதம் என்ற வெட்டுப்புள்ளியானது, எனது கட்சியையும் எனது சமூகத்தையும் பாதித்துள்ளது. எனவே, அதனை 5 வீதமாக மாற்றித் தந்தால் அது எனது சமூகத்திற்கு பெருங் கைங்கரியமாக அமையும்' எனக் கூறினார்.

அஷ்ரபின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்ட பிரேமதாஸ அவர்கள் 1988ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பில் 15ஆம் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதனூடாக இந்த வெட்டுப்புள்ளி வீதத்தினை 5 வீதமாக மாற்றியமைத்தார். இந்த நிகழ்வு முஸ்லிம் அரசியல் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகும். அதனைத் தொடர்ந்து வந்த பொதுத் தேர்தல்களில் அஷ;ரஃப்பின் தலைமைத்துவம் பலம் பெறுவதற்கும் அதனூடாக அரசின் செயன்முறைகளில் முஸ்லிம்கள் அரசியல் தாக்கம் செலுத்துவதற்கும் வாய்ப்பளித்திருந்தது.
1989இல் இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாகும். வழக்கமாகப் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்தும் சுயேட்சையாகவும் முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலில் களம் இறங்குவார்கள். எனினும் இவ் 5 வீதமாக குறைக்கப்பட்ட வெட்டுப்புள்ளி, முஸ்லிம் காங்கிரஸின் உதயம் போன்றவை சிறுபான்மை முஸ்லிம் பிராந்தியக் கட்சி ஒன்றின் கீழ் முஸ்லிம் வேட்பாளர்கள் படையெடுக்க வாய்ப்பளித்தது.
இத்தேர்தலில் சுமார் 75 வீத வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸிற்குக் கிடைத்தது. திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 65,325 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. எனினும் இத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுமார் 700 வாக்குகள் வித்தியாசத்தால் 02 ஆசனங்களை இழந்தது. இம்மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் UNPஇல் போட்டியிட்டு, சுமார் 30,000 முஸ்லிம் வாக்குகளைப் பெற்றிருந்தும் முஸ்லிம் வேட்பாளர்கள் எவரும் வெற்றிபெறவில்லை (Fowsar, 2016).
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 36,700 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது. MLAM. ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றார். திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17,884 வாக்குகளைப் பெற்ற போதும் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அம்மாவட்டத்தில் UNP சார்பாகப் போட்டியிட்ட மஹ்ரூப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இம்மாவட்டங்களுக்குப் புறம்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 01 பிரதிநிதியைப் பெற்றுக் கொண்டது. தேசியப் பட்டியல் மூலமாகவும் 01 பிரதிநிதியை நியமிப்பதற்கு வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் எழுச்சிக்குரிய காலகட்டம் 1994இல் ஆரம்பித்தது. 1994இல் உருவாகிய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாறியதனை அடுத்து, அரசியல் ரீதியாக அது பல சலுகைகளைப் பெற்றுக் கொண்டது. அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட இம்முக்கிய இடம், கிழக்கு அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ் எழுச்சியுறவும் கிழக்கு மக்கள் அரசியல் ரீதியாக மேலும் அரசியல் சமூகமயப்படுத்தலுக்கு உட்படவும் வழிவிட்டது.
1994 பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 07 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. இவர்களுள் 04 பேர் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர்கள் ஆவர். MHM. அஷ்ரப், ULM. முஹைடீன் ஆகியோர் திகாமடுல்ல மாவட்டத்திலிருந்தும் MLAM. ஹிஸ்புல்லா மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் MN . அப்துல் மஜீத் திருகோணமலை மாவட்டத்திலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் UNP சார்பாக செய்யத் அலி சாஹிர் மௌலானா தெரிவு செய்யப்பட்டார். மௌலானா தவிர்ந்த கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மற்றைய அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். வழக்கமாக பெரும்பான்மைக் கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளின் செல்வாக்கு இத்தேர்தலுடன் முடிவுக்கு வரலாயிற்று.
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைப்பதற்குத் தேவைப்பட்ட எஞ்சிய ஆசனங்களை, காங்கிரஸ் பெற்றிருந்த 07 ஆசனங்களைக் கொண்டு நிரப்ப முடிந்தது. அஷ்ரப் ஆட்சியினைத் தீர்மானிக்கும் சக்தியானார். அவர் ஆட்சியின் பங்காளியானார். குறுகிய காலத்திற்குள் அவர் கிழக்கின் முஸ்லிம் தலைவராகத் தன்னை மாற்றிக் கொண்டார். நாட்டின் பல பாகங்களுக்கும் தன் அரசியலை விரிவுபடுத்தினார். அரசாங்கத்தின் மூலம் அதற்குச் சாதகமான சூழ்நிலையினை அஷ்ரப் உருவாக்கிக் கொண்டார்.
பொதுஜன ஐக்கிய முன்னணி அமைத்துக்கொண்ட அமைச்சரவையில் அஷ்ரப் கப்பல்துறை, துறைமுகங்கள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார். முஸ்லிம் காங்கிரஸினைப் பிரதிநிதித்துவப்படுத்திய கிழக்கின் மற்றுமொரு இளம் அரசியல்வாதியான மட்டக்களப்பு மாவட்டத்தின் MLAM. ஹிஸ்புல்லாஹ் தபால், தொலைத்தொடர்பு பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அஷ்ரப் தனது அமைச்சுப் பதவியினைப் பயன்படுத்தி கிழக்கு முஸ்லிம்களின் கல்வி, அபிவிருத்தி மற்றும் அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தார். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியினையும் பெற்றார்.
இவ்வாறு இலங்கை அரசின் முக்கிய பகுதியான அரசாங்கத்தை அமைப்பதில் தீர்மானிக்கும் சக்தியாக அஷ்ரபும் அவரது கட்சியும் மாற்றமடைந்தது. இவ்வாறான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட அஷ்ரப் இலங்கை முஸ்லிம்களின் அடையாளத்தை நிறுவுவதில் 04 முக்கிய மைல் கற்களை வெளிப்படுத்தினார். அதில்,

1. முஸ்லிம் மாகாண கோரிக்கை
2. துறைமுகமும் வேலைவாய்ப்பும்
3. தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
4. சந்திரிக்காவினால் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக முன்மொழியப்பட்ட நகலைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.


முஸ்லிம் மாகாண சபை கோரிக்கையினை எடுத்தாராய வருகின்றபோது அது முதலில் நிலத் தொடர்பற்ற முஸ்லிம்களுக்கான மாகாணத்தை உருவாக்குவது தொடர்பானதாகும். இதன்மூலம் வடக்கு, கிழக்கின் பல இடங்களிலும் சிதறி வாழும் முஸ்லிம்களை நிலத் தொடர்பற்ற அடிப்படையில் ஒன்றிணைத்த முஸ்லிம் மாகாண சபையினைக் கோரியிருந்தார். இது இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தை ஒத்த கோரிக்கையாக அமைந்திருந்தது.
பின்னர் தனது கோரிக்கையினைக் கிழக்கு மாகாணத்தில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம்களுக்கான மாகாணம் எனக் கோரிய அஷ்ரப், தொடர்ந்து தென்கிழக்குப் பிராந்தியம் என அதனைச் சுருக்கிக் கொண்டார். தென்கிழக்குப் பிராந்தியத்துக்கான கோரிக்கையினை உள்ளடக்கிய சந்திரிக்கா அம்மையாரின் அரசியல் நகலானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த அரசியலமைப்பு நகலை 03.08.2000 அன்று MHM. அஷ்ரப் அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் இது மிக நீண்ட உரைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதில் மிக சுவாரஸ்யமான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
2000ஆம் ஆண்டு காலத்தில் பாராளுமன்றத்தில் இவ்வாறான உரையினை நிகழ்த்துவதற்கு சட்ட புலமையும் தலைமைசார் ஆளுமையும் பேச்சாற்றலும் கொண்ட வேறு எவரும் இருக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மை. இந்த ஆற்றலின் வெளிப்பாடு காரணமாக முழுத் தேசத்தின் மக்களும் சர்வதேச சமூகமும் அஷ்ரப் எனும் தலைவனைத் திரும்பிப் பார்த்தது.

உயங்கொட அவர்கள் குறிப்பிடும்போது, தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையானது முஸ்லிம்களை தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பகுதி எனவும் வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகம் எனவும் தீர்வு முயற்சி ஒன்றில் முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் கருதப்படத்தக்க ஒரு சூழ்நிலையினை ஏற்படுத்தியிருந்து என்றார். இச்சந்தர்ப்பத்தில் தான் அஷ்ரப்பின் வருகையும் பாராளுமன்ற உரையும் விமர்சனங்களுக்கு அப்பால் முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்தைப் பறைசாற்றிய செயன்முறையாகவே எம்மால் கருதப்பட முடிகின்றது.

தனக்குக் கிடைத்த அமைச்சுப் பதவியை வைத்துக்கொண்டு தனது சமூகத்தை ஒரு உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் எனக் கூறினார்.
இலங்கை முஸ்லிம் வரலாற்றில் பதியுதீன் மஃமூத் அவர்களைத் தொடர்ந்து தொழில் வழங்கும் புரட்சி ஒன்றை அஷ்ரப் ஏற்படுத்தியிருந்தார். சனத்தொகையில் 8% காணப்பட்ட முஸ்லிம்கள் தனது அமைச்சுக்குக் கீழ் வரும் துறைமுகங்களில் 1% கூட தொழில் வாய்ப்புக்களைப் பெறவில்லை என்பதை அறிந்து கொண்ட அஷ்ரப் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவின் அனுமதியுடன் 4,000 முஸ்லிம்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கினார். அத்துடன்; தமிழர், சிங்களவர்களுக்கும் 2,000 தொழில்களை வழங்கி ஏனைய சமூகங்களும் பயன்பெற வேண்டும் என்ற கலாசாரத்தை உருவாக்கிக் காட்டினார்.
மேலும், கிழக்கின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒலுவிலில் துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தார். இந்தத் துறைமுகத்தை வர்த்தகத் துறைமுகமாகவும் மீன்பிடித் துறைமுகமாகவும் அமைக்க முடிவு செய்ததோடு அடுத்த கட்டமாக இத்துறைமுகத்தில் பிரமாண்டமான விரிவாக்கத்தை செய்ய வேண்டும் எனவும் நினைப்புக் கொண்டிருந்தார். இதன் முதலாவது நிர்மாணப் பணிக்காக 60 ஹெக்டயர் நிலப்பரப்பையும் இரண்டாவது நிர்மாணப் பணிக்காக 105 ஹெக்டயர் நிலப்பரப்பையும் கவனத்தில் கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்தத் துறைமுகத்தின் நிலப்பரப்பில் இப்பிராந்தியத்தின் பிரமாண்டமான கைத்தொழில்சார் நலன்களைப் பெறவேண்டிய விடயங்களைத் திட்டங்களாகத் தீட்டியிருந்தார். நிர்மாணப் பணிகள் முடிவடைந்திருந்த போதிலும் இன்று இத்துறைமுகமானது பல சூழலியல் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. அஷ;ரஃபின் மறைவும் மாற்றுத் திட்டங்கள் இல்லாமையும் பலவீனப்பட்ட முஸ்லிம் அரசியலும் இந்தத் துறைமுகத்தை இயங்க விடாமல் செய்துள்ளன. இதனால் இத் துறைமுகம் எதிர்காலத்தில் மூடப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. மேலும் இதனை நிர்மாணித்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு இலங்கை அரசு கடன் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

புதிய பல்கலைக்கழக உருவாக்கத்திற்கான அரசியல் தலைமைத்துவம்

1980களின் இறுதிப்பகுதியில் உக்கிரமடைந்திருந்த இனமோதல் காரணமாக முஸ்லிம் மாணவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டதுடன் மாணவர்களும் ஆசிரியர்களும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டனர். இவர்களது எதிர்காலம் குறித்த அஷ;ரஃப்;பின் தூரநோக்குள்ள சமூக அரசியல் பார்வையில் உருவானதே இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும். முஸ்லிம் மாணவர்களைக் கல்வியியல் ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்பதில் அஷ;ரஃப் கொண்டிருந்த உறுதியே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான அடித்தளமாகும். தனக்கிருந்த அரசியல் பலத்தினைப் பயன்படுத்தி இம்முஸ்லிம் மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அம்பாறை மாவட்டத்தின் ஒலுவிலை மையமாகக் கொண்ட பல்கலைக்கழகத்தினை அமைக்க அனுமதியை பெற்றுக்கொண்டார். ஒலுவிலில் கட்டுமானப் பணிகள் முடியும் வரை அட்டாளைச்சேனையின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக் கட்டடம் ஒன்றில் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரியாக 1995.10.23இல் ஆரம்பிக்கப்பட்டது. 33 மாணவர்கள், 15 உத்தியோகத்தர்கள், கலை மற்றும் வர்த்தக முகாமைத்துவம் என 2 பீடங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகக் கல்லூரியானது சுமார் 8 மாதங்கள் முடிவடைவதற்குள்ளேயே 1996.05.15இல் ஒரு முழு தேசிய பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டமை அஷ்ரபின் அரசியல் சாணக்கியத்தின் வெற்றியைப் பறைசாற்றுகின்றது. இப்பல்கலைக்கழகம் 1998ஆம் ஆண்டு ஒலுவில் வளாகத்திற்கு இடமாற்றப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் கடமையாற்றினார்.

அரசியல், இன நெருக்கடியான காலகட்டத்தில் முஸ்லிம் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு இப்பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டிருந்தாலும் அஷ;ரப் இப்பல்கலைக்கழகம் பற்றி பல கனவுகளைக் கண்டிருந்தார். இது ஒரு இனத்துவப் பல்கலைக்கழகமாக அன்றி ஒரு தேசிய பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும், இப்பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் பட்டதாரிகளை எதிர்பார்த்து அவர்களுக்கான தொழில்கள் வெளியே காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகுமளவு அதன் கல்வி அமைய வேண்டும், எதிர்காலத்தில் இதன் பெயர் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (South Eastern University of Science and Technology) என மாற்றப்பட வேண்டும் என்பன போன்ற பல கனவுகளைக் கண்டிருந்தார். இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக பெருமளவு நேரத்தைச் செலவளித்தார்.
ஒலுவில் வளாகத்திற்கு பல்கலைக்கழகம் இடமாற்றப்பட்டதன் பின்னர் பல்வேறு விருத்திகளுக்கான அடித்தளத்தை இட்டார். அஷ்ரப் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து அதன் வளர்ச்சியினைப் பார்வையிட்டதுடன் அதனை தொடர்ந்து சம்மாந்துறையில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் 'நான் இனி மௌத்தானாலும் பரவாயில்லை. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது' எனக் கூறினார்.
அஷ்ரப்பின் கனவு நனவாகிக்கொண்டிருக்கின்றது. பேராசிரியர் எம்.எல்.ஏ.காதரின் நிர்வாகத்துடன் ஆரம்பமான இப்பல்கலைக்கழகம் உபவேந்தர்களான பேராசிரியர் ஏ.ஜி. ஹுஸைன் இஸ்மாயில் மற்றும் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயில் ஆகியோரின் காலத்திலும் அதிவேக வளர்ச்சியைக் கண்டது. இவர்களது காலத்தில் பிரயோக விஞ்ஞான பீடம், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம், பொறியியல் பீடம் போன்றன தாபிக்கப்பட்டன. தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் காலத்தில் தொழில்நுட்பப் பீடம் தாபிக்கப்பட்டது. அந்தவகையில் அஷ்ரப்; கனவு கண்ட விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கேற்ப இதன் பீடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அஷ்ரப் எதிர்பார்த்த தேசியப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் குணாம்சங்களும் இப்பல்கலைக்கழகத்தில் காணப்படுவதை அவதானிக்கலாம். முஸ்லிம் மாணவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த இப்பல்கலைக்கழகம் தற்போது தமிழ், சிங்கள மாணவர்களையும் கணிசமானளவு உள்ளடக்கி தேசிய பல்கலைக்கழகமாக மிளிர்கின்றது. அத்துடன் வெளிநாட்டு மாணவர்கள், ஆசிரியர்களை உள்ளீர்த்து சர்வதேச தரத்தினையும் பெற்றுள்ளது.
B.A., B.B.A., B.Sc., B.Sc.Eng., B.Sc.MIT போன்ற பல இளமாணிப் பட்டங்களையும் முதுமாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களையும் வழங்குகின்றது. அத்துடன் சான்றிதழ் மற்றும் டிப்ளோமா போன்ற தொழிற்கற்கைகளையும் வழங்குகின்றது. றுகுணு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம் போன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மாற வேண்டும் என்ற அஷ்ரபின் எண்ணத்திற்கேற்ப இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியும் அமைந்துள்ளது.

மூவின மாணவர்களையும் உள்ளீர்ப்பதற்காக பொது மற்றும் விஷேட கற்கை நெறிகள் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுகின்றன. தற்சமயம் 5267 உள்வாரி மாணவர்களையும் 12562 வெளிவாரி மாணவர்களையும் 211 விரிவுரையாளர்களையும் 427 போதனைசாரா உத்தியோகத்தர்களையும் 33 நிர்வாக உத்தியோகத்தர்களையும் கொண்டுள்ளது. மேலும் அஷ்ரபின் கனவைப் பறைசாற்றும் வகையில் பிரமாண்டமான நூலகத்தினைக் கொண்டுள்ள இப்பல்கலைக்கழகம் நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் DVDகள் உள்ளடங்கலாக ஏறத்தாழ 130,000 புலமைசார் ஆவணங்களைத் தன்னகத்தே கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றது. அத்துடன் பல்வேறுபட்ட வெளிநாட்டு ஆய்வுச் சஞ்சிகைகளையும் இலவசமாகப் பார்க்கக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பும் என்றுமில்லாதவாறு பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. புதிய பீடங்கள், நவீன நூலகம், மாணவர் விடுதிகள், விளையாட்டு மைதானம், சிற்றுண்டிச்சாலை, பட்டமளிப்பு விழா மண்டபம், பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதிய விடுதி நிர்மாணம் என விரிவடைந்து செல்லும் இதன் வளர்ச்சியானது முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் அஷ்ரபின் நினைவை ஆழப்பதித்துள்ளது என்றே கூறலாம்.

அஷ்ரப் எண்ணியிருந்த விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக இப்பல்கலைக்கழகம் அமைவதற்கு இங்கிருந்து வெளியாகும் பட்டதாரிகள் வெறுமனே பட்டதாரிகளாக அன்றி ஆய்வாளராகவும் வெளியேற வேண்டும். இதுதான் பல்கலைக்கழக புலமைசார் கலாசாரமாகும். இது இப்பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்றது. இந்நிலை இன்னும் முன்னேற வேண்டும். இங்கு கற்கும் மாணவர்கள் புத்தாக்க சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டியவர்களாக உள்ளனர். முஸ்லிம் சமூகத்தினதும் இலங்கை தேசத்தினதும் பிரச்சினைகள் இவ்வாய்வுகள் மூலம் வெளிக்கொணரப்பட வேண்டும். இவை பிராந்தியத்தினதும் தேசத்தினதும் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும். அப்போதுததான் அஷ்ரபின் தூரநோக்கு பூரணமாக்கப்படும்.

கடந்த காலங்களில் முன்னாள் உபவேந்தர்களின் அயராத முயற்சியினால் பல அபிவிருத்திகள் இப்பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டதைப் போன்றே தற்போதைய உபவேந்தர் பேராசிரியர். எம்.எம்.எம். நாஜிமின் காலத்திலும் இப்பல்கலைக்கழகம் நவீன பல்கலைக்கழகத்திலுள்ள குணாம்சங்களுடன் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. இதில் உபவேந்தரின் பங்களிப்பு முக்கியமானதாகும். அவற்றுள் பின்வருவனவற்றை அடையாளப்படுத்த முடியும்.
• Google Scholar, Research Gate என்பன ஒரு ஒழுங்குபடுத்தலுக்கு கொண்டுவரப்பட்டதுடன். சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள் தமது ஆய்வுகளை சமர்ப்பிக்கும் சூழல் ஏற்பட்டமை
• பல்கலைக்கழக வரலாற்றில் 4 கலாநிதிகளைக் கொண்டு தொழில்நுட்பப் பீடம் தாபிக்கப்பட்டமை.
• ISI அல்லது Clerivate> Scopus போன்றவற்றில் பதியப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள் பிரசுரிக்கப்பட்டமை. பெரும்பாலான பீடங்கள் பிரசுரித்திருந்தாலும் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் பிரசுரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
• உப வேந்தர் விருது புதுப்பொலிவு பெற்றுள்ளமை.
• செனட் விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை.
• பல்வேறு பீடங்களிலும் விரிவுரையாளர்கள் கலாநிதிப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தமை. இன்னும் சிலர் கலாநிதிப் பட்டப்படிப்பிற்கான ஆய்வை நிறைவு செய்யும் தருணத்தில் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
• பேராசிரியர்கள் உருவாக்கப்பட்டமை

பேராசிரியர்கள்: 
எம்.ஏ.எம். ரமீஸ்
எப். ஹன்ஸியா ரவூப்
ஏ.எல். ரவூப்
எம்.பி.எம். இஸ்மாயில்
ஏ. ஜௌபர்
ஏ.ஜஹ்பர்


இணைப் பேராசிரியர்கள்: 
எம்.ஐ.எம். கலீல்
எம்.எஸ்.எம். ஜலால்தீன்


இன்னும் சிலர் விரைவில் பேராசிரியர்களாக உயர்வு பெற உள்ளனர்.

• பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிரூபங்கள், பல்கலைக்கழக ஸ்தாபன சுற்றுநிரூப கடிதங்கள், பல்கலைக்கழக நிதி சுற்றுநிரூப கடிதங்கள் என்பவற்றுக்கேற்ப சட்டத்தையும் ஒழுங்கையும் முறையாகப் பின்பற்றியமை

 மாணவர்களின் வரவு 80 வீதம்

 படிமுறையூடான செயற்பாடுகள்

 நிதி உடன்படிக்கை மீறல்களுக்கெதிரான நடவடிக்கைகள்

 ஊழல்கள் வெகுவாக குறைக்கப்படல், பெரும்பாலான நியமனங்கள் முறையான வழிமுறைகளினூடாக வழங்கப்பட்டமை

இதில் ஒருவருக்கு ஒரு முக்கிய பதவி

 பரீட்சைக் கடமைகளில் நிரந்தர விரிவுரையாளர்கள் ஈடுபடல்

 பல்வேறு மட்டங்களிலுமுள்ள கல்விசார் உத்தியோகத்தர்களின் Worknorm உறுதிப்படுத்தப்பட்டமை

 பரீட்சை முடிவுகள் மூன்று மாதத்தினுள் வெளியீடு

• அதிகமான மாணவர் விருதுகளைப் பெற்றமை

 TECHNO 2K18 (பொறியியல் பீடம் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டமை)

 Spaghetti Bridge Competition (பொறியியல் பீடம் 1ம், 2ம் இடங்களைப் பெற்றுக் கொண்டமை)

 விளையாட்டு மற்றும் உடற்கல்வித் துறையில் எண்ணிலடங்கா விருதுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

 தேசியரீதியில் பல்வேறு நிகழ்வுகளில் பல சாதனைகளைப் படைத்துள்ளனர்.

• உள்ளக தர உத்தரவாத அலகு மிக வெற்றிகரமாக செயற்படல்

ü  Studnets’ Evaluation Report

ü Satff Evaluation Report

ü Peer Evaluation Report

ü Moderator’s / 2nd Examiner’s Repot

இவ்வாறு வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற இப்பல்கலைக்கழகம் சமூகத்திற்கு சேவையாற்றும்போதே அஷ;ரஃபின் கனவு நனவாகும். அண்மைக்காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கெதிரான பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறுபட்டோர் ஆய்வுகளை மேற்கொண்ட போதும், கலை கலாசார பீடத்திலிருந்து இப்பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெற்று, விரிவுரையார்களாகப் பணியாற்றுபவர்கள் Clerivate இல் பதிவு செய்யப்பட்ட சஞ்சிகைகளில் ஆய்வுக்கட்டுரைகளை பிரசுரித்துள்ளமை அஷ்ரபின் கனவை உண்மைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறு முழுக்க முழுக்க இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி, முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றம் என்ற அஷ்ரபின் கனவுகள் மற்றும் அவர் எதிர்பார்த்த தேசிய பல்கலைக்கழக அந்தஸ்த்து என்பன எட்டப்பட்டபோதும் சில அதிருப்திகளையும் இப்பல்கலைக்கழகம் வெளிப்படுத்தியுள்ளது. மூவின மாணவர்களையும் உள்ளீர்த்து தேசிய பல்கலைக்கழகமாக இது இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது தற்போது நிறைவேறியுள்ளது. இம்மூவின மாணவர்களும் நல்லிணக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதே இவரது அவா. எனினும் ஆங்காங்கே ஒரு சில புறம்பான விடயங்களும் இடம்பெற்றுள்ளன. அவ்வாறே பிரதேசவாதமும் பிரித்தெடுக்க முடியாத ஒரு அம்சமாகக் காணப்படுகின்றது. மாணவர்களை நோக்கும்போது இன, பிரதேச ரீதியாகப் பிரிந்து செயற்படுவதை நாம் அவதானிக்க முடிகின்றது. அஷ்ரப் இதனை விரும்பவில்லை. இந்நிலை மாற்றப்பட வேண்டும். அஷ்ரப் எதிர்பார்த்த நல்லிணக்கத்துடன் கூடிய தேசிய பல்கலைக்கழகமாக இது நிலைபெற வேண்டும்.
மிகக்குறுகிய காலத்திற்குள் பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டுள்ள இப்பல்கலைக்கழகம் அதன் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பிலும் கரிசனை கொள்ள வேண்டியுள்ளது. அந்தவகையில் தற்கால உலகுக்கேற்ப புதிய கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் அனைத்துப் பீடங்களின் பாடத்திட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர் - ஆசிரியர் - கல்விசாரா ஊழியர்கள் - நிர்வாக உத்தியோகத்தர்கள் என்பவர்களிடையே இணக்கப்பாட்டுடன் கூடிய உறவை ஏற்படுத்த வேண்டும். இனவாதம் மற்றும் பிரதேசவாதம் என்பன களைந்தெறியப்பட வேண்டும். அத்துடன் பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்படும் வளங்கள் மற்றும் நிதி என்பன எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக கடலரிப்பின் பாதிப்புக்களையும் வெள்ளப்பெருக்கின் தாக்கத்தையும் ஆய்வு செய்து இத்தாக்கங்களிலிருந்து பாதுகாப்பைப் பெற பொருத்தமான கட்டுமான வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவ்வாறே அஷ்ரபின் சிருஷ்டியான இப்பல்கலைக்கழகத்திற்கு பாரிய சமூகப் பொறுப்பு உண்டு. அஷ்ரபின் மறைவின் பின்னர் முஸ்லிம் அரசியல் பிளவுபட்டுக்கொண்டு செல்வதுடன் முஸ்லிம் சமூகமும் வலுவிழந்து வருகின்றது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான அரசியல் சூழலில் தீர்க்கமான, தீர்க்கதரிசனமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களும் காணப்படுகின்றன. இவ்வாறான சூழலில் அஷ்ரப் இருந்திருந்தால் எவ்வாறான முடிவை எடுத்திருப்பார், எவ்வாறு இராஜதந்திர ரீதியாக இப்பிரச்சினையை அணுகியிருப்பார் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது. இந்நிலையில் அஷ்ரபால் உருவாக்கப்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் அதன் வெளியீடான கல்விச் சமூகமும் எவ்வாறு இப்பணியை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் சமூகத்திற்கும் அரசியல் தலைமைத்துவங்களுக்கும் தெளிவுபடுத்தி, வழிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பைக் கொண்டுள்ளது. இதனை அஷ்ரபின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலம் பற்றிய சிந்தனையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
அஷ்ரப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலம் குறித்து பேசும்போது 'ஒரு காலத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றில் இல்லாத நிலைகூட தோன்றலாம். அதற்காக எமது போராட்டத்தைக் கைவிட முடியாது. எமது எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக நாம் தொடர்ந்தும் போராட வேண்டும்' என்ற உறுதியுடன் இருந்தார். தற்போது பாராளுமன்றில் அஷ்ரப் இல்லை. அவரின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. அவ்வாறே முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால சந்ததியினருக்காக அவரால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இன்றும் அவருடைய பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றது. இப்பல்கலைக்கழகம் முஸ்லிம் சமூகத்திற்காக தொடர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் அஷ;ரஃபின் சிந்தனையை மீளெழச் செய்ய முடியும் என்பதிலும் அவரது ஆளுமையை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றது என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை. 


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -