பொலிசாரைக்கண்டால் பிடிச்சுக்கொடுப்பேன் என்று குழந்தைகளின் பிஞ்சுமனங்களில் நஞ்சைவிதைக்காதீர்கள். பொலிசார் மக்களின்தோழன். பொதுமக்களின் பாதுகாப்பும் அவர்களின் உடமைகளின் பாதுகாப்புமே எங்கள் கடமை. எனவே பொலிசார் என்றால் பயத்தை ஊட்டவேண்டாம்.
இவ்வாறு சம்மாந்துறைபொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரி இப்னுஅசார் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேசசபையும் சம்மாந்துறைபொலிஸ்நிலையமும் இணைந்து நடாத்திய பொதுமக்கள் பொலிஸ் நல்லுறவு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டுரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கூட்டம் காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் நேற்று(17) தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.
பொலிஸ்பொறுப்பதிகாரியுடன் பொலிஸ்இன்ஸ்பெக்டர் எம்.இப்றாகிமும் வருகைதந்திருந்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
நாட்டில் உயிர்த்தஞாயிறில் இடம்பெற்ற யாராலும்ஏற்கமுடியாத குண்டுத்தாக்குதலின்பின்னர் நாட்டில் இன மொழிரீதியாகபிரித்து பாதிப்புஇடம்பெற்றது.
தமிழ்முஸ்லிம்சிங்கள மக்களிடையே விரிசல் ஏற்பட்டது.எனினும் காரைதீவு மக்கள் எந்தவேறுபாட்டையும் காட்டவில்லைஎனவே காரைதீவு மக்களுக்கு நன்றிகூறுகின்றேன். எனதுகண்ணுக்குள் உள்ளது காரைதீவு.அங்கு எந்தப்பிரச்சினையும்வராது 100வீதம் பாதுகாப்பேன்.
எமது சம்மாந்துறைப்பொலிஸ் பிரதேசம் 40கிலோமீற்றர் பிரதானவீதியைக்கொண்ட பெரும்பிரதேசமாகும். ஆக 120பொலிசாரை மாத்திரம்கொண்டு வளத்தாப்பிட்டி மஜீத்புரம் சம்மாந்துறைதொடக்கம் காரைதீவு அட்டப்பள்ளம் வரையிலான பெரும்பிரதேசங்களை உள்ளடக்கியது.
அண்மைக்காலமாக எமக்குள்ள ஒரேயொரு சவால் என்னவெனில் எமதுபிரிவுக்குட்பட்ட காரைதீவில் கொள்ளை களவு வழிப்பறி இடம்பெற்றுக்கொண்டிருப்பது.கடந்த மாதத்தில் மாத்திரம் 3இடங்களில் களவு இடம்பெற்றிருக்கிறது.
ஆனால் துரதிஸ்டவசமாக மக்கள் அவசரத்தில் தமது உடமைகளைச் சரிபார்த்துக்கொள்வதிலுள்ள அவசரத்தில் களவுக்கான தடயங்களை அழித்துவிடுகிறார்கள். அதனால் திருட்டுக்களைப்பிடிப்பதில் எமக்கு சிரமம் எதிர்நோக்கப்படுகிறது.
என்னவிருந்தாலும் அந்ததிருடர்களை கட்டாயம் பிடிப்போம். மக்களுடைய களவுபோன பொருட்களைமீட்டுக்கொடுப்போம்.
பலர் சிசிரிவி கமராக்களைப் பொருத்தியுள்ளனர். தான்மட்டும் தனித்துவாழவேண்டும் என நினைக்கிறார்கள். சமுகமின்றி யாரும் தனித்துவாழ்ந்திடமுடியாது.எனவே சிசிரிவி கமராக்களில் ஒன்றை தெருவுக்கும் பூட்டுங்கள்.
கடந்தகாலங்களில் இங்கு வழிப்பறிக்கொள்ளை நடந்தபோது அருகிலுள்ள வீட்டுக்குச்சென்று சிசிரிவி கமராக்களைப்பார்க்கக்கேட்டால் அதனைப்பார்க்கமுடியாது.அதற்குரிய அவர் இங்கில்வை என பொய்கூறிவிடுகிறார்கள்.
உண்மையில் திருடனைப்பிடிக்க பொலிசார் இவ்வாறான உதவிகளைக்கேட்கும்போது அவற்றைவழங்கமறுத்தால் சட்டப்படி குற்றமாகும். அது அவர்களது அறியாமையாகும்.
கடந்தவாரம் காரைதீவிலிருந்து உகந்தைக்கு போன குடும்பம் திரும்பிவந்துபார்த்தபோது வீட்டில் களவுஇடம்பெற்றுள்ளது. 23பவுண் தங்கநகைகளும் 38ஆயிரம் ருபா பணமும் களவுபோயுள்ளன. அதையிட்டு திவீரமாக தேடுகின்றோம்.
இங்குள்ள மதுச்சாலையை அந்தஇடத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்ற தவிசாளர் முயற்சிக்கவேண்டும்.
இரவிலோ பகலிலோ ஊருக்குள் சந்தேகமானமுறையில் யாரும் நடமாடினால் தயவுசெய்து உடனடியாக அறிவியுங்கள். இன்றுருவாகும் இளைஞர் பாதுகாப்பு விழிப்புப்படைக்கு இதுவும் ஒரு கடமையாகும்.
ஒரு நோயாளிக்கு எவ்வாறு முதலுதவி அளிக்கப்படுகின்றதோ அவ்வாறே இந்த சிவில் பாதுகாப்புப்படையினர் செயற்படவேண்டும். இரவில் சந்தேகத்திற்கிடமானவரைக்கண்டால் பிடித்துவைத்துக்கொண்டு எங்களுக்கு அறியத்தாருங்கள்.
பொலிசாருக்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை. முன்பெல்லாம் நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன. அண்மைக்காலமாக கிடைப்பதில்வை. பொதுமக்களின் ஒத்துழைப்புதேவை.என்றார்.
கூட்டத்தில் தவிசாளர் கே.ஜெயசிறில் அறங்காவலர்ஒன்றியசெயலாளர் எஸ்.நந்தேஸ்வரன் கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரும் கருத்துரைத்தனர்.
பிரதேசசபைச்செயலாளர் அ.சுந்தரகுமார் நன்றியுரையாற்றினார்.