இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்ததன் மூலம் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்து, தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மனு மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது பொருத்தமானது எனத் தீர்மானித்த நீதியரசர்கள் குழாம், அதனை ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியன்று பரிசீலிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
தம்பர அமில தேரர் மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோரினால், இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சார்பாக சட்ட மாஅதிபர் இந்த மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதியினால் பாதுகாப்பு, சுற்றாடல் மற்றும் மகாவலி ஆகிய அமைச்சுகளை மாத்திரமே பொறுப்பு வகிக்க முடியும் என, மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை தனது விடயதானத்திற்குள் கொண்டுவந்தமை சட்டவிரோதமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை மீறியுள்ளதாகவும் தௌிவுபடுத்தியுள்ளனர்.