இலங்கை வாழ் இன்றைய முஸ்லிம்கள் பெரும்பான்மை சிங்கள பேரினவாதிகளுடைய கடும் போக்காளர்களின் கழுகுப்பார்வையிலிருந்து மீள முடியாமல் அவ்வப்போது நாட்டின் நலா பகுதிகளிலும் சொல்லமுடியா அளவில் பல்வேறு இன மோதல்களின் மூலம் பெரும் கஷ்ட நஷ்டங்களுக்கு மத்தியில் முகம் கொடுத்து இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இன்நிலையில் எங்களின் அரசியல் ஆட்சியின் அதிகார அடையாளங்களை அழுத்தம் கொடுத்து தெரிவிப்பதும் அதனை அடைவதற்கு முயற்ச்சிப்பதும் அதற்காக எழுத்து மூலம் நிபந்தனைகள் விதிப்பது என்பது இக்கால கட்டத்தில் எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என கேள்வி எழுப்பினார் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள்.
அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுக் கூட்டம் அன்மையில் ஹலீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலமைகளும் எதிர்கால ஜனாதிபதி தேர்தலிலும் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் விரிவாக பேசுகையில் மேற்கண்டவாறு தனது தனிப்பட்ட கருத்தை தெரிவிப்பதாக குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில் தெரிவித்ததாவது இன்று எமது அரசியல் எதிரிகள் எங்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்கள் மூலமும் முஸ்லிம் காங்;கிரஸ் கட்சிக்கு எதிராக சேறு பூசுவதற்கு முனைவதுடன் பல்வோறு குற்றச்சாட்டுகளையும் எவ்வித ஆதாரங்களுமின்றி தொடர்ந்து தெரிவித்து வருகின்றார்கள்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சி கௌரவ அமைச்சர் சஜீத் பிரமதாசாவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக எவ்வாறான கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் எழுத்திலான உடன்படிக்கைகளையும் செய்தீர்களா? எனவும் கேள்வி கேட்கின்றார்கள். நடைமுறைக்கு உண்மைதான், ஆனால் இந்நாட்டின் இன்றைய சிங்கள கடும் போக்காளர்களின் அரசியல் சூழ்நிலையில் முதலில் எமது இருப்பை நாம் தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்ச்சித்து முன்னுரிமையும் வழங்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். என்பதையும் நாம் மறந்து விட முடியாது. எங்களை இன்று இவர்கள் எல்லாம் சந்தேக கைதிகளாக பரவலாக பலரும் பார்க்கப்படும்போது ஏனைய அரசியல் அதிகார அலகுள் பற்றிய விரிவான விடயங்களையும் எமது உரிமைகளையும் உரத்த குரலில் ஓங்கி ஒலிக்க முடியுமா? அதற்கான நிபந்தனைகளையும் இன்றைய சூழ்நிலையில் வகுக்கலாமா? என்பது பற்றி எல்லாம் மிகவும் கவனமாகவும் ஆழமாகவும் யோசிக்க வேண்டியும் உள்ளது.
வடக்கை தமிழர்களும், கிழகை முஸ்லிம்களும் பிரித்து கேட்கின்றார்கள் என்ற கோசம் எமக்கு எதிராக இந்த சிங்கள பேரின வாதிகளினால் எழுப்பபட்டு வரும் இந்த காலகட்டத்தில் இவைகள்பற்றி நாங்களும் மிகவும் கவனமாக யோசித்து முடிவெடுக்கவேண்டிய நிலைமையில்தான் இன்று இருந்து கொண்டிருக்கின்றோம் என்பதையும் நாம் இலகுவில் மறந்துவிட முடியாது எனவும் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் குறிப்பிட்டார். மேற்படி கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களும் ஏனைய கட்சிப் போராளிகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்ததுடன் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ சஜீத் பிரமதாச அவர்களுக்கு எமது முழு ஆதரவை வழங்குதாக மேற்படி கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
