வனஇலாகாவின் திட்டமிட்டசதியா? எனதவிசாளர் ஜெயசிறில் கேள்வி!
காரைதீவு நிருபர் சகா-பொத்துவில் பிரதேசத்திற்குட்பட்ட சங்குமண்கண்டிக்கும் கோமாரிக்குமிடையிலான பிரதேசத்தில் வனபரிபாலன இலாகா தினம்தினம் புதிதுபுதிதாக எல்லைக்கற்களை நட்டுவருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துவருகின்றனர்.
இது தொடர்பாக அங்கு விஜயம்செய்த காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் புதிய எல்லைக்கற்களை நேரடியாக பார்த்தார்.
சங்குமண்கண்டி மற்றும் கோமாரிக்கிராமங்களில் நூறுவீதம்தமிழ்மக்கள் வாழ்ந்துவருகின்றனர். நிறைய குடிமனைகள் இருக்கின்றன. இந்த இரண்டு கிராமங்களுக்கிடையிலுள்ள பிரதேசத்தை ஏன் இவ்வாறு வனபரிபாலனஇலாகா எல்லைக்கற்களை நட்டுவரவேண்டும்?
குறித்த பிரதேசம் அரசகாணியாக இருக்கலாம். அதற்காக எல்லைக்கற்கள் இட்டால் நாளை அருகிலுள்ள கனகர் கிராம மக்களின் பிரச்சனைபோன்று இங்கும் உருவாகச் சாத்தியமுண்டு.
காலாகாலமாக வாழ்ந்துவந்த கனகர்கிராமமக்கள் இன்று தமது சொந்த நிலங்களைப்பெற ஒருவருடத்திற்கும் மேலாக போராட்டம் நடாத்திவருகின்றபோதிலும் இன்னமும் கிடைக்கவில்லை.
அந்தநிலைமைதான் இப்பிரதேச மக்களும் எதிர்நோக்கவேண்டிவரும்.
எதிர்காலத்தில் வாழ இடமில்லாமல் கூடப்போகலாம்.
வனபரிபாலனஇலாகா தேடித்தேடி தமிழர்பிரதேசங்களில்தான் இவ்வாறான நிலஅபகரிப்பிற்கான வேலைகளை திட்டமிட்டுச்செய்துவருகின்றது.
மெல்லெனக்கொல்லும் வியாதிபோல படிப்படியாக இக்கற்களையிட்டு முழுத்தமிழர்பிரதேசத்தையும் மெல்லென விழுங்க சதிநாடகம் அரங்கேற்றப்படுகிறதா? என்ற அச்சம் தோன்றுகிறது.
இவற்றை தமிழ்அரசியல்வாதிகளாகிய நாம் கைகட்டி வாய்மூடி வெறுமனே மௌனியாக பார்த்துக்கொண்டிருக்கமுடியாது.
உடனடியாக தமிழர் பிரதேசங்களில் எல்லைக்கற்களிட்டு வனத்துக்குரிய பிரதேசமாக மாற்றும் செயற்பாட்டை நிறுத்தவேண்டும். இல்லையேல் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவேண்டிநேரிடும் என்றார்.

