பைசல் காசிம் தெரிவிப்பு
முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பற்ற நிலைமையில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு நாம் எமது அமைச்சுப் பதவிகளை ஒட்டுமொத்தமாக இராஜினாமாச் செய்வதைத் தவிர வேறு வழிஇருக்கவில்லை.நாம் எடுத்த இந்த வரலாற்றுரீதியான தீர்மானம் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டதே தவிர அரசியல்வாதிகளாக எங்களை பாதுகாப்பதற்காக அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் பாதுகாப்பற்ற நிலைமையை எதிர்நோக்கி வருகின்றனர்.குருநாகல் மற்றும் மினுவாங்கொட போன்ற இடங்களில் உள்ள முஸ்லிம்கள் இனவாதத் தாக்குதல்களால் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்தனர்.
அத்தோடு பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.அசாத் சாலி,ஹிஸ்புல்லா மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோரை பதவி நீக்கக்கோரி அத்துரலிய ரத்தின தேரர் கண்டியில் மேற்கொண்ட உண்ணாவிரதம் மிகமோசமான நிலைமையை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தவிருந்தது.
இதனால் நாங்கள் ஒன்றுகூடிப் பேசினோம்.முதலில் மூவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஏனையவர்கள்மீதும் சுமத்தப்படலாம் என்பதை உணர்ந்த நாங்கள் அதற்கு முன்பே பதவி விலகி எங்கள் அனைவர் தொடர்பிலும் விசாரணை நடத்துவதற்கு வழிவிடுவதெனத் தீர்மானித்தோம்.
அதன்படி நாம் இராஜினாமா செய்திருக்காவிட்டால் ஒருவர்மீது ஒருவராக குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்த வண்ணமே இருந்திருக்கும்.அது முஸ்லிம்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.
நாங்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்குபவர்கள் என்றால் இப்படி சுயவிசாரணைக்கு இணங்கி இருக்கமாட்டோம்.உடனடியாக எம்மீது அரசு விசாரணையை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட வேண்டும்.இதன் ஊடாக முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.-என்றார்.