கம்பஹா விக்கிரமாரச்சி ஆயுர்வேத நிறுவகம், மொறட்டுவை பல்கலைக் கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக் கழகம் ஆகியவற்றின் தொழில் நுட்பப் பிரிவுகளுக்காக, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்பிரகாரம், ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், கம்பஹா விக்கிரமாரச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய பண்டார ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிறுவகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
பகிடிவதைச் சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்காமை உள்ளிட்ட பல காரணங்களினால் பதவி நீக்கப்பட்ட மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்பப் பிரிவுப் பணிப்பாளருக்கு பதிலாக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த குமார் திருநாவுக்கரசு பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, யாழ். பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் நீக்கப்பட்டமையினால் யாழ். பல்கலைக் கழகத்துக்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டதாகவும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி. சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், யாழ். பல்கலைக் கழகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக, ஓய்வு பெற்ற பேராசிரியர் கதிர்காம நாதன் கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
