தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னராக வருகை தருமாறு, கட்டுநாயக்க விமான நிலைய நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சீரற்ற காலநிலை தொடர்கின்ற போதிலும், விமான நிலைய நடவடிக்கைகள் எவ்வித இடையூறுகளுமின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில், மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறும் பயணிகளை நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.
கம்பஹா, கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் பெய்யும் கடும் மழை காரணமாக வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. இதேவேளை, ஜா - எல தண்டுகம் ஓயா பெருக்கெடுத்து ஓடுவதாலும், கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டிய பல பிரதேசங்களிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாலும், இப்பிரதேசங்கள் ஊடாக விமான நிலையத்திற்கு வருகை தருபவர்கள் மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னர் வருவதால் அசெளகரியங்களைக் குறைத்துக் கொள்ள முடியும் என்றும், அத்துடன் சீரற்ற கால நிலையால் இது இம்முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.