சமுர்த்தி சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் திலகர் எம்.பி அழைப்பு
நோர்வூட் சமுர்த்தி வங்கி பிரிவுக்கு கீழ்வரும் 22 கிராம சேவகர் பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 2621 சமுர்த்தி பயனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரனின் ஏற்பாட்டில் நோர்வூட், மஸ்கெலியா பிரதேச சபைகளின் தொழிலாளர் தேசிய முன்னணி உறுப்பினர்கள் ஒழுங்கமைத்த இந்த நிகழ்வு பி.கல்யாண்குமார் தலைமையில் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் வி.புத்திரசிகாமணி, நோர்வூட் சமுரத்தி வங்கி முகாமையாளர வின்சன்ட் ஜெயபிரகாஷ் ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மலையகப் பெருந்தோட்ட சமூகம் வறுமைக்குட்பட்டது என தேசிய புள்ளிவிபரங்கள் காட்டி நின்ற போதும் தேசிய வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி திட்டமான சமுரத்தியில் அவர்கள் முறையாக உள்வாங்கப்படவில்லை. இத்தனைக்கும் 1994 ஆம் ஆண்டு காலத்திலும் 2015 முதல் மூன்று ஆண்டுகளிலும் கூட முன்பு நுவரலியா மாவட்டத்தினதும் பின்னர் கண்டி மாவட்டத்தினதும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான எஸ்.பி. திசாநாயக்கவே சமுர்த்திக்கான அமைச்சராக இருந்தார். அவர்கள் இதனை அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே முன்னெடுத்தனர். ஆனால், அம்பாறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே அமைச்சரான ஓராண்டு காலத்திற்குள் நாம் முன்பிருந்த தடைகளை அகற்றி 500 சமுர்த்தி பயனாளிகள் இருந்த நோர்வூட் வலயத்தில் 2500 பயனாளிகளை தெரிவு செய்ய முடிந்திருக்கிறது. அதற்காக அமைச்சருக்கும் பிரதமருக்கும் எமது நன்றிகளை தெரிவிக்க வேண்டும்.
சமுர்த்தி ஒரு வறுமை ஒழிப்பு நடவடிக்கை எனில் அது 25 வருட காலம் நடைமுறையில் இருப்பதும் அதன் பயனாளிகள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்வதும் வேடிக்கையானது. அப்படியாயின் இலங்கை வளர்ச்சி அடைந்துவரும் நாடு அல்ல.
வறுமை அடைந்துவரும் நாடு என்றே கொள்ளுதல் வேண்டும். எனவேதான் சமுர்த்தியை வறுமை ஒழிப்பு நிகழ்ச்சியாக மாத்திரம் கொள்ளாமல் சமூக அபிவிருத்திக்கான நிகழ்ச்சியாகவும் கொள்ளுதல் வேண்டும் என எமது அரசாங்கம் அதனை மீளமைத்துள்ளது. சமுரத்தி சான்றிதழ் பெறும் ஒருவருக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் உண்டு. அதனைக் கொண்டு அவர்கள் முன்னேற வழிகான வேண்டும். வறுமையை ஒரு தகுதியாக கொள்ளக்கூடாது. சிலர் அதனை தகுதியாக கொண்டு எதையாவது சாதித்துக் கொள்ள நினைக்கிறார்கள். வறுமை ஒரு தடை. அதனை தகர்த்தெறிய முன்வருதல் வேண்டும். பாடசாலை பருவத்தில் வல்லாரை விற்று வளர்ந்தவன் நான். வறுமையிலும் கற்றுத்தேர்ந்ததால் இன்று எந்த சவாலையும் எதிர்கொள்ளும் துணிவு இருக்கிறது.
நாம் அரசியல்வாதிகளிடமே அனைத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஐம்பது ரூபா என்னாச்சு என முகநூலில் கேள்வி எழுப்பிக்கொண்டு இருப்பதால் தீர்வு கிடைக்காது. அதனை பெற்றுக் கொடுக்கும் வழியை நாங்கள் பார்ப்போம். இந்த நாட்டில் எதுவும் இலகுவாக கிடைக்காது. பிரதேச சபை அதிகரிப்பு, பிரதேச சபை சட்டத்திருத்தம், காணி உரிமை, அதற்கான ஒப்பனை, தனிவீடு என எல்லாமே போராடி நாங்கள் வென்றதுபோல் 50 /= யும் வெல்வோம். பிரதேச செயலக அதிகரிப்பை நாங்கள் அமைச்சரவை அனுமதி பெற்றுவிட்டோம். இனி அமைப்பதுதான் வேலை. ஆனால் இன்னும் சிலர் அதனை கோரிக்கையாகவே வைத்துக்கொண்டு அலைகிறார்கள். இப்போ வந்துள்ள பேரன் தாத்தாவாகும் வரை அவர்கள் அதனை கோரிக்கையாகவே வைத்துக்கொண்டு இருப்பார்கள். நாங்கள் நோர்வூட் நகரில் புதிய பிரதேச செயலகத்துக்கு கட்டடம் அமைக்க தீர்மானித்துள்ளோம்.
ஆனால், அங்கு பிரதேச செயலாளராக நம்மவர்கள் வருவதற்கு மலையக இளம் பட்டதாரிகள் பொதுநிர்வாக பரீட்சை போன்ற போட்டி பரீட்சைகளை வெற்றி கொள்ள வேண்டும். எல்லோருக்கும் அந்த நியமனங்களை பெற்றுக் கொடுக்க முடியாது. இன்று சமுர்த்தி முகாமையாளராக இருக்கும் வின்சன்ட் ஜெயப்பிரகாஷும் நானும் சமகாலத்தில் பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள். நான் அரசியல்வாதியாகவும் அவர் அதிகாரியாகவும் இன்று ஒரு தளத்தில் சந்தித்துக் கொள்ளும்போது எமது மக்களுக்கு தேவையான பணியை ஒருங்கிணைந்து ஆற்ற முடிகிறது. இந்த நிலைமை பொது நிர்வாகத்துறையில் ஏற்பட வேண்டும். பிரதேச செயலகங்களை நாம் அரசியல் ரீதியாக பெற்றுக் கொண்டாலும் அதற்கு தேவையான பிரதேச செயலாளரை நம்மவராக நியமிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளோம்.
இப்போது பாராளுமன்ற உறுப்பினராக எனக்கு கிடைத்துள்ள சுகாதாரம், மானிட நலனோம்பு, சமூக வலூவூட்டல் துறை சார் மேற்பார்வை குழுவின் தலைவர் பதவியின் ஊடாக பெருந்தோட்ட பகுதி சுகாதார துறையினை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு ஒழுங்குகளைச் செய்வது போல சமுர்த்தி திட்டத்தில் பெருந்தோட்ட சமூகத்தை இயன்றளவு உள்வாங்க நடவடிக்கை எடுப்பேன். நாங்கள் தேவையான விடயத்தை பாராளுமன்றத்திலும் ஜனாதிபதியிடமும் பேசி தீர்க்கிறோம். கந்தப்பளை கோவில் பிரச்சினையை ஜனாதிபதியிடத்தில் பேசினோம். அவர் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க எமக்கு அனுமதி அளித்தார். எனினும் நாம் இறுக்கமான நடைமுறைகளினால் அல்லாமல் அதனை பேசி தீர்க்கவே முயல்கிறோம்.
நாங்கள் மத வேறுபாடுகள் இன்றி நுவரலியா மாவட்டத்தில் எல்லா மதஸ்தலங்களுக்கும் உதவி வழங்குகின்றோம். அந்த பிக்குவுக்கு தேவை எனில் புதிய இடம் ஒன்றில் விகாரை அமைக்க நாமும் உதவுவோம். ஆனால், இந்து மக்களின் பாரம்பரிய காவல் தெய்வ வழிபாட்டு இடத்தில் அவர் அமைக்க முயல்வதற்கே எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அவருடன் பேசி அதற்கு முடிவு காண்போம். வெறுமனே அறிக்கையிட்டு நாம் சண்டித்தனம் காட்டபோவது இல்லை. சீண்டிப் பார்க்கவேண்டாம் என அறிக்கை விட்டுவிட்ட இந்தியாவுக்கு ஓடிவிட்டால் யார்தான் உங்களை சீண்டுவார்கள். சௌமிய பவனில் ஏற்றியிருந்த கட்சிக் கொடியை கீழே இறக்கியபோது வாய்பார்தது கொண்டு இருந்தவர்கள் இப்போது முனுசாமி கோவில் கொடியை இறக்க சண்டித்தன அறிக்கை இட்டு என்ன பயன் எனவும் தெரிவித்தார்.



